Published : 05 Nov 2016 01:21 PM
Last Updated : 05 Nov 2016 01:21 PM
மவுலிவாக்கத்தில் 11 மாடிக் கட்டிடத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை தரைமட்டமாக்கியது. இப்போது இன்னொரு 11 மாடிக் கட்டிடத்தை மனிதர்கள் வெடி வைத்துத் தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். ஒரு காலத்தில் மிகப் பெரிய கட்டிடங்களைத் தகர்ப்பது என்பது நீண்ட காலம் பிடிக்கும் வேலையாக இருந்தது. இன்றோ சில நிமிடங்களில் கட்டிடங்கள் தரைமட்டமாகின்றன. எப்படி இது சாத்தியமாகிறது, கட்டிடத் தகர்ப்பின் தொழில்நுட்பம் என்ன?
இதற்கு முன்பும் சரி, இப்போதும் சரி கட்டிடங்களைத் தகர்க்கப் பழைய வழிமுறைகளே பின்பற்றப்பட்டுவருகின்றன. அதாவது மேல் தளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டிடங்களை இடித்துத் தரைமட்ட மாக்கும் உத்தி பின்பற்றப்படுகிறது. மனிதர்களைக் கொண்டே இந்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்த வகையில் பணியை மேற்கொள்வது கொஞ்சம் செலவு பிடிக்கும். அதிகக் காலமும் பிடிக்கும். மூன்று மாடி அடுக்குமாடியை மனிதர்களைக் கொண்டு தினமும் இடிக்க ஆரம்பித்தால்கூட குறைந்தபட்சம் ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிடும். பெரிய கட்டிடம் என்றால் இன்னும் சில மாதங்கள் பிடிக்கும்.
உலகில் பல இடங்களிலும் கட்டிடங்களைத் தரைமட்டமாக்க இந்த முறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. நீண்ட தோண்டு பொறி இயந்திரம் என்றழைக்கப்படும் ‘லாங் எக்ஸ்கா வேடர்’ கொண்டும் கட்டிடங்களை இடிக்கும் இயந்திரம் வந்த பிறகு கட்டிடம் இடிக்கும் பணி கொஞ்சம் எளிதானது. இன்று பெரும்பாலான இடங்களில் இந்த இயந்திரத்தைக் கொண்டே கட்டிடத்தை இடிக்கிறார்கள். ஒரு கட்டிடத்தை இடித்துவிட்டுப் புதிய கட்டிடங்களைக் கட்டும் கட்டுமான நிறுவனங்கள் இந்த முறையிலேயே கட்டிடங்களை இடிக்கின்றனர். இன்று தொழில் நுட்பங்கள் வளர்ந்துவிட்டதால், சிறிய கட்டிடங்களைத் தகர்க்கும் பணிகளை மட்டும் மனிதர்களைக் கொண்டு செய்கிறார்கள். கொஞ்சம் பெரிய கட்டிடங்கள் என்றால் எக்ஸ்கவேடர் இயந்திரங்களைக் கொண்டும் கட்டிடங்களை இடிக்கிறார்கள். ஆனால் பல்லடுக்குக் கட்டிடங்கள், ஆலயங்கள், பாலங்கள் ஆகியவற்றைத் தரைமட்டமாக்க வெடியை வைத்து அந்தக் கட்டிடத்துக்குள்ளாகவே தகர்க்கும் தொழில்நுட்பத்தையே உலகில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இந்தியாவில் வெடி வைத்துக் கட்டிடங்களைத் தகர்க்கும் தொழில் நுட்பத்துக்குச் சுலபத்தில் அனுமதி வழங்குவதில்லை. இதில் ஆபத்து அதிகம். வெடி வைக்கும் தொழில்நுட்பத்தில் சிறிது சிக்கல் ஏற்பட்டாலும் அருகில் உள்ள வீடுகள் அல்லது கட்டிடங்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுவிடும். கட்டிடக் குப்பை குவியல்கள் அக்கம்பக்கத்தில் சிதறி, பல பிரச்சினைகளுக்கு வித்திட்டுவிடும். எனவே பெரும்பாலும் வெடி வைத்துக் கட்டிடங்களைத் தகர்க்க அனுமதி பெறுவது என்பது பெரிய வேலை. மவுலிவாக்கத்தில் பல்லடுக்கு மாடிக் கட்டிடத்தை இடிக்க மாவட்ட நிர்வாகம் வெடியை வைத்துத் தகர்க்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. இதற்காகச் செய்யப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலிருந்து கட்டிடங்களை வெடி வைத்துத் தகர்க்கும் தொழில்நுட்பம் எவ்வளவு அபாயமுள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
கட்டிடங்களை இடிக்கும் பல நிறுவனங்கள் இன்று ‘இம்போல்சன்’ தொழில்நுட்பம் எனப்படும் உள்வெடிப்பு வசதியை செய்துகொடுக்கின்றன. மவுலிவாக்கம் கட்டிடமும் இந்த முறையில்தான் இடிக்கப்பட்டது. உலகில் உள்ள பெரும்பாலான கட்டிடங்கள் இந்த முறையில்தான் இடிக்கப்படுகின்றன. இது உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்ற தொழில்நுட்பமாகவும் உள்ளது. கட்டுமானத்தில் எங்கே வெடிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதை ஆராய்ந்து, அந்த இடத்தில் துளையிட்டு வெடி மருந்துகளை நிரப்பி ரிலே மூலம் வெடிமருந்துகள் இணைக்கப்படும். கட்டிடம் முழுவதும் ஒரே சமயத்தில் அதிர்வை ரிமோட் மூலம் ஏற்படுத்தி உள்வெடிப்பை ஏற்படுத்துவார்கள். இந்த முறையில் மொத்தக் கட்டுமானமும் அந்தக் கட்டிடம் அமைந்த பகுதிக்குள்ளாகவே சரிந்து குவியும். அக்கம்பக்கத்தில் உள்ள கட்டிடங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
1990-களில் தொடங்கியது இந்தத் தொழில்நுட்பம். இன்று உலகெங்கும் பிரம்மாண்டக் கட்டிடங்களை நொடிப் பொழுதில் தரைமட்டமாக்க இந்தத் தொழில்நுட்பமே பயன்படுகிறது. இந்தியாவில் மும்பையில் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பல பல்லடுக்கு மாடிக் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இந்தத் தொழில்நுட்பம் மூலம் தகர்ப்பட்ட முதல் கட்டிடம் மவுலிவாக்கம் 11 மாடிக் கட்டிடம்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT