Last Updated : 05 Mar, 2016 12:10 PM

 

Published : 05 Mar 2016 12:10 PM
Last Updated : 05 Mar 2016 12:10 PM

அங்கீகாரம் பெற்ற மனை எது?

இன்று விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி வருகின்றன. வயல் வெளிகளாக இருந்த இடமெல்லாம் திடீரென்று மனைகளாக மாற்றப்பட்டு விற்கப்படுகின்றன. குறிப்பாகத் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகள் மனைகளாக மாறியதில் / மாறுவதில் முன்னணி வகின்றன. விளை நிலங்களை மனைகளாக மாற்றுவதில் உள்ள நடைமுறைகள் என்ன? மனைகளை உருவாக்கும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன? விதிமுறைகளைப் பின்பற்றிதான் மனைகள் உருவாக்கப்படுகின்றனவா?

தமிழ்நாடு முழுவதும் புறநகர்ப் பகுதிகளில் 25 ஆயிரம் ரூபாய், 35 ஆயிரம் ரூபாய் என மனைகள் கூறு போடப்பட்டு, அங்கீகாரம் பெற்ற மனை என்ற பெயரில் விற்கப்படுகின்றன. அதுவும் 400 சதுர அடி, 500 சதுர அடிகளில் மனைகள் விற்கப்படுகின்றன. இப்படி விற்கப்படும் மனைகளில் இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலில் அங்கீகாரம். அதாவது அப்ரூவல் அல்லது அங்கீகாரம் பெற்ற மனை எனக் குறிப்பிடுவார்கள். இது பெரும்பாலும் பஞ்சாயத்து அங்கீகாரமாகவே இருக்கும். சென்னை, சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகள் என்றால் சி.எம்.டி.ஏ. எனப்படும் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்தின் அங்கீகாரமாகவும், பிற தமிழகப் பகுதிகள் என்றால் டி.டீ.சி.பி. ( நகர ஊரமைப்பு இயக்ககம்) அங்கீகாரமாகவும் இருக்க வேண்டும். பிற அங்கீகாரம் என்றால் பிற்காலத்தில் பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

இன்னொன்று 400 சதுர அடி, 500 சதுர அடியில் வாங்கப்படும் மனைகளில் வீடு கட்ட முடியுமா என்று பார்க்க வேண்டும். எப்போது ஒரு மனையில் வீடு கட்ட வேண்டும் என்றால் பக்கத்து மனைகளுக்கு இடையே குறைந்தது 5 அடியை விட வேண்டும். அப்படி 5 அடியை விட்ட பிறகு எஞ்சிய மனை அளவில் வீடு கட்ட முடியுமா? அப்படிக் கட்டப்படும் வீட்டு வரை படத்துக்கு அங்கீகாரம் கிடைக்குமா என்பதையெல்லாம் தீர விசாரித்த பிறகே முடிவு எடுக்க வேண்டும். எனவே குறைந்த மனைகளை வாங்கும்போது இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதுபோன்ற புதிதாகக் காலி இடங்களையோ அல்லது விளை நிலங்களையோ மனைப் பிரிவுகளாகப் பிரிக்கும்போது மனைப் பிரிவுக்குள் சாலையைப் பிரிப்பார்கள். அப்படிப் பிரிக்கப்படும் சாலையின் அகலம் குறைந்தபட்சம் 23 அடி இருக்க வேண்டும். சில மனைப் பிரிவுகளில் 10 அடி, 8 அடி சாலை என்பது போல் லே அவுட் போட்டு விற்று விடவும் செய்கிறார்கள்.

சாலைக்காக மட்டுமல்ல கழிவு நீர் வடிகால்கள், தெரு விளக்குகள், பூங்கா, விளையாட்டு திடல், குடிநீர் தொட்டி போன்றவற்றை அமைக்கவும் இடம் ஒதுக்கிவிட்டுத்தான் லே அவுட் போட்டு மனைகளை விற்பனை செய்ய வேண்டும். நீங்கள் மனை வாங்கும்போது லே-அவுட்டில் இந்த விஷயங்கள் எல்லாம் பின்பற்றுள்ளனவா என்பதைச் சரி பார்த்துவிட்டு வாங்குவதே நல்லது. ஏனென்றால் மொத்த இடத்தில் சுமார் 30 சதவீத இடம் சாலை, பூங்கா அமைக்கவே போய்விடும் என்பதால் இதை கவனமாகப் பார்க்க வேண்டும். எனவே மனை வாங்கும்போது சாலையின் அகலம் மற்றும் மனையின் அளவைக் கவனிக்க மறந்துவிடாதீர்கள்.

இவற்றைவிட மிகவும் இன்னொரு முக்கிய விஷயம், பெரு நகர வளர்ச்சிக் குழுமத்துக்கு உள்பட்ட பகுதி என்றால் லே அவுட்டுக்கு அந்த அமைப்பின் அனுமதியும், டி.டீ.சி.பி-க்கு உட்பட்ட பகுதி என்றால் அந்த அமைப்பின் அனுமதியும் பெறப்பட்டுள்ளனவா என்பதையும் கவனிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x