Published : 09 Apr 2016 11:58 AM
Last Updated : 09 Apr 2016 11:58 AM
கடந்த மார்ச் 31 அன்று தனது 66-வது வயதில் மரணமடைந்த கட்டிடவியல் கலைஞர் ஜஹா ஹதீதைப் பற்றிப் பொதுவாகச் சொல்லப்படுவது ‘உருவம் பெறாத கனவுகளின் அரசி’ என்பதுதான்.
1950-ல் இராக்கில் பணக்கார முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர் ஜஹா ஹதீத். தொழிலதிபரும் அரசியல்வாதியுமான அவருடைய தந்தை தாராளமய சிந்தனை கொண்டவர். ஜஹாவின் தாயும் ஒரு கலைஞரே. இராக்கில் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் தனது மரபுத் தளைகளிலிருந்து விடுபடுவதற்கு இதுபோன்ற ஒரு குடும்பப் பின்னணி அத்தியாவசியமானது.
1960-களில் இங்கிலாந்திலும் சுவிட்சர்லாந்திலும் தங்கிப் பள்ளிப் படிப்பைப் படித்த ஜஹா அதற்குப் பிறகு லெபனான் நாட்டின் பெய்ருத் நகரில் உள்ள அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் கணிதம் பயின்றார். ஜஹாவின் பிற்காலத்திய கலைப் பயணத்தை உற்றுநோக்கினால் அதில் கணிதம் - முக்கியமாக அசாதாரணமான வடிவியல் அறிவு - வகிக்கும் பங்கு புலப்படும். அதற்கு அடித்தளம் இட்டது இளம் வயதிலிருந்தே கணிதத்தின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வமும் கணிதம் பயின்றதும். லெபனான் வருடங்களைத் தனது வாழ்வின் மிகச் சிறந்த வருடங்கள் என்று பலமுறை ஜஹா குறிப்பிட்டிருக்கிறார்.
உள்ளுணர்வை நம்புதல்
1972-ல் ‘ஆர்க்கிடெக்சுரல் அஸோஸியேஷன் ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்ச’ரில் கட்டிடவியல் படிப்பு படிப்பதற்காக லண்டன் சென்றார். கட்டிடவியலில் பரிசோதனை முயற்சிகளுக்குப் புகழ்பெற்றது அந்தக் கல்லூரி. அங்கே, எலியா ஜென்கெலிஸ், ரெம் கூல்ஹாஸ் போன்றோர் அவருக்குப் பேராசிரியர்களாக அமைந்தனர். அவர்கள்தான் தனக்கு கலை தாகத்தை ஊட்டினார்கள் என்றும், தனது விசித்திரமான உள்ளுணர்வுகளையும் நம்ப வேண்டும் என்று சொன்னதும் அவர்கள்தான் என்றும் ஜஹா குறிப்பிட்டார்.
கட்டிடவியல் படிப்பு முடித்த பிறகு தனது பேராசிரியர்களின் கீழ் பணிபுரிந்த ஜஹா 1980 சொந்தமாக ஒரு கட்டிட வடிவமைப்பு நிறுவனத்தை லண்டனில் தொடங்கினார். 1982-ல் ஹாங்காங்கில் அமைப்பதற்காக அவர் வடிவமைத்த ‘பீக் லீய்ஸர் கிளப்’ வடிவமைப்பு அவருக்குச் சர்வதேச அளவில் கவனத்தைக் கிடைக்கச் செய்தது. அந்த வடிவமைப்பு உருவம் பெறவில்லை என்றாலும் அதில் உள்ள கலைப் பரிமாணங்கள் மிகவும் ஆச்சரியம் அளிக்கக் கூடியவை.
ஸ்பானிய எழுத்தாளர் ஜார்ஜ் லூயீ போர்ஹேவின் கனவுகளையும் உலகப் புகழ்பெற்ற ஸ்பானிய ஓவியர் பாப்லோ பிக்காஸோவின் கனபரிமாணங் களையும் ஒன்றுசேர்த்தது போன்ற உணர்வைத் தரக்கூடியவை ஜஹாவின் அந்த வடிவமைப்பு. அவரது பிற்கால வடிவமைப்புகளின் மையமான கனவு அம்சம் அந்த வடிவமைப்பில் தூக்கலாகத் தெரியும். அது மட்டும் கட்டப்பட்டிருந்தால் ஒரு மாயாஜாலக் கனவுக்குள்ளே சென்றுவரும் அனுபவம் பலருக்கும் கிடைத்திருக்கும்.
கனவுகளின் வடிவமைப்பு
கட்டுரையின் தொடக்கத்தில் நாம் பார்த்ததுபோல், ஜஹா தனது வடிவமைப்புகள் கட்டிட வடிவம் பெறுமா என்பதைப் பற்றிப் பெரிதும் கவலைப்பட்டதில்லை. கனவுகளை வடிவமைப்பதுதான் அவரது முதல் லட்சியம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டுக் கட்டிடங்கள் கட்டப்பட்டால் அவருக்குப் பெரும் மகிழ்ச்சிதான். ஆனால், அதுபோன்ற வடிவமைப்புகளுக்கு ஆகும் செலவு அவரது பல கனவுகளை நிறைவேறாமல் செய்துவிட்டது.
அதேபோல் அவரது வடிவமைப்பில் உருவான சில கட்டிடங்கள் நடைமுறைப் பயன்பாட்டைவிடக் கலைப் பயன்பாட்டுக்கு உரியவைபோல் ஆகிவிட்டன. ஜெர்மனியில் அவர் வடிவமைத்த தீயணைப்பு நிலையம் இதற்கு ஓர் உதாரணம். இந்தக் கட்டிடத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் மூலைகளும், சிறகு போன்ற அமைப்பும், நேர்கோட்டு அமைப்புகளும் உலகின் பல்வேறு கட்டிடவியலாளர்களையும் ஈர்த்தன. ஆனால், தீயணைப்பு வீரர்களோ இந்தக் கட்டிடத்தைப் பயன்படுத்த முடியாது என்று கூறி வெளியேறிவிட்டார்கள்.
எனினும், நிறைவேறிய கனவுகளும், நிறைவேறிக்கொண்டிருக்கும் கனவுகளும் நிறைய இருக்கின்றன. சீனாவின் ‘குவாங்சோ ஓபரா ஹவுஸ்’, லண்டன் ‘அக்வாடிக் சென்டர்’, ரோமில் உள்ள ‘மாக்ஸி மாடர் ஆர்ட் மியூசியம்’, அஜெர்பெய்ஜானில் உள்ள ‘ஹெய்தர் அலியேவ் சென்டர்’ போல நிறைய கட்டிடங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது கத்தாரில் உருவாகிக்கொண்டிருக்கும் அல் வக்ராஹ் மைதானமும் முக்கியமானதொன்று.
விருதுகள், சர்ச்சைகள்
அவரைத் தேடி விருதுகள், அங்கீகாரங்கள் எல்லாம் தேடிவந்தன. கட்டிடக் கலைக்கான நோபல் என்று கருதப்படும் பிரிட்ஸ்கெர் பரிசு 2004-ல் கிடைத்தது. இந்த விருதைப் பெற்ற முதல் பெண் ஜஹாதான். அது மட்டுமல்லாமல் அவர் ஒரு முஸ்லிம் வேறு. ஆனால், ஜஹா தன்னை ஒரு பெண்ணாகவோ முஸ்லிமாகவோ மட்டும் பார்ப்பதை வெறுப்பவர். தான் ஒரு கட்டிடவியல் கலைஞர் என்று பார்க்கப்படுவதையே முதன்மையாக அவர் விரும்பினார். கடந்த ஆண்டு கட்டிடவியல் கலைஞர்களுக்கு பிரிட்டனில் வழங்கப்படும் உயரிய விருதான ‘ரிபா தங்கப் பதக்க’மும் ஜஹாவுக்குக் கிடைத்தது.
விருதுகள் மட்டுமல்ல, சர்ச்சைகளும் ஜஹாவைத் தேடிவந்தன. அஸர்பெய்ஜானில் ‘ஹெய்தர் அலியேவ் சென்டர்’ கட்டுவதற்காக அந்தப் பகுதியில் வசித்து வந்த மக்கள் வெளியேற்றப்பட்டதால் அந்த மக்களின் கோபத்துக்கும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் கோபத்துக்கும் இலக்கானார் ஜஹா. கத்தாரில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் மைதானத்திலும் ஒரு பெரும் சர்ச்சை ஓடிக்கொண்டிருக்கிறது. ஆயிரம் தொழிலாளர்களுக்கு மேல் அங்கே இறந்துபோய்விட்டார்கள் என்று ஒரு விமர்சகர் எழுதினார். கட்டுமானம் தொடங்கப்படுவதற்கு முன்பே இப்படிச் சொல்வதில் எந்த அடிப்படையும் இல்லை என்று ஜஹா அந்த விமர்சகர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார். எனினும், இன்றும் அந்தக் குற்றச்சாட்டு இருந்துதான்வருகிறது.
நடுவில் நின்று…
கட்டிடங்கள் என்பவை வெறுமனே பயன்பாட்டுக்கான அமைப்புகள் இல்லை, அவை நம் மனதுக்குள்ளும் வாழ்க்கைக்குள்ளும் ஆதிக்கம் செலுத்துபவை. நம் கனவுகள் பெரும்பாலும் கட்டிடங்கள், அறைகள் சார்ந்தே உருவாகின்றன. நம் கனவின் கட்டிடங்கள் பெரும்பாலும் தர்க்கத்தை மீறியதாக இருப்பவை. அதுபோன்ற கட்டிடங்களை நிஜத்தில் உருவாக்குவது இயற்கையை மீறுவதற்குச் சமம்.
இரண்டு புள்ளிகளுக்கும் நடுவில் நின்று ஒரு மாயாஜாலக் கற்பனையை உருவாக்கினார் ஜஹா. அவரது கனவுகளுக்குள்ளும், கனவுகளைக் கடந்தும் லட்சக்கணக்கான மக்கள் இன்றும் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள், ஜஹா தங்களுக்காகக் கனவுகண்டவர் என்பதை அறியாமலேயே. அதுதான் ஜஹாவின் நித்தியத்துவம்!
ஜஹா ஹதீத்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT