Published : 19 Mar 2016 11:27 AM
Last Updated : 19 Mar 2016 11:27 AM
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ரியல் எஸ்டேட்’ மசோதா (ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி) மாநிலங்களவை, மக்களவை என இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கிறது. வீடு வாங்குபவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், துறையை மேலும் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புணர்வுடன் மாற்றும் நோக்கத்தில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருக்கிறது. வீடு வாங்குபவர்கள், விற்பவர்கள் என இரு தரப்புக்கும் ஒரு தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்த இந்த மசோதா உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2013-ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ‘ரியல் எஸ்டேட்’ மசோதா தற்போதைய அரசாங்கத்தால் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த மசோதா வீடு வாங்குபவர்களுக்கு ஆறு வழிகளில் உதவுகிறது.
தைரியமாகப் புகார் அளிக்கலாம்
இதுவரை, ரியல் எஸ்டேட் துறை என்பது இந்தியாவில் அமைப்புரீதியாக ஒழுங்கமைக்கப்படாத துறையாகத்தான் இருந்தது. இந்த மசோதா மாநிலங்கள் வாரியாக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்கள் (RERA) அமைக்க வழிசெய்திருக்கிறது. இந்த ஒழுங்குமுறை ஆணையம் ரியல் எஸ்டேட் துறையில் நடக்கும் பரிவர்த்தனைகளை அதிகாரபூர்வமாகக் கண்காணிக்கும்.
அதனால், வீடு வாங்குபவர்கள் இனிமேல் தங்களுடைய புகார்களையும், குறைகளையும் மாநில ஆர்இஆர்ஏ அதிகாரிகளிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம். எல்லா மாநிலங்களும் முறையாக ஒப்புதல் வழங்கியவுடன் இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையங்கள் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்படும். இந்த ஆணையம் ரியல் எஸ்டேட் துறையில் வர்த்தகம், குடியிருப்பு என இரண்டு விதமான பரிவர்த்தனைகளையும் கண்காணிக்கும். அத்துடன், வீடு வாங்குபவர்கள் சரியான தகவல்கள் பெறுவதற்கும் இந்த ஆணையம் உதவிசெய்யும்.
தாமதம் இருக்காது
இந்த மசோதாவின்படி, வீடு வாங்குபவர்களிடம் பெறப்படும் தொகையில் எழுபது சதவீதத்தைக் கட்டுநர்கள் வங்கியில் ஒரு தனிக்கணக்கில் எடுத்து வைக்க வேண்டும். அந்தத் தொகை கட்டுமானத் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இதுவரை கட்டுநர்கள் பலரும் வீடு வாங்குபவர்களிடம் பெறும் தொகையை வேறொரு புதிய திட்டத்தைத் தொடங்கப் பயன்படுத்திவந்தனர். இந்த நடைமுறை, திட்டங்கள் நிறைவேறுவதைத் தாமதப்படுத்தியது. ஆனால், இனிமேல் அப்படிச் செய்ய முடியாது. கட்டுநர்கள் சரியான நேரத்தில் வீடுகளை ஒப்படைக்கவில்லையென்றால், வீடு வாங்கியவர் வங்கியில் கட்டும் இஎம்ஐ தொகையின் வட்டியை முழுமையாக அவருக்குச் செலுத்த வேண்டியிருக்கும்.
பயன்படும் பகுதிக்கே மதிப்பு
கட்டுநர்களால் எந்தவொரு சொத்தையும் இனிமேல் அந்த இடத்தின் மதிப்பைக் காட்டி மட்டும் விற்க முடியாது. அதாவது, கட்டிட உட்பரப்புடன் கூடிய பொதுவான இடங்களான லிஃப்ட், படிக்கட்டுகள், முகப்பு போன்ற இடங்களை ஒன்றாகச் சேர்த்து கணக்கிட முடியாது. இதுவரை பல கட்டுநர்களும் ‘சூப்பர் பில்டப் ஏரியா’ எனப்படும் இந்தப் பொதுவான இடங்களையும் சேர்த்து மதிப்பிட்டே வீடுகளை விற்பனை செய்துவந்தனர். இந்த ‘சூப்பர் பில்டப் ஏரியா’ பகுதிகள் வீட்டின் தளப்பரப்பைவிட முப்பது சதவீதம் அதிகமாக இருக்கின்றன.
அதனால், இந்த மசோதாவில் வீடு வாங்குபவர்களால் உண்மையிலேயே பயன்படுத்தப்படும் கட்டிட உட்புறப் பகுதியை (Carpet Area) மட்டுமே மதிப்பிட வேண்டும் என்பது வரையறுக்கப்பட்டிருக்கிறது. ஒருவேளை, இந்த வரையறையை மீறி விற்பனை செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை தண்டனை வழங்கச் சட்டத்தில் இடமிருக்கிறது.
அதிகரித்திருக்கும் வெளிப்படைத்தன்மை
வீடுகளை விற்பவர்கள் தங்கள் திட்டத்தின் வரைபடம், ஒப்புதல், நிலத்தின் தற்போதைய நிலைமை, ஒப்பந்தக்காரர்கள், கால அட்டவணை, திட்டத்தின் நிறைவு என எல்லாத் தகவல்களையும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்திடம் (RERA) தெரிவிக்க வேண்டும். அத்துடன் வீடு வாங்குபவர்களிடமும் இந்தத் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.
500 சதுர அடிக்கு அதிகமாக இருக்கும் திட்டங்களும், எட்டுக் குடியிருப்புகளுக்கு அதிகமாக இருக்கும் திட்டங்களும் ஆர்இஆர்ஏவில் பதிவுசெய்யப்பட வேண்டும். இதனால், திட்டங்களை முடிப்பதில் வெளிப்படத்தன்மை அதிகரித்திருக்கிறது. திட்டத்தில் சொன்னபடி சரியான நேரத்தில் வீடுகளை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கவில்லையென்றால் திட்ட மதிப்பில் 10 சதவீதம் வரை கட்டுநர்கள் அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
வாங்கியதற்கு பிறகான சேவைகள்
வீடு வாங்கிய பிறகு, வீட்டில் ஏதாவது குறைகள் தென்பட்டால், கட்டுநர்களைத் தொடர்புகொள்ளவும் இந்த மசோதா வழிசெய்திருக்கிறது. அதனால் ஓராண்டு வரை, இந்த வீடு வாங்கியதற்குப் பிறகான சேவைகளை வாடிக்கையாளர்களால் பெற முடியும்.
விலையை மாற்ற முடியாது
கட்டுநர்களால் வாடிக்கையாளர் களின் ஒப்புதல் இல்லாமல் திட்டங்களை நினைத்த நேரத்தில் இனிமேல் மாற்ற முடியாது. இது கட்டுநர்கள் திட்டத்தின் மதிப்பை அடிக்கடி அதிகரிக்காமல் இருப்பதற்காகச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT