Published : 01 Oct 2016 01:11 PM
Last Updated : 01 Oct 2016 01:11 PM
நாங்கள் சகோதர, சகோதரிகள் ஐவர். எனக்கு மூத்தது இரு ஆண்கள், இரு பெண்கள். இந்நிலையில் எங்கள் தாத்தாவின் சொத்தை என் தந்தை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார். இப்போது அவர் அந்தச் சொத்தை என் அண்ணன் மனைவிக்கு ஜீவனாம்சமாக எழுதிக் கொடுத்துள்ளார். அந்தச் சொத்தில் எனக்குப் பங்குண்டா?
– என்.விஜயலட்சுமி, மதுரை
அந்தச் சொத்து உங்கள் தாத்தாவுக்குப் பூர்வீகமாகக் கிடைக்கப்பெற்ற சொத்தா, அல்லது அவரது சுய சம்பாத்திய பணத்தைக் கொண்டு கிரயம் பெறப்பட்ட சொத்தா என்கிற விபரமும், உங்கள் தாத்தா அந்தச் சொத்தைப் பொருத்து எந்த ஒரு ஏற்பாடும் செய்து வைத்துவிட்டுக் காலமானாரா என்கிற விபரமும் தாங்கள் தெரிவிக்கவில்லை. உங்கள் தந்தை எவ்வாறு அந்தச் சொத்தை தனது பெயருக்கு மாற்றிக்கொண்டார் என்கிற விபரமும் தாங்கள் தெரிவிக்கவில்லை. உங்கள் தந்தை எந்த ஆவணம் மூலம் உங்கள் அண்ணன் மனைவிக்கு ஜீவனாம்சமாக அந்தச் சொத்தை எழுதிக்கொடுத்துள்ளார் என்கிற விபரமும் நீங்கள் தெரிவிக்கவில்லை. உங்கள் தாத்தாவுக்குப் பூர்வீகச் சொத்தாகவோ, அல்லது சுயசம்பாத்திய சொத்தாக இருந்து எந்த ஒரு ஏற்பாடும் செய்து வைக்காமல் காலமாகியிருந்தாலோ, உங்கள் தாத்தாவின் வழித்தோன்றல்கள் அனைவருக்கும் அந்தச் சொத்தில் சட்டப்படி பங்கு உண்டு. ஆகவே உங்களுக்கும் அந்தச் சொத்தில் பங்கு உண்டு. உங்கள் தந்தை உங்கள் அண்ணன் மனைவிக்கு ஜீவனாம்சமாக எழுதிக்கொடுத்தது செல்லாது.
என் தந்தை சுய சம்பாத்தியத்தில் வாங்கிய 1200 சதுர அடி நிலம் உள்ளது. அந்த நிலத்தில் இரு வீடுகளும் உள்ளன. எனக்கு மூத்த சகோதரிகள் இருவர். சகோதரிகளுக்கு 1981-க்கு முன்பு திருமணம் ஆகிவிட்டது. என் தந்தை 1998-ல் காலமாகிவிட்டார். சகோதரிகளுக்குச் சொத்துக்குப் பதிலாக அவர்கள் கேட்டபடி நகைகள் கொடுக்கப்பட்டன. இதுவரை நானும் என் தம்பியும் சொத்தைப் பாகப் பிரிவினை செய்யவில்லை.
இப்போது எனது சகோதரிகள் எங்களுக்கும் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். சட்டப்படி அவர்களுக்கு உரிமை உள்ளதா? தமிழ்நாடு அரசின் 1998 பெண்கள் சொத்துரிமைச் சட்டப்படியும், 2005 மத்திய அரசு/உச்சநீதிமன்றம் உத்தரவுப்படியும் ஹிந்து சொத்துரிமை சட்டத்திருத்தத்தின்படியும் உரிமையில்லையென்பதாகப் படித்த ஞாபகம்.
- செல்வராஜூ, சேலம்
உங்கள் தந்தை அவரது சொத்தைப் பொருத்து ஏதாவது ஏற்பாடு செய்து வைத்துவிட்டு காலமானாரா என்கிற விபரம் நீங்கள் தெரிவிக்கவில்லை. உங்கள் தந்தை எந்த ஒரு ஏற்பாடும் செய்து வைக்கவில்லை என்று வைத்துக்கொண்டால் உங்கள் தந்தையின் வாரிசுகள் அனைவருக்கும் (திருமணமான உங்கள் சகோதரிகள் உட்பட) அந்தச் சொத்தில் பங்கு உண்டு. உங்கள் சகோதரிகள் சொத்தில் பங்கிற்குப் பதிலாக நகைகள் கேட்டதற்கும், அவற்றை உங்கள் தந்தை கொடுத்ததற்கும் சாட்சி மற்றும் சாட்சியம் இருக்குமானால், உங்கள் சகோதரிகளுக்கு அந்தச் சொத்தில் பங்கு கேட்கச் சட்டப்படி உரிமை இல்லை. அவ்வாறு சாட்சியோ மற்றும் சாட்சியமோ இல்லையென்றால் உங்கள் சகோதரிகளுக்கு அந்தச் சொத்தில் பங்கு கேட்கச் சட்டப்படி உரிமை உண்டு.
2000-ல் எனக்குத் திருமணம் ஆனது முதல் என் மனைவி கையில்தான் வருமானம் முழுவதையும் கொடுத்துவந்தேன். ஒரு பெண் குழந்தையும் உண்டு. 2009 முதல் ஐந்தாண்டுகள் வெளிநாட்டில் பணிசெய்து நான் அனுப்பிய பணம், நகைக்கு மட்டுமே என்னிடம் ஆதாரம் உள்ளது. தற்போது என் உடல் நிலை சரியில்லாமல் போனதால் பிறந்த வீட்டார் தூண்டுதலால் என்னை அவமானப்படுத்தி விரட்டி விட்டார் என் மனைவி. அவரிடமிருந்து என் வருமானத்தில் அவர் பெயரில் வாங்கிய சொத்துகளை எப்படித் திரும்பப் பெறுவது?
- மோகன்தாஸ் முருகையன்
நீங்கள் வெளிநாட்டில் பணிசெய்து சம்பாதித்த பணம் மற்றும் நகைககளை உங்கள் மனைவிக்கு அனுப்பியதற்கான ஆதாரங்களை வைத்துக்கொண்டு தகுந்த உரிமையியல் அல்லது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து உங்கள் வருமானத்தைக்கொண்டு உங்கள் மனைவி பெயரில் வாங்கப்பட்டுள்ள சொத்துகளை திரும்பப் பெறச் சட்டத்தில் இடமுண்டு.
எனது தாய்வழிப் பாட்டியின் பெயரில் ஒரு வீடு உள்ளது. பாட்டிக்கு ஒரே வாரிசு எனது தாய் மட்டும்தான். எனது பாட்டி இறந்து 25 வருடங்கள் ஆகின்றன. எனது அம்மா இறந்து 10 வருடங்கள் ஆகின்றன. எனது அம்மாவுக்கு நான் உட்பட இரு மகள்கள், ஒரு மகன். இருபது வருடங்களுக்கு மேலாக எனது பாட்டியின் பெயரில் உள்ள வீட்டை எனது தம்பி மட்டும் வைத்துக்கொண்டு வீட்டு வாடகையை வாங்கி அனுபவித்து வருகிறார். என்னையும் எனது தங்கையையும் உள்ளே விடுவதில்லை.
அதற்கு அவர் சொல்லும் காரணம் எங்களது தந்தை ஒரு வெள்ளைப் பேப்பரில் அவர் கைப்பட எங்களது பாட்டியின் வீட்டை எனது தம்பி எடுத்துக் கொள்ளலாம் என எழுதிக் கொடுத்து இருப்பதாகச் சொல்கிறார். எனது தந்தையும் இப்போது உயிருடன் இல்லை. எனது பாட்டியின் வீட்டை ஒருவர் மட்டும் அனுபவிக்கச் சட்டபூர்வ உரிமை உள்ளதா?
