Last Updated : 05 Mar, 2016 12:13 PM

 

Published : 05 Mar 2016 12:13 PM
Last Updated : 05 Mar 2016 12:13 PM

யுபிவிசி: பன்முகத்தன்மை வாய்ந்த கட்டுமானப் பொருள்

இன்றைய கட்டிடக் கலைஞர்களிடமும், கட்டுநர்களிடமும் யுபிவிசி (UPVC) எனப்படும் நெகிழி (Plastic) நீக்கம் செய்த பாலிவினைல் குளோரைடு (unplasticised polyvinyl chloride) பிரபலமாக இருக்கிறது. மலிவான விலை, குறைந்த பராமரிப்பு, குறைவான எடை, வலிமை, பன்முகத்தன்மை, மறுசுழற்சி என இந்தக் கட்டுமானப் பொருள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், நிலைதன்மையுடனும் விளங்குகிறது. இந்த யுவிசியின் நன்மைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள துறைசார்ந்த நிபுணர்களிடம் பேசினோம்.

கட்டுமான முறை

பெட்ரோலிய வேதிப்பொருள் துறையின் தயாரிப்பான யுபிவிசி ‘தெர்மோ பிளாஸ்டிக்’ என்று அறியப்படுகிறது. ‘ஸ்ரீபல் அண்ட் வெங்கட் அர்கிடெக்ட்ஸ்’ நிறுவனத்தின் முதன்மைக் கட்டிடக் கலைஞர் ஸ்ரீபல் முன்ஷி, இந்த ‘யுபிவிசி’ தயாரிக்கப்படும் முறையை விளக்குகிறார். “யுபிவிசி முழுமையாக உருகியவுடன், அதன் பகுதிகள் வெட்டப்பட்டு, இணைவுகளைப் பற்றவைத்து கதவுகளும், ஜன்னல்களும் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. எத்திலின் எனப்படும் இயற்கை வாயுவையும், குளோரினையும் (உப்பு தண்ணீரிலிருந்து) பயன்படுத்தி யுபிவிசியை உருவாக்குகிறார்கள். நெருப்பையும், சூரிய ஒளியையும் தாங்கும்படி யுபிவிசியில் ‘ஸ்டெப்லைசர்ஸ்’பொருத்தப்படுகிறது. இந்த ‘ஸ்டெப்லைசர்ஸ்’ கால்சியத்தியத்தால் உருவாக்கப்படுகின்றன”.

பிரபலமான அம்சம்

யுபிவிசி, பருவநிலை மாற்றத்தால் பாதிப்புக் குள்காமல் நீண்டகால ஆயுட்காலத்துடன் இருப்பதால் கட்டுநர்களின் நிலையான தேர்வாக இருக்கிறது. “யுபிவிசி ஆற்றல் திறனோடும், நீடித்து உழைக்கும் திறனோடும் இருப்பதால் துறையில் இதன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மற்ற வழக்கமான பைப்களைவிட (GI, stoneware, RCC) இதில் உராய்வு பாதிப்புகள் குறைவாக இருக்கின்றன. அத்துடன், எளிமையான பயன்பாடும், அதிகமான அழுத்தத்தைத் தாங்கும் பண்பும் யுபிவிசியில் இருக்கிறது. எந்தக் கட்டுமானப் பொருட்களோடும் இது வேதிவினைகளை ஏற்படுத்தவில்லை என்பது கூடுதல் சிறப்பு” என்கிறார் ‘ஹவுஸ் ஆஃப் ஹிராநந்தானி’ நிறுவனத்தின் திட்ட மேலாளர் எஸ். காளிதாஸ்.

மற்ற பொருட்களான மரம், இத்தாலிய அலுமினிய கதவுகள், ஜன்னல்களுடன் ஒப்பிடும்போது யுபிவிசி பொருட்களின் விலையும் குறைவாக இருக்கிறது. தீவிரமான பருவநிலையிலும் தூசியால் பாதிக்கப்படாதபடி இந்தப் பொருள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அலுமினியத்தைவிட ஒலி காப்பு, வெப்பத்தைக் குறைத்தல், தீ எதிர்ப்பு போன்றவை யுபிவிசியில் அதிகம். “சூழல் திறனாய்வில் யுபிவிசி ஜன்னல்களும், கதவுகளும் அதிகமான ஆற்றலைச் சேமிக்கும் திறனில் முதல் இடத்தில் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது” என்கிறார் முன்ஷி.

பயன்பாட்டு வரம்பு

யுபிவிசியின் பயன்பாடுகள் கட்டுமானத் துறையுடன் மட்டுமல்லாமல் பன்முகத்தன்மையுடன் விளங்குகின்றன. கட்டுமானத் துறையில், ஜன்னல்கள், கதவுகள், தண்ணீர்க் குழாய்கள், பாசனக் குழாய்கள், தண்ணீர்த் தொட்டி, பிளவு பேனல்கள், தற்காலிகமான கூரை, ஆர்சிசி ஷட்டர் பொருட்கள் போன்றவற்றுக்கு யுபிவிசியைப் பயன்படுத்துகிறார்கள். போக்குவரத்துத் துறையில், வாகனங்களின் உடற்பகுதியைச் செய்வதற்கு யுபிவிசியைப் பயன்படுத்துகிறார்கள். வர்த்தகத் துறையில், விற்பனைப் பலகைகள், சேமிப்பு அலமாரிகள், போஸ்டர் பிடிமானம் போன்ற பொருட்களைத் தயாரிக்க யுபிவிசியை உபயோகிக்கிறார்கள்.

“யுபிவிசியில் துருப்பிடிக்கும் தன்மையில்லாததால், இதை எளிதாகப் பயன்படுத்தலாம். அத்துடன், இதன் எடையும் மிகவும் குறைவு. அதனால், கதவு, ஜன்னல்களைச் சுலபமான ‘வெல்டிங்’ செய்யமுடிகிறது” என்கிறார் நவீன்’ஸ் ஹவுசிங் தொழில்நுட்ப மேலாளர் என். கல்யாணராமன்.

சுற்றுச்சூழலின் நண்பன்

யுபிவிசியின் இயற்பியல், வேதியியல் பண்புகளை வைத்துப் பார்க்கும்போது, அது சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள் என்பது தெரியவருகிறது. இந்தப் பொருளின் முக்கியமான நன்மை என்னவென்றால், அதை முழுமையாக மறுசுழற்சியும், மறுதயாரிப்புக்கும் பயன்படுத்தமுடியும் என்பதுதான். இந்த யுபிவிசியின் பொருட்களை மறுசுழற்சி செய்தபிறகு, அதிகமான வெப்பநிலையில் வைத்து புதியபொருட்களை உருவாக்க முடியும். “யுபிவிசி பொருட்களின் ஆயுட்காலம் முடிந்தபிறகு, அவற்றை முழுக்க முழுக்க ஒரு புதிய பொருள் தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம். அத்துடன், தயாரிப்பின்போது உருவாகும் கழிவுப்பொருட்களைக்கூட, மீண்டும் உபயோகிக்க முடியும். இதனால், நம்பகத்தன்மை, நிலைத்தன்மையுடன் ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியும்” என்கிறார் ஆர்என்கோஎஸ் (RNCOS) நிறுவனத்தின் ஷுஸ்முல் மகேஸ்வரி.

இன்றைய சூழலில், கதவுகளும், ஜன்னல்களும் தவிர்க்க முடியா ஆற்றல் சேமிப்பு கூறுகளுடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. “யுபிவிசியின் இருக்கும் குறைவான வெப்பக் கடத்தும் திறன், வெப்பக் கடத்தலின்போது பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்கிறது. இதனால், உங்கள் மின் கட்டணத்தை 7-15 சதவீதம் வரை குறைக்க முடியும்” என்கிறார் விஜய் சாந்தி பில்டர்ஸ் இயக்குநர் சந்தன் ஜெயின். ஆர்என்கோஎஸ் நடத்திய ஆய்வின்படி, உங்களுடைய குளிரூட்டும், வெப்பமூட்டும் வசதிகளுக்கான மின்கட்டணங்களை யுபிவிசி கதவுகளாலும், ஜன்னல்களாலும் 20 சதவீதம்வரைகூட குறைக்க முடியும்.

அத்துடன், மரத்துக்கு மாற்றாக யுபிவிசியால் எளிமையாகச் செயல்பட முடியும். அலுமினிய தயாரிப்பு போலவே இதன் தயாரிப்பையும் ஆற்றல் திறனுடன் செய்ய முடியும். இதன் தரமான சீலிங், சூழலியல் மாசுக்களான ஒலி, தூசி, புகை போன்றவை வீட்டுக்குள் வராமல் தடுக்கிறது.

குறைபாடுகள்

யுபிவிசியில் நிறைய நன்மைகள் இருந்தாலும், இதில் சில குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. யுபிவிசியில் குறைவான எடை விகிதம், அதன் வெளியேற்றும் முறை ஆற்றல் திறன்மிக்கதாக இருந்தாலும், அது நச்சுத்தன்மையுடன் இருக்கிறது. அத்துடன், அலுமினியம், ஸ்டீலுடன் ஒப்பிடும்போது இதன் ஆயுட்காலம் குறைவுதான். புறஊதா ஒளிவெளிப்பாட்டால் எளிமையாக இது நிறம் மாறிவிடுகிறது. “யுபிவிசியால் 80 டிகிரி செல்சியஸ் வரை தாங்க முடியும் என்றாலும், அதை 70 டிகிரி செல்சியஸுக்கு மேல் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுவதில்லை. இதன் வெப்பம் தாங்கும் திறனும் குறிப்பிட்டஅளவுக்கே இருக்கிறது. அத்துடன் மற்ற நெகிழியைவிட அடர்தன்மையுடன் இருக்கிறது” என்கிறார் ஸ்ரீபல் அண்ட் வெங்கட் அர்கிடெக்ட்ஸ் நிறுவனத்தின் வடிவமைப்பாளர் யாழினி ராமச்சந்திரன்.

இதேமாதிரியான பொருட்கள்

யுபிவிசியுடன் எந்த நவீனக் கட்டுமனானப் பொருட்களையும் ஒப்பிட முடியாது என்றாலும், சில பொருட்களில் இதே மாதிரி சில நன்மைகளை வழங்குகின்றன. கிளாஸ் ஃபைபர் ரீயன்ஃபோஸ்டு கான்கிரீட் (GFRC), ஃபைபர் ரீயன்ஃபோஸ்டு நெகிழி (FRP) போன்றவற்றையும் இதற்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். எச்டிபிஇ (HDPE) பைப்ஸ், அலுமினியம் பேனல்கள், கால்சியம் சிலிகேட் போர்ட்ஸ், ஜிப்சம், ஃபைபர் நெகிழி போன்றவையும் யுபிவிசிக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.

� தி இந்து ஆங்கிலம்

சுருக்கமாகத் தமிழில்: என். கௌரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x