Published : 23 Sep 2017 10:02 AM
Last Updated : 23 Sep 2017 10:02 AM

கட்டிடம் சொல்லும் கதைகள் – 2: நீதியின் ‘கோயில்’!

செ

ன்னை உயர் நீதிமன்றம், தனது நீதி பரிபாலனத்தைத் தொடங்கி 155 ஆண்டுகள் ஆகிறது. இன்று, அந்த நீதிமன்றம் இருக்கும் பாரம்பரியக் கட்டிடத்துக்கு, இந்த ஆண்டு 125 வயதாகிறது! இதற்காகச் சமீபத்தில் அங்கு விழா எடுத்தார்கள்.

நீதிமன்றங்களைக் கோயிலாகவும், நீதிபதிகளைக் கடவுளாகவும் வணங்கும் வழக்கம், இன்று படித்தவர்களிடம்கூட இருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தைக் கோயில் என்று அழைப்பது மிகவும் பொருத்தமாகவே இருக்கும். காரணம், நீதிமன்றம் இன்று இருக்கும் இடத்தில், 19-ம் நூற்றாண்டில் இரண்டு கோயில்கள் இருந்திருக்கின்றன. அவற்றை வேறு இடத்துக்கு இடம் மாற்றிவிட்டுத்தான் இங்கு நீதிமன்றத்தை எழுப்பியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள்.

இந்த நீதிமன்றம், ‘கோயிலாக’ மட்டுமல்லாமல், ஒரு காலத்தில் கலங்கரை விளக்கமாகவும் இருந்திருக்கிறது. 1894-ம் ஆண்டு, கடல் மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில், நீதிமன்றத்தின் மேல் பகுதியில் ஒரு ஸ்தூபி எழுப்பப்பட்டது. அன்றைக்கு சென்னையிலிருந்த மூன்றாவது கலங்கரை விளக்கம் இதுதான்!

கலாச்சாரங்களின் சங்கமம்

இந்தோ-சாரசெனிக் முறையில் கட்டப்பட்ட கட்டிங்களில் மிகவும் முக்கியமானது இந்த நீதிமன்றக் கட்டிடம். 1888-ம் ஆண்டு ஜே.டபிள்யூ.பிராஸிங்டன் என்பவரால் வடிவமைக்கப்பட்டு, 1892-ம் ஆண்டு ஹென்றி இர்வின் என்பவரால் கட்டி முடிக்கப்பட்டது. சென்னையில் உள்ள இந்தோ-சாரசெனிக் கட்டிடங்கள் பலவற்றைக் கட்டியதில், ஹென்றி இர்வினுக்கு மிகப்பெரிய பங்குண்டு.

இஸ்லாம், மூர், இந்து, ஐரோப்பா எனப் பல மதங்கள், கலாச்சாரங்களிலிருந்து சில அம்சங்களை, பாணிகளை எடுத்துக்கொண்டு உருவான ஒரு கட்டிடக் கலை இந்தோ-சாரசெனிக் வடிவமைப்பு. குவிந்த கூரை, அலங்காரமான கைப்பிடிச் சுவர், வளைவுகள் கொண்ட மதில்கள், பிறை வடிவிலான நுழைவு வாயில்கள், கட்டிடத்தின் உச்சியில் சிற்ப வேலைப்பாடுகள் எனப் பலவிதமான கட்டுமான அமைப்புகளைக் கொண்டது இந்தோ-சாரசெனிக்.

இந்தோ-சாரசெனிக் போல, இந்தியத்தன்மையிலிருந்து பல கூறுகளை எடுத்துக்கொண்டு, ஆங்கிலேயர்கள் பல புதிய பாணிக் கட்டிடக் கலையை அறிமுகப்படுத்தினார்கள். எனினும், இதர கலப்பின பாணிக் கட்டிடங்களிடமிருந்து இந்தோ-சாரசெனிக் தனித்து நிற்கின்றன. காரணம், தங்களின் பொறியியல் திறனைக் காட்டுவதற்காகவே இதர பாணிக் கட்டிடங்களை ஆங்கிலேயர்கள் கட்டினார்கள். ஆனால் இந்தியாவோடு தங்களுக்கிருந்த பற்றுதலை, உறவை, உரிமையைக் காட்டுவதற்காகவே இந்தோ-சாரசெனிக் கட்டிடங்கள் கட்டப்பட்டன.

கட்டிடக் கலையின் சிறப்பு

இந்தோ-சாரசெனிக் பாணிக் கட்டிடங்களில், விஸ்தீரமான அறைகள் குறிப்பிடத்தக்கவை. அதேபோல, இரண்டு கட்டிடங்களுக்கிடையேயும் பரந்த இடைவெளி இருக்கும். விசாலமான நுழைவு வாயில்கள், உயர்ந்த மதில்கள் போன்றவை ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த வகைக் கட்டிடங்களில், சுவர்கள் மிகவும் தடிமனாக இருக்கும். அதேபோல எல்லா கட்டிடங்களும் நீளமான தாழ்வாரங்களைக் கொண்டிருக்கின்றன. அன்றைக்கிருந்த ஆங்கிலேயக் கட்டிடக் கலைஞர்கள் பலரும், இந்த பாணிக் கட்டிடங்கள் கட்டுவதற்கே அதிகம் விரும்பினார்கள். காரணம், தங்களின் கலை மற்றும் கற்பனைத் திறனை வெளிப்படுத்துவதற்கு, இந்த பாணிக் கட்டிடங்கள் கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுத்தன.

கனமான சில இரும்பு உத்திரங்கள் மற்றும் அலங்கார டைல்கள் ஆகியவற்றைத் தவிர, இதர கட்டுமானப் பொருட்கள் அனைத்துமே உள்ளூரிலேயே வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இதுவே சென்னை உயர் நீதிமன்றக் கட்டிடத்தின் முக்கியமான சிறப்பம்சம். அன்றைக்கு அரசிடமிருந்த செங்கல் சூளைகளிலிருந்துதான் செங்கல்கள், சுடுமண் பொருட்கள் போன்றவை வாங்கப்பட்டிருக்கின்றன. அன்றைக்கிருந்த ‘சென்னைக் கலைப் பள்ளி’யிலிருந்த கலைஞர்கள் இந்த நீதிமன்றத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

11 அறைகள், பலவிதமான கூரை ஓவியங்கள், நிறம்பூசிய கண்ணாடிகளைக் கொண்ட கதவுகள் உள்ளிட்ட பல நகாசு வேலைப்பாடுகளைக் கொண்ட இந்த நீதிமன்றத்தை ஆரம்பத்தில் 9.45 லட்சம் ரூபாயில் கட்டி முடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் கட்டி முடித்தபோது ஆன செலவு, 12 லட்சத்து 98 ஆயிரத்து 163 ரூபாய்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் இப்போது மனுநீதிச் சோழன் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றக் கட்டிடத்தில் சின்னம் ஒன்றும் இருக்கிறது. ஒரு யானையின் இரண்டு பக்கமும் ஆந்தைகள் உள்ளன. இவை, தீர்ப்பில் உள்ள ஞானத்தையும் வலிமையையும் குறிக்கின்றன. அதிலிருக்கும் பாம்புகள், கர்மவினையைக் குறிக்கின்றன. கெட்டதிலிருந்து நன்மையை மட்டும் பிரித்தெடுத்து, அதை மட்டும் தீர்ப்பில் பயன்படுத்த வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்ட, அன்னப் பறவைகளும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அன்னப் பறவைகள் உண்மையில் உள்ளனவா..?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x