- எஸ்.லெட்சுமி, காரைக்குடி
உங்கள் பாட்டி சுய சம்பாத்திய பணத்தில் அந்தச் சொத்தினை கிரயம் பெற்றாரா அல்லது அந்தச் சொத்து அவருக்குப் பூர்வீகமாகக் கிடைக்கப்பெற்றதா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. உங்கள் பாட்டிக்குப் பூர்வீகமாகக் கிடைக்கப்பெற்ற சொத்தாகவோ அல்லது உங்கள் பாட்டி சுயசம்பாத்திய பணத்தில் கிரயம் பெற்று அந்தச் சொத்தினைப் பொருத்து எந்த ஒரு ஏற்பாடும் செய்யாமல் காலமாகியிருந்தாலோ, அந்தச் சொத்தில் தற்போது நீங்கள், உங்கள் தம்பி மற்றும் உங்கள் தங்கை ஆகிய மூவருக்குமே சமமான பங்கு உண்டு.
உங்கள் தந்தை உங்கள் பாட்டியின் சொத்தினை உங்கள் தம்பி எடுத்துக்கொள்ளும் வகையில் வெள்ளைப் பேப்பரில் எழுதிக்கொடுத்துள்ளதை வைத்துக்கொண்டு உங்கள் தம்பி ஒருவர் மட்டுமே அந்தச் சொத்தினை அனுபவிக்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ சட்டத்தில் இடமில்லை.
எனக்கு இப்போது வயது 18. பதினாறு வருடங்களுக்கு முன்பு என் தந்தையின் குடிப்பழக்கத்தால் என் தாயும் நானும் என் தந்தையின் வீட்டிலிருந்து வெளியேறி, என் தாய்வழிப் பாட்டனர் வீட்டில் வசித்துவருகிறோம். இந்நிலையில் தஞ்சையில் என் தந்தையின் வழிப் பூர்வீக வீடு ஒன்று இருந்தது. அதை என் தாயிடமும் என்னிடமும் கலந்துகொள்ளாமல் எனது தந்தையும் அவருடைய இரு சகோதரிகளும் பாகப்பிரிவினை செய்துகொண்டார்கள். என் தந்தையின் இளைய சகோதரி மொத்த பங்குகளையும் விலைகொடுத்து வாங்கி, பழைய வீட்டை இடித்துப் புது வீடு கட்டிக் கொண்டார். இந்நிலையில் புதிதாகக் கட்டப்பட்ட அந்த வீட்டில் நான் சொந்தம் கொண்டாட முடியுமா?
- எம்.யுவராஜகிருஷ்ணன், பெரியகுளம்
உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் மற்ற வாரிசுதாரர்களுக்கும் கூட்டாக உரிமை உள்ள பூர்வீக சொத்தினை பொருத்து, உங்களை சேர்த்துக்கொள்ளாமல் உங்கள் தந்தையும் அவரது இரு சகோதரிகளும் செய்துகொண்ட பாகப்பிரிவினை பத்திரம் சட்டப்படி செல்லாது. அந்தச் சொத்தினைப் பொருத்து உங்களுக்கு உரிய பங்கினைப் பெற சட்டப்படி உரிமை உண்டு. அந்தச் சொத்து என்பது அடிமனையினையும், அதன் மீது கட்டப்பட்டிருந்த பழைய வீட்டினை மட்டுமே குறிக்கும். பழைய வீடு இடிக்கப்பட்டு விட்டதால், அடிமனையில் மட்டும் பங்கு கேட்க உங்களுக்கு உரிமை உண்டு. அந்த அடிமனையின் மீது உங்கள் தந்தையின் சகோதரி (அதாவது உங்கள் அத்தை) கட்டியுள்ள புதிய வீட்டில் பங்கு கேட்க சட்டப்படி உங்களுக்கு உரிமையில்லை.
வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார். அஞ்சலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்), கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002 கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT