Published : 16 Apr 2016 12:20 PM
Last Updated : 16 Apr 2016 12:20 PM
நாம் பார்க்கும் வேலை என்பது ஓடிக் கொண்டிருக்கும் ஒரு விரைவு ரயிலைப் போன்றது. அதில் பயணிக்கும் வரை அந்த இயக்கத்தின் ஒரு பாகமாக நாம் இருப்போம், பிரபஞ்சத்தின் ஒரு பாகமாக நம் உடலிருப்பதைப் போல். வேலையிலிருந்து ஓய்வுபெறும் நாளன்று இந்த விரைவு ரயில் நம்மை இறக்கிவிட்டுச் சென்றுவிடும்.
பல ஆண்டுகளாக அலுவலகத்தில், தொழிற்சாலைகளில் வேலை பார்த்துவந்தவர்கள் திடீரென ஒருநாள் செயலற்றுப் போவோம். இத்தனை ஆண்டுகள் சுறுசுறுப்பாக வேலை பார்த்துவந்தவர்கள் வீட்டுக்குள் முடங்கியிருப்பது இயலாத காரியம். சரி, இந்த ஓய்வுக் காலத்தை எப்படிச் செயலாற்றால் மிக்கதாக மாற்றுவது? அதற்கு ஒரு யோசனையைச் சொல்கிறார் ஓராண்டுக்கும் முன் மாநில அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற வேலப்பன்.
பொதுவாக பணி ஓய்வுக்குப் பிறகு பெரும்பாலும் எல்லாரும் செய்யும் பொதுவான காரியம் கோயில், கோயில்களாக ஆன்மிகச் சுற்றுலா செல்வதுதான். ஆனால் வேலப்பன், சுசீந்திரத்திலுள்ள தன் வீட்டு மொட்டைமாடியில் ஒரு கோயிலையே எழுப்பிவிட்டார். கோயில் என்றால், தெய்வச் சிலைகளுக்கான கோயில் அல்ல; தாவரத் தெய்வங்களுக்கான கோயில்.
நாகர்கோயிலுக்கு அருகில், பரளியாறு கடந்துசெல்லும் அழகான மாத்தூர் என்னும் கிரமம்தான் வேலப்பனின் சொந்த ஊர். அவரது கிராமத்து வீடு, ரப்பர், தென்னை மரங்களுக்கு நடுவில்தான் இருக்கிறது. அக்கம்பக்கத்தில் வீடுகள் இல்லாத நிலையில் இந்த மரங்களே அவருடைய விளையாட்டுத் தோழர்களாக இருந்துள்ளன. இந்தப் பின்னணிதான் அவருக்கு இயற்கைமீதான தீராக் காதலை வளர்த்தது. ஆனால் வேலையின் பொருட்டு பின்னால் சுசீந்திரத்தில் குடியேறிவிட்டார்.
கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றிய அவருக்கு அலுவலகப் பணியே சரியாக இருந்ததால், இடையில் இதற்கு நேரம் ஒதுக்க இயலாத சூழல். ஆனால் ஒரு தோட்டம் போட வேண்டும் என்னும் ஆசையை மனதுக்குள் விதைத்துக் காத்திருந்தார். இப்போது ஓய்வு கிடைத்ததும் சிறு குழந்தையின் ஆர்வத்துடன் அதைச் செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்.
“நமது இந்திய மரபு இயற்கையை தெய்வமாகத் தொழுவதைத்தான் முன்னிறுத்துகிறது. கோயில் கோயிலாகச் சென்று தொழுவதைக் காட்டிலும் நம்மால் முடிந்த அளவு செடி, கொடிகளை உருவாக்கினாலேயே போதுமானது” என்கிறார் வேலப்பன். தாவரங்களுடன் கழியும் பொழுதுகள் தியானத்துக்கு இணையானது என்றும் சொல்கிறார். ஓய்வுபெற்ற பிறகு, பகுதி நேரமாக வேலை பார்க்கலாம், ஆட்டோ வாங்கி வாடகைக்கு விடலாம் என அவருக்கும் நண்பர்கள் பலவிதமான யோசனைகளைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இவை எதிலும் ஆர்வம் இல்லாமல் சிறு தோட்டம் அமைக்க முடிவெடுத்தார். அதேசமயம் அவர் தற்போது வசிக்கும் வீட்டில் செடி, கொடிகள் வளர்ப்பதற்கான வசதி இல்லை. ஆனால் மொட்டை மாடியில் தோட்டம் அமைக்கும் முறையைப் பற்றிக் கேட்டறிந்து, ஓரிரு நாள்களுக்குள் மொட்டைாடியில், தட்டைப்பயிறு கொடி, வெண்டைக்காய்ச் செடி, கத்தரிக்காய்ச் செடி, தக்காளிச் செடி, பிச்சிக் கொடி, மல்லிகைக் கொடி, ரோஜாச் செடி என ஒரு தாவரக் குடும்பத்தையே உருவாக்கிவிட்டார்.
தினமும் காலையில் எழுந்ததும் மாடிக்குச் சென்று தன் தாவரக் குழந்தைகளைக் காணச் சென்றுவிடுவது அவரது வழக்கம். “செடிகளுக்குச் சிறு வாட்டம் கண்டாலும் மனம் கலங்கிவிடும்” என்கிறார். உடனடியாக அதன் வாட்டைத்தைப் போக்கி மலரச் செய்துவிடுகிறார். கொடிகளுக்குப் பந்தல் அமைத்துச் சீராட்டுகிறார். இவரது தோட்டத்தில் விளையும் காய்கறிகளில் வீட்டுத் தேவை போக எஞ்சுவதை அண்டை வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் தருகிறார். இவரது தோட்டத்துத் தட்டைப் பயிறுக்கு நண்பர்கள் வீடுகளில் மிக பெரிய வரவேற்பு இருக்கிறதாம். அதற்குக் காரணம் இவர் அதைக் குழந்தையைப் போல் பாவிக்கும் முறைதான் எனத் தோன்றுகிறது. தோவாளைச் சந்தையில் விற்கும் அளவுக்கு இவரது தோட்டத்தில் பூக்கள் பூத்தாலும் அவற்றைக் கொய்துவிடாமல் செடிகளிலேயே விட்டுவிடுகிறார். இந்தத் தோட்டத்தால் அவரது வீட்டுக்கு குளிர்ச்சியும் கிடைத்திருக்கிறது.
செடி, கொடிகளை மட்டுமல்லாது மொட்டை மாடிக்கு வரும் பறவைகளையும் சீராட்டி வருகிறார். காக்கைகள், புறாக்கள் தாகம் தீர்க்க மொட்டைமாடியில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கிறார்; அவை பசியாற சிறு தானியங்களையும் இடுகிறார்.
இந்தச் செயல்களால் தன் ஓய்வுக் காலம் அர்த்தமுள்ளதாக மாறியிருப்பதாகச் சொல்லும் அவர், தனது பழக்க வழக்கங்கள், ஆட்களை அணுகும் முறையும் இதனால் மாறியிருப்பதாகவும் சொல்கிறார். இவரது இந்த மாடித் தோட்டம் அந்தப் பகுதியில் பிரபலம். மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியுடன் யோசனைகளையும் சொல்லி வருகிறார் வேலப்பன்.
தொடர்புக்கு: 9487185256
வேலப்பன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT