Last Updated : 07 Jun, 2014 12:31 PM

 

Published : 07 Jun 2014 12:31 PM
Last Updated : 07 Jun 2014 12:31 PM

சுற்றுச்சூழலுக்கு உகந்த அக்ரிலிக் அறைக்கலன்கள்

கட்டுமானத் துறையில் அடுத்தடுத்துப் பல மாற்றுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. மரபாக உபயோகித்து வந்த பொருட்களுக்கான மாற்று இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானது. தொழில்நுட்பம் வளர்ச்சிதான் பாகுபாடுகளைக் களைந்தது எனலாம். அந்த வகையில் இப்போது பரவலாக உபயோகிக்கப்பட்டு வரும் புதிய மாற்றுப் பொருள் அக்ரிலிக்.

மர மேஜை/இருக்கைகளுக்கு மாற்றாக காங்கீரிடிலேயே மேஜைகள்/இருக்கைகள் செய்யப்பட்டன. அடுத்ததாக பிளாஸ்டிக் மேஜைகள்/இருக்கைகள் வந்தன. தற்போது இந்த அக்ரிலிக் என்னும் புதிய பொருளில் இருக்கைகள் வந்துள்ளன. இவை பிளாஸ்டிக் அறைக்கலன்களுக்குச் (Furniture) சரியான மாற்று எனலாம்.

இது பாலிமரை மூலப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் பொருள். முதன் முதலாக 1941ஆம் ஆண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது. இவை இழையிழையாகத் தயாரிக்கப்பட்டு, காலணிகளிலும், ஸ்வெட்டர்களிலும் கையுறைகளிலும் லைனிங் பொருளாகப் பயன்பட்டு வந்தது. தற்போது உள் தடுப்புச் சுவர்களாகவும் அறைக்கலன்களாகவும் இந்த அக்ரிலிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அக்ரிலிக், கண்ணாடியைப் போல பளபளப்பும் ஒளியைக் கடத்தும் இயல்பும் கொண்டது. அதே சமயம் ஃபைபரை விட வலிமையாது. இவற்றை மிக எளிதாக அறுக்க முடியும். அதனால் அக்ரிலிக் தடுப்புகள் வீட்டின் அளவுக்கு ஏற்றாற் போல் வெட்டிப் பயன்படுத்த ஏதுவானது. அக்ரிலிக் இப்போது மீன் தொட்டிகள் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கண்ணாடியைப் போல இருப்பதால் இவை உடைந்துவிடுமோ என அச்சப்படத் தேவையில்லை. இவை எளிதில் உடையாது. தடுப்புச் சுவர், அறைக்கலன்கள் மட்டுமல்லாது கதவு, ஜன்னலாகவும் அக்ரிலிக் பயன்படுத்தப்படுகிறது.

வீடுகளுக்கும் இவற்றைப் பயன்படுத்தலாம் என்றாலும் இப்போது அக்ரிலிக் பெரும்பாலும் அலுவலக இண்டியர்களுக்குத்தான் பயன்படுகின்றன.

சோஃபா, சாப்பாடு மேஜை, இருக்கைகள், அலமாரிகள், ஊஞ்சல் என இன்னும் பலவிதமான அறைக்கலன்கள் அக்ரிலிக்கால் செய்யப்பட்டு இப்போது விற்பனைச் சந்தைக்கு வந்துள்ளன. என்னதான் இம்மாதிரியான புதிய பொருட்கள் சந்தைக்கு வந்தாலும் மர அறைக்கலன்கள்தான் நீடித்த உழைப்பைக் கொண்டவை என ஆணித்தரமாக நம்புவோம். ஆனால் மர அறைக்கலன்களுடன் ஒப்பிட்டால் அக்ரிலிக் அறைக்கலன்கள் கையாள்வதற்கு எளிது. பொருட்செலவும் அதிகம் ஆகாது. மேலும் இது மறுசுழற்சிக்கு ஏற்றது. அதனால், சுற்றுப்புறத்திற்கும் உகந்தது.

அக்ரிலிக் அறைக்கலன்கள் தொழிற்சாலைகளிலேயே தயாரிக்கப்பட்டு வருவதால் அவை நேர்த்தியான வடிவமைப்புடன் இருக்கும். தயாரிப்பும் மேம்பட்டு இருக்கும். மேலும் இவை பராமரிப்புக்கும் எளிதானது. இந்தியாவிலேயே இப்போது அக்ரிலிக் அறைக்கலன்கள் தயாரிக்கப்படுகிறது. இதன் தேவை பெருகப் பெருக தயாரிப்பு நிறுவனங்களும் பெருகி விலையும் குறையும். மரங்கள் அறைக்கலன்களுகாக வெட்டப்படுவதும் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x