Published : 14 May 2016 01:22 PM
Last Updated : 14 May 2016 01:22 PM
வீடு,மனை என சொத்து வாங்க திட்டமிடுகிறீர்களா? உடனே என்ன செய்வீர்கள்? வங்கியில் வீட்டுக் கடன் எவ்வளவு கிடைக்கும் எனக் கணக்குப் போடுவீர்கள். பத்திரப்பதிவுக்கு எவ்வளவு செலவாகும் என மதிப்பிடுவீர்கள். வீடு எவ்வளவு சதுர அடியில் இருக்க வேண்டும், சமையலறை, படுக்கையறை எப்படி இருக்க வேண்டும், வீடு அமையும் இடம் கார்னர் மனையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பீர்கள். ஆனால், சொத்துகளை எப்படி பேரம் பேசி வாங்க வேண்டும் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? அப்படி பேரம் பேசும் முன்பு தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள் எவை எனத் தெரியுமா?
சொத்து வாங்க தேர்வு செய்த இடத்தில் வீடு அல்லது மனை எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது என்ற விவரத்தைப் பெற வேண்டும். இப்படி சேகரிக்கப்படும் விவரங்களில் குறைந்த விலையில் சொத்துகள் விற்பனை செய்வது தெரிய வந்தால், அதே பகுதியில் வீடு அல்லது மனை குறைவாக விற்பனை செய்யப்படுவதைச் சுட்டுக் காட்டி கட்டுநரிடம் பேரம் பேசலாம். இதனால் சொத்து குறைந்த விலைக்கு கிடைக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும்.
# முதலில் வாங்க உத்தேசித்துள்ள மனை அல்லது வீடு எவ்வளவு நாட்களாக விற்பனை செய்ய முயற்சி செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். நீண்ட நாட்களாக விற்பனைக்காகக் காத்திருக்கிறது என்றால், நீங்கள் அதிகம் பேரம் பேசி விலையைக் குறைக்கலாம்.
# நீங்கள் வீடு கட்டத் தொடங்குவதற்கு முன்பாக வீட்டின் விலை எவ்வளவு சொல்லப்பட்டது, இப்போது அதன் விலை எவ்வளவு சொல்லப்படுகிறது என்ற விவரங்களைச் சேகரிக்க வேண்டும். சில வீடுகள் மறு விற்பனையாக இருக்கலாம். வீடு கட்டத் தொடங்கும்போது பணத்தைக் கொடுத்துவிட்டு பின்னர் வாங்குவதிலிருந்து வாடிக்கையாளர் பின்வாங்கியிருக்கலாம். எனவே தொடக்க நிலையில் வீடு எவ்வளவு விலை சொல்லப்பட்டது, கட்டி முடித்த பிறகு எவ்வளவு விலை சொல்லப்படுகிறது எனப் பார்த்து கட்டுநரிடம் பேரத்தைக் கூட்டிப் பேசலாம்.
# கட்டுநரின் பின்னணி விஷயங்களை ஆராய்வதுகூட உங்களுக்கு உதவியாக இருக்கலாம். கட்டுநர் பணத் தேவையில் இருக்கலாம். எனவே வீட்டை விரைவாக விற்பதில் ஆர்வம் காட்டுவார். இதைப் பயன்படுத்தி பேரம் பேசி விலையைக் குறைக்கலாம்.
# வீடுமறு விற்பனையாக இருந்தால் சில விஷயங்களை ஆராய்ந்து விலையைக் குறைக்க முடியும். கட்டுமானத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பிராண்டட் அறைகலன்கள் அல்லது வீட்டு உபயோகப் பொருட்கள் தரம் குறைந்திருப்பது தெரிந்தால் பேரம் பேசி விலையைக் குறைக்கலாம். உதாரணமாக வீட்டில் எங்கேயாவது பொருளோ பகுதியோ சேதம் அடைந்திருப்பது தெரிந்தால், அதற்கான பழுது நீக்க செலவாகும் தொகையைக் குறைத்துக்கொள்ள பேரம் பேசலாம்.
எக்காரணம் கொண்டும் வீடு விற்பவர் சொல்லும் கவர்ச்சிகரமான, தந்திரமான பேச்சுகளில் நீங்கள் விழுந்துவிடக் கூடாது. ஒரு வேளை விழுந்துவிட்டால் அவசரத்தில் உங்கள் முடிவு மாறி நஷ்டத்தை ஏற்படுத்திவிடலாம்.
# கட்டுநர் ஒரேயடியாக பெரிய தள்ளுபடி செய்து சலுகைக் காட்டினால் நீங்கள் யோசிக்க வேண்டும். ஒரு வேளை விலையை அதிகப்படியாகக் கூட்டிவிட்டு சலுகை வழங்குவது போல விலையைக் குறைத்து கொடுக்க முயலலாம். எனவேதான் அந்தப் பகுதியில் வீடு எவ்வளவு தொகைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதை நீங்கள் முன்கூட்டியே விசாரித்து வைத்துக்கொண்டால், இதுபோன்ற சலுகைகளின் உண்மை நிலையை அறிந்துகொள்ள உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
இனி கச்சிதமாகப் பேரம் பேசுவீர்கள்தானே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT