Published : 05 Apr 2014 01:00 PM
Last Updated : 05 Apr 2014 01:00 PM
இடம் வாங்கி வீடு கட்டுவது அவ்வளவு எளிய விஷயம் அல்ல. அது ஒரு சாதனையாகத்தான் பார்க்கப்படுகிறது. கஷ்டப்பட்டு சேமித்து, கடனும் வாங்கி ஒரு இடம் வாங்கப் போனால் அதில் இருக்கின்றன ஆயிரம்மாயிரம் பிரச்சினைகள். இடத்திற்குப் பத்திரம் இல்லை. பட்டாதான் இருக்கிறது என்பார்கள். இம்மாதிரி விஷயங்களில் நாம் கொஞ்சமாவது தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். பட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன என்பதைக் குறித்துப் பார்க்கலாம்.
பட்டா என்றால் என்ன?
நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது பட்டா. இதில் மாவட்டத்தின் பெயர், ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், சர்வே எண்ணும் உட்பிரிவும் குறிப்பிடப்பட்டிருக்கும். அந்நிலம் நன்செய் நிலமா அல்லது
புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.
சிட்டா என்றால் என்ன?
ஒருவருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதைக் குறிக்கும் அரசாங்கப் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா என்ற விபரமும் நிலத்திற்கான தீர்வை கட்டிய விபரமும் சிட்டாவில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அடங்கல் என்றால் என்ன?
ஊரில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண், நிலத்தின் பயன்பாடு என்ன போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT