Published : 28 May 2016 12:24 PM
Last Updated : 28 May 2016 12:24 PM
புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கிய 15-வது சட்டப்பேரவை கூட்டத் தொடரின் முதல் கூட்டத்தில் உறுப்பினர்கள் பதவியேற்றுவிட்டார்கள். அந்தக் கால மன்னர்களைப் போல தமிழக அரசியல்வாதிகளும் கோட்டையில் இருந்தே ஆட்சி புரிந்துவருகிறார்கள். அந்த வகையில் சட்டப்பேரவை கூட்டம் என்றவுடன், எப்போதும் நம் நினைவுக்கு வருவது புனித ஜார்ஜ் கோட்டைதான்.
ஆனால், தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர்கள் புனித ஜார்ஜ் கோட்டை சட்டப்பேரவைக் கூடம் மட்டுமல்லாமல், மேலும் ஆறு இடங்களில் நடைபெற்றுள்ளன. அந்த இடங்களைப் பற்றிக் கேள்விப்பட்டால் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால், 'எப்போதுமே நிஜ வரலாற்றுக்கு' பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதால், மேற்கண்ட இடங்கள் பத்தோடு பதினொன்றாக மாறிவிட்டது காலத்தின் கோலம்.
செனட் இல்லத்தின் பெருமை
15-வது சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற அ.தி.மு.க., சென்னைப் பல்கலைக்கழக செனட் இல்லத்தில்தான் பதவியேற்றது. இந்த செனட் இல்லத்தில் பதவியேற்பது ஒரு வகையில் முக்கியமானது. ஏனென்றால், மதராஸ் மாகாணத்தின் முதல் சட்டப்பேரவைக் (கீழவை) கூட்டம் 1937-ல் இங்குதான் நடைபெற்றது.
முன்னோடிக் கோட்டை
தமிழகச் சட்டப்பேரவை வரலாற்றில், கூட்டத் தொடர் மிக அதிகமாக நடைபெற்ற வளாகம் என்று இரண்டு வளாகங்களைச் சொல்லலாம். முதலாவது எல்லோரும் நன்கு அறிந்த புனித ஜார்ஜ் கோட்டை. மற்றொன்று ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம்.
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கவுன்சில் அறையில் 1921 முதல் 1937 வரை மதராஸ் மாகாண சட்ட மேலவைக் கூட்டம் நடைபெற்றது. சட்ட மேலவையே தமிழகச் சட்டப்பேரவைக்கு முன்னோடி.
சினிமா மண்டபம்
ஓமந்தூரார் வளாகத்தின் மூன்று வெவ்வேறு கட்டிடங்களில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளது. இதில் பாரம்பரியமான கட்டிடம் ராஜாஜி மண்டபம் என்ற பெயர் கொண்ட ஆங்கிலேயர் காலத்திலிருந்து புகழ்பெற்ற விருந்து மண்டபம் (Banquet Hall). இந்த மண்டபத்தைப் பல தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம்.
சென்னைப் பல்கலைக்கழக செனட் இல்லத்துக்கு அடுத்தபடியாக 1938-ல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இங்கேதான் நகர்ந்தது. அண்ணா, எம்.ஜி.ஆர். இறந்தபோது இந்த மண்டபத்தில்தான் அவர்களுடைய சடலம் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருந்தது. 2010-ல் தி.மு.க. ஆட்சியில் புதிதாகக் கட்டப்பட்ட சட்டப்பேரவைக் கட்டிடத்துக்காக ஆங்கிலேயர் கால ஆளுநர் மாளிகை (கவர்மென்ட் ஹவுஸ்) போன்றவை இடிக்கப்பட்டுவிட்டாலும், ராஜாஜி மண்டபம் மட்டும் தப்பியது. இப்போது தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டு வைக்கப்பட்டு, எதற்கும் பயன்படாமல் இந்த இல்லம் உள்ளது அவலம்தான்.
முதல் தனிக் கட்டிடம்
நாடு விடுதலை பெறுவதற்கு முன் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள கவுன்சில் அறையில் (கவுன்சில் சேம்பர்ஸ்) பேரவைக் கூட்டம் நடைபெற்று வந்தது. ஆனால், விடுதலைக்குப் பிறகு சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 375 ஆன பின், கவுன்சில் அறைகளில் கூட்டத்தை நடத்த முடியவில்லை. ஏனென்றால் அங்கு 260 பேரே உட்கார முடியும். அதனால் ஓமந்தூரார் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்துக்கு 1952-ல் சட்டப்பேரவைக் கூட்டம் இடம்பெயர்ந்தது. அந்த கட்டிடம்தான் பின்னர் ‘கலைவாணர் அரங்கமா’க மாறியது.
இப்போது நாம் பார்க்கும் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் அரங்கம் மூன்றாவது கட்டிடம். 1974-ல் தி.மு.க. ஆட்சி காலத்தில் இடிக்கப்பட்டு இரண்டாவது முறையாக புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. அப்போதுதான் கலைவாணர் அரங்கம் என்ற பெயரும் சூட்டப்பட்டது. பெரிய கூட்டங்கள், அரசு விழாக்கள் நடக்கும் இடம் அது என்றே பெரும்பாலோர் நம்புகிறார்கள். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்த கட்டிடம் இப்போது அங்கே இல்லாவிட்டாலும், அந்த இடத்தில் கூட்டம் நடந்ததென்னவோ வரலாறு.
நாம் அறிந்த பேரவை
மொழிவாரியாக மாநிலங்கள் மறுசீரமைப்பு, ஆந்திர மாநில உருவாக்கம் போன்ற நிகழ்வுகளால் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 205 ஆகக் குறைந்தது. அதனால் சட்டப்பேரவை கூட்டத் தொடர் மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு 1957-ல் இடம்பெயர்ந்தது. அப்போதுதான் முதன்முதலாக ‘சட்டப்பேரவைகூட’த்தில் பேரவைக் கூட்டம் நடைபெற ஆரம்பித்தது. சில இடைவெளிகளுடன் இன்றுவரை அந்த இடமே தொடர்கிறது.
ஊட்டியிலும் கூடிய பேரவை
சென்னையைத் தவிர மற்றொரு ஊரில் ஒரே ஒரு முறை தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றிருக்கிறது. அந்த இடம் ஊட்டி எனப்படும் உதகமண்டலம். ஆங்கிலேயர் காலத்தில் கோடை வெப்பத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் ஆங்கிலேய ஆளுநர்கள் கோடைக் காலத் தலைநகரம் என்று ஊட்டிக்கு இடம்பெயர்வது வழக்கம். இப்போதும் ஊட்டியில் ஒரு ராஜ்பவன் உள்ளது.
அதேபோல ஊட்டியில் உள்ள அரன்மொர் அரண்மனையில் தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் ஒரு பகுதியாக 1959 ஏப்ரல் 20-30 நாட்களில் மட்டும் நடைபெற்றது. இந்த அரண்மனை, ஜோத்பூர் மகாராஜா வம்சத்தினரால் கட்டப்பட்டது. தற்போது தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையால் பராமரிக்கப்படும் 'தமிழக விருந்தினர் இல்ல'மாக உள்ளது. இந்தக் கட்டிடத்தைப் பல இந்தி, தமிழ்த் திரைப்படங்களில் பார்த்திருக்கலாம்.
அதற்குப் பிறகு பழையபடி புனித ஜார்ஜ் கோட்டைக்குத் திரும்பிய தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் மிக நீண்ட காலத்துக்கு தற்போது பேரவைக் கூட்டம் நடைபெறும் ‘சட்டப்பேரவைக் கூடத்தி‘லேயே தொடர்ந்து நடைபெற்றது, ஒரேயொரு விதிவிலக்கைத் தவிர.
நவீனக் கட்டிடம்
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவைக்கு புதிய கட்டிடம் கட்ட ராணி மேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக வளாகம் போன்ற இடங்கள் பரிசீலிக்கப்பட்டாலும், புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. அடுத்து வந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஓமந்தூரார் அரசுத் தோட்ட வளாகத்தில் புதிய சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும் 2010-ல் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டன. அந்த ஆட்சிக் காலத்தில் ஓராண்டுக்கு மேல் கூட்டத் தொடர் அங்கே நடைபெறவும் செய்தது.
ஆனால், 2011-ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் பழையபடி புனித ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டப்பேரவைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற ஆரம்பித்தது. தமிழ் சினிமாவைப் போல், தமிழக அரசியலிலும் ராசி, சென்டிமென்ட் போன்றவை அதிகம் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அந்த வகையில் எந்தக் கட்சியின் ஆட்சி என்றாலும், புனித ஜார்ஜ் கோட்டை எப்போதும் நம்பிக்கை இழக்காத கோட்டையாக இருக்கிறது.
படங்கள்: ம.பிரபு, எஸ்.ஆர்.ரகுநாதன், கே.பிச்சுமணி,
வி.கணேசன், கே.வி.சீனிவாசன், எஸ்.எஸ்.குமார், ஆர்.ரகு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT