Last Updated : 26 Mar, 2016 11:22 AM

 

Published : 26 Mar 2016 11:22 AM
Last Updated : 26 Mar 2016 11:22 AM

அதிகரிக்கப்போகும் சிமெண்ட் தேவை

கடந்த சில ஆண்டுகளாகவே சிமெண்ட் விலை ஏறுமுகத்தில்தான் இருந்துவருகிறது. வட இந்தியாவைவிடத் தென்னிந்தியாவில் சிமெண்ட் விலை அதிக விலையில் விற்கப்படுகிறது. காரணமே இல்லாமல் சிமெண்ட் விலை கடந்த நான்கைந்து ஆண்டுகளில் பல முறை ஏறியிருக்கிறது. இதுபோல 2012-ம் ஆண்டு முறையற்ற வகையில் சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டதற்காக சிசிஐ (CCI-Competition Commission of India) 11 சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 6,300 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. ஆனாலும் சிமெண்ட் விலை கட்டுக்குள் வந்தபாடில்லை. இது குறித்து கிரடாய் போன்ற கட்டுமான அமைப்புகள் பல முறை அரசுக்குக் கோரிக்கை வைத்தும் அது இன்னும் முறையாக்கப்படாத விஷயமாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு புதிய திட்டங்கள் வேகம் பெற்றுள்ளதால் மீண்டும் சிமெண்ட் விலை உயர்ந்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் சிமெண்ட விலை ஆறிலிருந்து பதினொரு சதவீதம்வரை உயர்ந்திருக்கிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியிருக்கும் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களால் இந்த விலை ஏற்றம் என அத்துறைசார் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

ஒரு மூட்டை சிமெண்ட் விலை வட மாநிலங்களில் சராசரியாக 267 ரூபாயாகவும், தென் மாநிலங்களில் 344 ரூபாயாகவும், மேற்கு மாநிலங்களில் 285 ரூபாயாகவும், கிழக்கு மாநிலங்களில் 290 ரூபாயாகவும், மத்திய மாநிலங்களில் 272 ரூபாயாகவும், அகில இந்தியாவின் சராசரி 292 ரூபாயாகவும் இருக்கிறது.

வடஇந்தியாவின் இந்த சிமெண்ட் விலை ஏற்றம் அப்படியே மத்திய மாநிலங்களுக்கும் ஒரளவுக்குப் பரவியிருக்கிறது. தென்னிந்தியாவில் சிமெண்ட் விலை ஓராண்டாக ஏற்றத்தில் இருப்பதற்குச் சாலைத் திட்டங்களும், துறைமுகத் திட்டங்களும் முக்கியக் காரணம் என்று தெரிவிக்கிறார்கள் துறைசார் நிபுணர்கள். தற்போதைய பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களால் சிமெண்ட்டின் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனால், இந்த நிதியாண்டில் சிமெண்ட் விலை ஒட்டுமொத்தமாக இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் அதிகரிக்கவிருக்கிறது.

அரசு அறிவித்திருக்கும் பல்வேறு திட்டங்களுக்குக் கிட்டத்தட்ட அறுபது சதவீத சிமெண்ட் தேவை இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால், அரசு உள்கட்டமைப்பு, கிராமப்புறத் திட்டங்களுக்காக சுமார் இரண்டு லட்சம் கோடி வரை செலவு செய்யவிருக்கிறது. இதில் சாலைகளும், ரயில்வே திட்டங்களும் அடங்கும். ‘அனைவருக்கும் வீடு’ போன்ற திட்டங்களும் சிமெண்ட் தேவையை மேலும் அதிகரிக்கப்போகிறது.

இந்த மாதிரி பல்வேறு காரணங்களால் 2015 நிதியாண்டில் 253 மில்லி டன்னாக இருந்த சிமெண்ட் பயன்பாடு, 2017 நிதியாண்டில் 290 மில்லி டன்னாக அதிகரிக்கவிருக்கிறது. இது சிமெண்ட் தயாரிப்பு வளர்ச்சி விகிதத்தை 4.9 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.

சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்களின் வருமானம் வருகின்ற காலாண்டிலேயே அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. முதலீட்டாளர்களில் பார்வையில், சிமெண்ட் தயாரிப்புத் துறை இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு நிலைத்தன்மையுடன் இருக்கப்போகிறது என்று சொல்லலாம். ஆனால், இந்தச் சூழ்நிலையில் நன்மைகளையும், லாபத்தையும் சிமெண்ட் துறையின் ஜாம்பவான் நிறுவனங்களே பெரியளவில் அனுபவிக்கப்போகின்றன. பொது மக்கள்தான் பாதிக்கப்படப்போகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x