Published : 05 Mar 2016 12:31 PM
Last Updated : 05 Mar 2016 12:31 PM
உலகிலேயே சுற்றுச்சூழல் மாசுபாடு மிக்க 20 நகரங்களின் பட்டியலை கிரீன் பீஸ் என்னும் அமைப்பு வெளியிட்டது. இதில் 13 நகரங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத் தகுந்தது. நாள்தோறும் பெருகிவரும் இந்தச் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க, ஐ.நா. ஒருங்கிணைத்த பருவ மாற்றம் தொடர்பான மாநாட்டில் இந்தியா உறுதிபூண்டது. அதன் தொடர்ச்சியாக இந்திய அரசு இந்த பட்ஜெட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செஸ் வரி (Clean Environtment Cess) என்னும் வரியை அறிவித்துள்ளது.
இந்த வரியால் நிலக்கரி விற்பனை அதிகமாக வாய்ப்புள்ளது எனச் சொல்லப்படுகிறது. அதாவது தற்போது உள்ள நிலக்கரி விலையிலிருந்து ஒரு டன்னுக்கு ரூ.200-ல் இருந்து ரூ.400 வரை கூடுதலாக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதனால் சிமெண்ட் விலையும் கூட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கட்டுமானத் துறை, நிலையில்லா கட்டுமானப் பொருள்கள் விலையேற்றம், கட்டுமான அனுமதி கிடைப்பதில் காலதாமதம் எனப் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் இந்த விலையேற்றம் மேலும் பாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடும் எனச் சொல்லப்படுகிறது. இது குறித்து அத்துறை சார் நிபுணர்களிடம் கேட்டோம்.
ஆத்தப்பன் பழநி, செயற்குழு உறுப்பினர், கோவைப் பொறியாளர் சங்கம்
சிமெண்ட் விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் ஏற்படுத்த வேண்டும் என்பது எங்களது நீண்ட கால கோரிக்கையாக இருந்துவருகிறது. ஆனால் அரசு அதை இந்த பட்ஜெட்டிலும் நிறைவேற்றவில்லை. மாசுக் கட்டுப்பாடு விஷயத்தில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கதே. ஆனால் இதுபோல வரி விதிப்பதன் மூலம் சுற்றுச்சூழலைக் கட்டுப்படுத்துவது முறையானது அல்ல. ஏனெனில் இதனால் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் சிமெண்ட் விலையை உயர்த்தும். நிலக்கரி விலை உயர்வதால் மின் கட்டணம் உயரும். இதனால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். அரசு வேறு முறைகளில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க வேண்டும். இதுபோல வரி விதிப்பதன் மூலம் கட்டுப்படுத்த நினைப்பது முறையானதல்ல.
ரஜீஸ்குமார், கன்னியாகுமரி மாவட்டக் கட்டுமான சங்கத் தலைவர்
பொதுவாக இந்த பட்ஜெட் எங்களுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. கட்டுமானப் பொருள்களை அத்தியாவசியமான பொருள்களாக அறிவிக்கக் கோரியிருந்தோம். மேலும் கட்டுமானப் பொருள்களில் நிலையில்லா விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது எங்களது நீண்ட காலக் கோரிக்கையாக இருந்துவருகிறது. ஆனால் அரசு இப்படிப் புதிய வரியை விதித்திருப்பதன் மூலம் சிமெண்ட் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கட்டுமானத் துறை பல சிக்கல்களில் இருக்கிறது.
சிட்டி பாபு, முதன்மை செயல் அதிகாரி, அக்ஷயா ஹோம்ஸ்
இந்த பட்ஜெட் கட்டுமானத் துறைக்கு உற்சாகம் ஊட்டும் பல அம்சங்கள் கொண்டது. கட்டமைப்புக்காக 2.21 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு வருமான வரியில் கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரை சலுகை அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இது கட்டுமானத் துறை வளர்ச்சிக்கு வழி வகுக்கும். ஆனால் கட்டுமானப் பொருள்கள் குறித்தும், கட்டுமானத்துக்கான அனுமதியை ஒற்றைச் சாளர வழியில் வழங்குவது குறித்தும் அறிவிப்பில்லாதது ஏமாற்றம். சுற்றுச்சூழல் பாதுகாப்பு செஸ் வரியால் சிமெண்ட் விலை உயராது. ஏற்கனவே சிமெண்ட் நிறுவனங்களுக்கு மானிய அடிப்படையில்தான் நிலக்கரி வழங்கப்பட்டு வருகிறது. அதனால் விலை உயர வாப்பிருப்பது போலத் தோன்றவில்லை.
இசக்கி, தேசியக் குழு உறுப்பினர், இந்தியக் கட்டுமான சங்கம்
சுற்றுச்சூழல் மாசுபாடு இந்தியாவைவிடச் சீனாவில்தான் அதிகமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி சீனாவின் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்திருக்கிறது. இப்போது இந்தியாதான் முதலிடத்தில் இருக்கிறது. சீன அரசு, மாசுபாட்டைத் தடுக்க இதுபோல வரிகளை விதிக்கவில்லை. மாறாக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்திய அரசும் அதுபோன்ற வழிமுறைகளில் மாசுபாட்டைக் குறைக்க வேண்டுமே தவிர விதிகளை விதிப்பது முறையான நடவடிக்கை அல்ல. மேலும் இம்மாதிரியான வரி விதிப்பால் சிமெண்ட் விலை மட்டுமல்லாது, மின் கட்டணமும் கூடும். மின் கட்டணம் கூடினால் கட்டுமானக் கம்பியின் விலையும் கூட வாய்ப்புள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் பலவற்றின் விலையும் கூடும்.
இந்த வரி விதிப்பின் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க முடியுமா என்பது முக்கியமான கேள்விதான். இது ஒரு பக்கம் இருந்தாலும் முக்கியமான கட்டுமானப் பொருளான சிமெண்ட் விலை உயருவது தவிர்க்க முடியாதது என்றே சொல்லப்படுகிறது. ஆனால் சிமெண்ட் விலை உயர்வு மிக அதிகமாக இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. அதாவது ஒரு டன்னுக்கு 18 ரூபாயில் இருந்து 19 ரூபாய் வரைதான் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்கிறார்கள் துறைசார் நிபுணர்கள். ஐம்பது கிலோவுக்கு 2 ரூபாய் வரைதான் கூடும் எனவும் சொல்லப்படுகிறது.
சிட்டி பாபு,ஆத்தப்பன் பழநி, ரஜீஸ்குமார், இசக்கி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT