Last Updated : 17 Dec, 2016 11:56 AM

 

Published : 17 Dec 2016 11:56 AM
Last Updated : 17 Dec 2016 11:56 AM

பனிப்பாறை வீடுகள்

மத்திய லண்டனில் உள்ளவர்கள் இப்போதெல்லாம் உயரமான கட்டிடங்களை எழுப்புவதைவிட, ஆழமான கட்டிடங்களை எழுப்புவதில்தான் குறியாக இருக்கிறார்கள். மெகா அளவு பேஸ்மென்ட்கள் - அதாவது இதுபோன்ற கட்டிடங்களின் பரப்பளவு நிலத்துக்கு மேலே இருப்பதைவிட, நிலத்துக்குக் கீழே அதிகம் இருக்குமாம்.

இதுபோன்ற வீடுகளை ‘பனிப்பாறை வீடுகள்’ என்கிறார்கள். பனிப்பாறைகளைக் கடலில் காணலாம். அவற்றில் ஒரு சிறிய பகுதிதான் நீர்மட்டத்துக்கு மேலே நீட்டிக் கொண்டிருக்கும். பெரும் பகுதி நீர் மட்டத்துக்குக் கீழே இருக்கும். (பனிப்பாறை ஒன்று மோதியதைத் தொடர்ந்துதான் டைடானிக் கப்பல் மூழ்கியது).

பேஸ்மென்ட் என்பது புதிய விஷயம் அல்ல. ஒயின்களை வருடக்கணக்கில் சேமித்து வைக்க (அப்போதுதான் ‘கிக்’ அதிகம் என்கிறார்கள்!) நிலத்துக்குக் கீழே அறைகள் கட்டப்படுவது என்பது கால காலமாக நடைபெறுவதுதான்.

நிலத்துக்கு அடிப் பகுதியில் பொதுவாகக் குடியிருப்புப் பகுதிகள் எழுப்பப்படுவதில்லை. மாறாக ஜிம், சினிமா தியேட்டர், நீச்சல் குளம், பணியாட்களுக்கான குடியிருப்புகள் போன்றவை அங்கு எழுப்பப்படுகின்றன.

இவ்வளவு தளங்கள்தான் நிலத்துக்கு மேல் எழுப்பப்படலாம் என்று சட்டங்கள் இருக்கின்றன. சட்டத்தின் சந்துபொந்துகளில் நுழைவதற்கு நிலத்துக்குக் கீழே கட்டுமானங்களை அதிகப்படுத்துவது உதவுகிறது.

ஆனால் அக்கம்பக்கத்தினர் இதுபோன்ற கட்டிடங்களை எழுப்புவதற்கு எதிராக வழக்கு தொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சுமார் இரண்டு வருடங்களுக்கு - இதுபோன்ற கட்டிடங்களுக்கான கட்டுமான காலம் அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. சத்தமும் தூசியும் தவிர்க்க முடியாததாகிவிடுகின்றன. இரண்டாவது காரணம் மேலும் முக்கியமானது. இதுபோன்ற பனிப்பாறை வீடுகள் கட்டப்படும்போது அருகிலுள்ள கட்டிடங்களும் உள்வாங்கிக்கொள்ள வாய்ப்பு உண்டு.

நிலத்துக்குக் கீழே 3 அடி தளங்கள் என்றால் எப்படி இருக்கும்? 2001-ல் இது போன்ற 46 கட்டிடங்களுக்கு நகராட்சியில் அனுமதி கோரப்பட்டிருக்கின்றது. சென்ற வருடம் இதன் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்திருக்கிறது. தெருவே கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கிக்கொள்வது போல இருக்கிறது என்பது சிலரது எச்சரிக்கை மணி.

‘‘ஒரு நாள் என் மொபைலை வீட்டில் வைத்துவிட்டுச் சென்று விட்டேன். வந்து பார்த்ததில் பக்கத்து நிலத்திலுள்ள நிலத்தடி வீட்டில் வசிப்பவர் பலமுறை எனக்குக் கால் செய்திருப்பது தெரியவந்தது. கதவைத் திறக்க முடியவில்லையாம். உள்ளே மாட்டிக் கொண்டுவிட்டாராம்’’ என்கிறார் ஒரு லண்டன்வாசி. நிலப்பகுதிக்கு மேலே வசிப்பவர்களைவிட நிலப்பகுதிக்குக் கீழே வசிப்பவர்களின் கூக்குரல்கள் எளிதில் மீதிப் பேரை எட்டிவிடுவதில்லை.

இப்படி நிலத்து அடிவாரத்தில் வசிப்பவர்களை நினைத்தால் ஏதோ புதைக்கப்பட்டவர்கள் போலத் தோன்றுகிறது என்பவர்களும் உண்டு. எதிர்ப்பு வலுப்பதால் பனிப்பாறை வீடுகளின் எண்ணிக்கை குறையுமா? இவற்றிற்கான தனி சட்ட திட்டங்கள் வரையறுக்கப்படுமா? தெரியவில்லை.

ஆனால் ஒன்று, விமர்சனங்கள் எழுவதால் மட்டுமே புதிய முயற்சிகள் மடிந்துவிடாது. அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதலில் எழுப்பியபோதும் பலவித விமர்சனங்கள் எழுந்தன. ‘Attached bathroom’ என்று அறிமுகமானபோதும் எதிர்ப்புக் குரல்கள் கேட்டன. அதுபோலப் பனிப்பாறை வீடுகளிலும் வசதிகள் உண்டு என்பது காலப்போக்கில் நிரூபணமானால் அவை தொடர்ந்து எழுப்பப்படும் என்பதே உண்மை.

நம் நாட்டிலும் சில வருடங்களாக இந்தப் போக்கு வேறு வடிவில் அறிமுகமாகிவிட்டது. அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டும் பலரும் கீழ்த் தளத்தை (ground floor) கார்கள் நிறுத்துவதற்குரிய இடமாக வைக்கிறார்கள். இன்னும் சிலர் நிலத்துக்கு அடியில் கார் பார்க்கிங் அமைத்துக் கொள்கிறார்கள். இது ஆரோக்கியக் குறைவானது. குறிப்பிட்ட நிலத்தில் இவ்வளவு மாடிகள்தான் கட்டலாம் என்கிறது சட்டம். மேலே கட்டினால்தானே பிரச்னை? அதனால் நிலத்துக்குக் கீழே கட்டுகிறார்கள்! இதனால் நல்ல மண் தோண்டி எடுக்கப்படுகிறது. வீணாகிறது.

இதுபோன்ற பகுதிகளில் தொடர்ந்து தண்ணீரை வெளியேற்ற வேண்டியிருக்கிறது. நிலத்தடி பகுதியில் பகலில்கூட விளக்குகள் தேவைப்படுகின்றன. மின்சாரம் வீணடிக்கப்படுகிறது. தவிர இயற்கையாக அங்கு காற்று வெளியேற முடியாது என்பதால் நச்சுக் காற்று உள்ளுக்குள் சுழன்று வரக்கூடும். தீவிபத்து நேரிட்டால் அவ்வளவுதான்.

எனவே பனிப்பாறை வீடுகள் கட்டியே ஆக வேண்டுமென்றால் மிக அதிகக் கவனமும், மறுபரிசீலனையும் தேவைப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x