Last Updated : 16 Apr, 2016 12:26 PM

 

Published : 16 Apr 2016 12:26 PM
Last Updated : 16 Apr 2016 12:26 PM

வீட்டை வண்ணமாக்கும் முன்...

மழை, வெயில் என்று எல்லாவற்றுக்கும் ஈடுகொடுத்துக் கொண்டிருக்கிறது நம் வீடு. அதில் வண்ணப் பூச்சு உதிரத் தொடங்கினாலோ ஆங்காங்கே வெடிப்பு ஏற்பட்டாலோ வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

‘நாலு வருஷத்துக்கு முன்னால்தானே பெயிண்ட் அடிச்சோம். இன்னும் நாலைந்து வருடங்கள் ஆனாலும் குடி மூழ்கி விடாது’ என்று தள்ளிப் போட்டால் செலவு மிக அதிகமாகச் செய்ய வேண்டியிருக்கும்.

வீட்டுக்கு பெயிண்ட் செய்யும்போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. பிரபல பெயிண்ட் நிறுவனங்கள் தங்கள் கையேடுகளில் தாங்கள் தயாரிக்கும் பெயிண்ட் நிறங்களை அச்சிட்டிருப்பார்கள். இதை மட்டும் பார்த்துவிட்டு உங்கள் வீட்டுக்கான பெயிண்ட்டைத் தேர்ந்தெடுத்து விடாதீர்கள். வீட்டின் ஒரு சிறு பகுதிக்கு (ஒரு சிறிய சதுரம் அளவுக்காவது) பெயிண்ட் அடியுங்கள் அல்லது அடிக்க வையுங்கள்.

பகல், இரவு ஆகிய இரு வேளைகளிலும் அந்த பெயிண்ட்டைப் பார்த்துவிட்டு முடிவுசெய்யுங்கள். வீட்டின் வெளிப்புறத்துக்கான பெயிண்ட் என்றால் வெளிப்புறத்தில் கொஞ்சம் அடித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் மட்டுமே அதை வாங்குங்கள்.

பெயிண்டில் இரு வகை

அடிப்படையில் பெயிண்ட்டில் இரு வகை உண்டு. ஒன்று தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட லாடெக்ஸ். இந்த வகை பெயிண்ட்டை சுவர்களுக்கு அடித்தால் அதில் படியும் கறைகளைச் சோப்புத் தண்ணீரைக்கொண்டே நீக்கிவிட முடியும். விரைவாகவும் காய்ந்து விடும். வெடிப்புகள் அவ்வளவு எளிதில் ஏற்பட்டு விடாது.

இரண்டாவது ஆல்கைடு பெயின்ட் (இதை எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட பெயிண்ட் என்கிறார்கள்). இந்த வகை பெயிண்ட்டில் நாளடைவில் கறை உண்டானால் அதைச் சுலபத்தில் போக்கிவிட முடியாது. ஆனால் இதை மிகச் சீராக (அதாவது எல்லா இடங்களிலும் அச்சாக ஒரே வண்ணம் கொண்டதாக) பூச முடியும். நீண்ட காலம் தாக்குப் பிடிக்கும். எனினும் அழுத்தமான வாசமும் வரும்.

பெயிண்ட் என்பதில் இருப்பது வெறும் வண்ணச் சாயம் மட்டுமல்ல. அதில் சுவரோடு ஒட்டி இருப்பதற்கான வேதிப் பொருள்கள் உண்டு தவிர புறஊதாக் கதிர்களிலிருந்து வீட்டுச்சுவர்களைக் காப்பதற்கான பொருள்களும் உண்டு.

ஏற்கனவே வீட்டுக்கு ஆல்கைடு பெயிண்ட்டை அடித்திருந்தால் அதை நன்கு தேய்த்துவிட்டு (இதை ப்ரைம் செய்வது என்பார்கள்) பிறகுதான் புதிய பெயிண்ட்டை அடிக்க வேண்டும்.

ஒரே வண்ணம் கொண்ட இருவகை பெயிண்ட்டுகள் மிக வித்தியாசமான விலையில் விற்பது ஏன் எனப் பல சமயங்களில் நமக்குக் கேள்விகள் எழுந்திருக்கும். அதிக விலை கொண்ட பெயிண்ட்டுகளில் நிறமிகள் அதிக அளவில் இருக்கும். இதனால் அது அடர்த்தி்யாக இருக்கும். இந்தத் தன்மையால் சுவர்களுக்கு அதிகப் பாதுகாப்பு கிடைகும்.

சில யோசனைகள்

பெயிண்ட்டை பிரஷ்ஷால் அடிக்கலாம், ரோலரைக் கொண்டும் அடிக்கலாம். எது சிறந்தது?

ரோலரைப் பயன்படுத்தினால் அது குறைவான விட்டம் கொண்டதாகப் பார்த்துக் கொள்ளுங்கள். நீளமான, அகலமான பகுதிகளுக்கு ரோலரைப் பயன்படுத்தலாம்.

குறைந்த பகுதிகளுக்கும், குறுகலான பகுதிகளுக்கும், முனைகளுக்கும் பிரஷ்ஷைப் படுத்துவது நல்லது.

ஒரு பெயிண்ட்டை வாங்கத் தீர்மானிப்பதற்கு முன்பாக அதன் உறையில் என்னென்ன அச்சிடப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாக மனதில் கொள்ளுங்கள். எவ்வளவு வெப்பநிலைக்குக் கீழாக இருக்கும்போது அந்தப் பெயிண்ட்டைப் பயன்படுத்தக் கூடாது என்ற விவரமும் பெரும்பாலும் இருக்கும். அதைப் பின்பற்ற வேண்டும்.

ஏற்கனவே பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தால் அதில் உள்ள அழுக்குகளை எல்லாம் தேய்த்து நீக்கிய பிறகுதான் புதிதாக பெயிண்ட் அடிக்க வேண்டும். சுவரில் ஏற்பட்டிருக்கக் கூடிய துளைகளை எல்லாம் அடைத்துவிட்டு அதற்குப் பிறகு பெயிண்ட் அடியுங்கள்.

நேரடியாக சூரிய ஒளி படும்போது பெயிண்ட் அடித்தால் அது வெகு சீக்கிரமே உலர்ந்து விடலாம். இதன் காரணமாக அது போதிய அளவு சுவரில் ஒட்டிக் கொள்ளாமல் விரைவிலேயே வெடிப்புகள் உண்டாகலாம். எனவே நிழல் படும் நேரமாகப் பார்த்து பெயிண்ட் செய்வது நல்லது.

சில பெயிண்ட் வாசனைகள் சிலருக்கு ஒவ்வாமையைக் கொடுக்கும். அப்படி இருப்பவர்கள் பெயிண்ட் அடிக்கும் சமயத்தில் வீட்டில் இருப்பது நல்லதல்ல. சில சமயம் கண் தொற்றுகூட இதனால் ஏற்படலாம். காரணம் பெயிண்ட்டில் ஈயச் சத்து உண்டு (சில மேலை நாடுகளில் ஈயச் சத்து அடங்கிய பெயிண்ட்களுக்குத் தடை விதித்திருக்கிறார்கள். இந்தியாவிலும் சில மாநிலங்களில் இந்தத் தடை உண்டு).

சில வகைப் பெயிண்ட்டுகள் சுவாச மண்டலத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தக் கூடும். ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் பெயிண்ட் அடிக்கும்போது மூக்கு மற்றும் வாய்ப் பகுதியை துணியால் மூடிக் கொள்வது நல்லது.

எந்த வண்ண பெயிண்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம்? வெள்ளை மற்றும் மிதமான வண்ணப் பெயிண்ட் அடிக்கப்பட்டால் அந்த அறையில் வெளிச்சம் அதிகமாக இருக்கும். அறை சற்றுப் பெரிதாகக் காட்சி தரும்.

பெயிண்ட் வாங்குவதற்கான செலவை மட்டும் கணக்கிடாமல் சுவர்களைப் பராமரிப்பதற்கான செலவையும் மனதில் கொண்டு கணக்கெடுங்கள்.

உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ சிபாரிசு செய்தார்கள் என்ற காரணத்துக்காக அரைகுறை மனதுடன் எந்த வண்ணத்தையும் தேர்ந்தெடுக்காதீர்கள். காலம் முழுவதும் உங்கள் வீட்டில் இருக்கப்போவது நீங்கள்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x