Last Updated : 16 Sep, 2017 11:33 AM

 

Published : 16 Sep 2017 11:33 AM
Last Updated : 16 Sep 2017 11:33 AM

கட்டுமான நிறைவுச் சான்றிதழின் முக்கியத்துவம்

நீ

ங்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குகிறீர்கள். அதைக் கட்டி முடித்தவுடன் கட்டுநர் உங்களிடம் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்களில் முக்கியமானது ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழ்’ (Completion Certificate).

ஒரு வீடு அல்லது அடுக்ககத்துக்குத் தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படும். கட்டிடம் அந்தப் பகுதிக்கான விதிகளின்படி கட்டப்பட்டிருந்தால்தான் அந்தந்த அமைப்புகள் (மின்சார வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் போன்றவை) இவற்றுக்கு அனுமதி வழங்கும். அதற்கான அடிப்படைதான் கட்டுமான நிறைவுச் சான்றிதழ்.

கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அந்தப் பகுதியின் அரசு அதிகாரி அதைப் பார்வையிடுவார். கட்டிடத் திட்ட வரைவின்படி அது கட்டப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பார். அப்படிக் கட்டப்பட்டிருந்தால் ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழ்’ வழங்கப்படும்.

கட்டுநர்கள் சிலர் இந்த ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழைப்’ பெற வேண்டியது ஃப்ளாட்களின் உரிமையாளர்கள்தான் என்பதைப் போல நடந்து கொள்கிறார்கள் (முக்கியமாக முதலில் சமர்ப்பித்த வீட்டுத் திட்ட வரைவிலிருந்து மாறுபட்டுக் கட்டியவர்கள்). இது தவறு. பல மாநிலங்களில் (தமிழ்நாடு உட்பட) கட்டுநர்கள்தான் இந்தக் கட்டுமான நிறைவுச் சான்றிதழைப் பெற்றுத்தர வேண்டும். தனி வீடாக இருந்தால் அந்தச் சான்றிதழைப் பெறுவது அதன் உரிமையாளர்களின் பொறுப்பு.

ஒரு ஃப்ளாட்டை வாங்கும்போது அதைப் பதிவுசெய்வீர்கள். ஆனால், அந்தப் பதிவின்போது ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழ்’ பற்றி எதுவும் குறிப்பிடப்படுவதில்லை. இதைப் பயன்படுத்தி சில கட்டுநர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள்.

இந்தக் கட்டுமான நிறைவுச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டுதான் தண்ணீர், மின்சார இணைப்பு போன்ற அரசுத் துறைகளிடமிருந்து பெற வேண்டிய அடிப்படை வசதிகளைக் கட்டிடத்துக்குப் பெற்றுத் தர வேண்டியிருக்கும்.

சில சமயம் தாற்காலிகச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துப் பெறலாம். ஆனால், இது சில மாதங்களுக்கு மட்டுமே (பெரும்பாலும் ஆறு மாதங்கள்) செல்லுபடியாகும்.

கட்டுமான நிறைவுச் சான்றிதழ் பெறவில்லை என்றால் என்ன ஆகும்? ஃப்ளாட்டை உங்கள் வசம் ஒப்படைப்பது தாமதமாகும். கட்டுமான நிறைவுச் சான்றிதழ் இன்னமும் கிடைக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி கட்டுநர் குறிப்பிட்ட காலத்தில் உங்களிடம் வீட்டை ஒப்படைக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்? அப்போது நீங்களே இதற்கான அதிகாரியை அணுகலாம். இப்படித் தனியாகவும் அணுகலாம், அந்தக் கட்டிடத்தின் பிற அடுக்கக உரிமையாளர்களுடன் இணைந்தும் அணுகலாம்.

கணிசமான கட்டுநர்கள் கட்டுமான நிறைவுச் சான்றிதழைப் பெறுவதில்லை. தங்களுக்குத் தெரிந்தவர்களைக் கொண்டோ லஞ்சம் அளித்தோ வீட்டுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால், இதில் பின்னால் சிக்கல் எழும். கட்டுநர் கட்டுமான நிறைவுச் சான்றிதழை உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பிறகுதான் உரிமையாளர் அங்கே குடியேற முடியும் என்பதைப் பல மாநிலங்கள் சட்டபூர்வமாகவே ஆக்கியுள்ளன.

கட்டுமான நிறைவுச் சான்றிதழ் இல்லாமல் உங்கள் ஃப்ளாட் உங்கள் வசமானால் பிற்காலத்தில் அதை விற்பதிலோ அதை அடமானமாக வைத்துக் கடன் வாங்குவதிலோ பிரச்சினைகள் எழலாம். வருங்காலத்தில் புதிய விதிகள் அறிமுகமாகி உங்கள் வீட்டுக்கான மின்சார இணைப்பு, நீர் இணைப்பு போன்றவை துண்டிக்கப்படலாம். எனவே, இதில் கவனம் செலுத்துங்கள்.

ஒரு கட்டுமான நிறைவுச் சான்றிதழில் கீழ்க்கண்ட விவரங்களும் இருக்கும் - நிலம் அமைந்துள்ள இடத்தின் தகவல்கள், அருகிலுள்ள கட்டிடங்களிலிருந்து எவ்வளவு தொலைவில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது, கட்டிடத்தின் அனுமதிக்கப்பட்ட உயரம், கட்டிடத் திட்ட வரைவின் விவரங்கள்.

கட்டுமான நிறைவுச் சான்றிதழ் என்பது உங்கள் கட்டிடம் நீங்கள் அளித்த திட்டப்படியும் (எனவே சட்டப்படியும்) கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கான மறைமுகமான சான்றிதழும்கூட. எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x