Published : 28 May 2016 11:44 AM
Last Updated : 28 May 2016 11:44 AM
தமிழகத்தின் 15வது சட்டமன்றத் தேர்தல் முடிந்து அதே அரசு பதவியேற்றுள்ளது. முந்தைய அதிமுக அரசே மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறது; தன் பணியைத் தொடங்கியிருக்கிறது. இந்த அரசு, ரியல் எஸ்டேட் துறைக்குச் சாதகமான திட்டங்களை அறிவிக்கும் என்பது அத்துறைசார் நிபுணர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரை கடந்த இரு ஆண்டுகள் தேக்கமான காலகட்டம் எனலாம். முந்தைய பத்தாண்டுகளாக ரியல் எஸ்டேட் அதிவேக ஏற்றம் கண்டது. ஆனால் இரண்டாண்டுகளாக மணல் தட்டுப்பாடு, சிமெண்ட் விலையேற்றம், வழிகாட்டி மதிப்பு உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் ரியல் எஸ்டேட் துறை பின்னடைவைச் சந்தித்தது.
வழிகாட்டி மதிப்பு உயர்வுதான் நிலப் பரிவர்த்தனைகளைக் குறைத்தது எனச் சொல்லப்படுகிறது. நிலம் வாங்குவது குறைந்ததால் அதன் தொடர்புடைய கட்டுமானத் துறையும் சரிவடைந்தது. அதாவது நில வழிகாட்டி மதிப்பும் நிலத்தின் உண்மையான மதிப்பும் கிட்டதட்ட ஒன்றாக ஆனது.
நிலம் வாங்குவது குறைந்தபோதும், நிலமதிப்பு இறங்கவில்லை. அதே நிலையிலேயே இருந்தது. சாமானியர்கள் நிலம் வாங்குவது குறைந்து போனது. இதற்கிடையில் தென் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில், வழிகாட்டி மதிப்பு 20 சதவீதம்வரை மீண்டும் உயர்த்தப்பட்டது.
அரசு வழிகாட்டி மதிப்பால் ரியல் எஸ்டேட் வளர்ச்சி பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது. நில மதிப்பைக் குறைக்கக் கோரிக்கைகள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. மக்கள், கட்டுநர் சங்கப் பிரதிநிதிகள், ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை நியமித்து அவர்கள் வழிகாட்டுதலின் அடிப்படையில் வழிகாட்டி மதிப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன.
மேலும் கட்டுமானப் பொருட்களின் விலையே நிலையில்லாமல் ஏற்ற இறக்கங்களுக்கிடையில் தள்ளாடிக் கொண்டுள்ளது. சிமெண்ட் விலையின் தொடர்ந்த ஏறுமுகத்தால் கட்டுநர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதம் அளித்த தொகைக்குள் வீடு கட்டிக் கொடுக்க முடியாமல் திணறினர்.
கட்டுமானத்தின் முக்கியமான கட்டுமான பொருளான மணலுக்கும் தட்டுப்பாடு இருந்தது. ஆனால் மணல் விநியோகம் இப்போது சீரடைந்துள்ளதாகச் சொல்கிறார் ஐடியல் கன்ஸ்ட்ரக்ஷனின் தலைவர் சிறில் கிறிஸ்துராஜ்.
மேலும் “அரசு வழிகாட்டி மதிப்பு கடந்த ஆட்சியால் உயர்த்தப்பட்டது. இப்போது சந்தை மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில் இப்போது வழிகாட்டி மதிப்பை ஒழுங்குசெய்ய வேண்டும்” என எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார் அவர்.
இது ஒரு பக்கம் என்றால் கட்டுமானத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவதில் அரசுத் துறைகள் காட்டும் சுணக்கமும் கட்டுமானத் துறையின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
கட்டுமானத் திட்டங்களுக்கான ஒப்புதலுக்காக கட்டுமான நிறுவனங்கள் இரு ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்தியக் கட்டுமானச் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் இசக்கி, “கட்டுமானத் திட்டங்களுக்கு அனுமதி அளிப்பதில் ஒரு வரையறையை ஏற்படுத்த வேண்டும். கட்டுமானத் திட்டத்துக்கான விண்ணப்பம் அளிக்கப்பட்டு ஆறு மாதத்துக்குள் அனுமதி அளிக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்” எனச் சொல்கிறார்.
இவை மட்டுமல்லாது புதிய அரசு ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள சென்னை நகரின் கட்டமைப்பை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் அக்ஷயா ஹோம்ஸ் நிறுவனர் சிட்டிபாபு.
“புதிய முதலீட்டுக்குத் தகுந்தாற்போல் நகரத்தை மேம்படுத்த வேண்டும். இயற்கையாக வளம் உள்ள நகரம் சென்னை. ஆனால் சமீபகாலமாக புதிய முதலீடுகள் தென்னிந்தியாவின் மற்ற நகரங்களுக்குப் போய்விடுவதைப் பார்க்க முடிகிறது.
முக்கியமாக ஐடி கொள்கையை அரசு மாற்றியமைக்க வேண்டியது அவசியம். இதையெல்லாம் புதிய அரசு செய்ய வேண்டும். அதே அரசு பதவியேற்றிருப்பதால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்” என்கிறார் அவர்.
ரியல் எஸ்டேட் துறை, சவால்களை எதிர்கொள்ள தமிழக அரசு ஒரு கைகொடுக்க வேண்டும் என்பது அத்துறை சார்ந்து இயங்குபவர்களின் எதிர்பார்ப்பு.
வழிகாட்டி மதிப்பு குறைப்பு, மணல் விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல், கட்டுமானத் திட்டத்துக்கான அனுமதியில் வேகம் ஆகியவை ரியல் எஸ்டேட் துறையின் உடனடி எதிர்பார்ப்பு. இவை நிறைவேறினால் ரியல் எஸ்டேட் தேக்கத்திலிருந்து மீளும் என நம்பலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT