Last Updated : 27 Feb, 2016 12:40 PM

 

Published : 27 Feb 2016 12:40 PM
Last Updated : 27 Feb 2016 12:40 PM

விதிமுறைகளைக் கடுமையாக்குமா சிஎம்டிஏ?

நீர் நிலைகள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதிகள், இருப்புப்பாதைகள், பாரம்பரிய கட்டிடங்கள் ஆகியவற்றின் அருகே குறிப்பிட்ட தொலைவுவரை கட்டிடங்களைக் கட்டுவதைத் தடுக்கும் வகையிலான விதிகளைப் பல இந்திய மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன. எனினும் இத்தகைய விதிகள் தமிழ்நாட்டில் அமலாக்கப்படவில்லை. இதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பான பல கட்டிடங்கள் தமிழ்நாட்டில் எழுப்பப்பட்டுள்ளன. மாம்பலம், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் இருப்புப் பாதைகளை ஒட்டிய கட்டிடங்களை இதற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இதைப் போல கொட்டிவாக்கம், சைதாப்பேட்டை, போன்ற பகுதிகளின் கட்டிடங்களையும் திருவான்மியூரில் கடற்கரையை ஒட்டிய கட்டிடங்களையும், பாரி முனை, மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் பாதுகாக்கும் கட்டிடங்களை ஒட்டிய கட்டிடங்களையும் குறிப்பிடலாம்.

விதிகள்

கட்டுமானம் தொடர்பான விதிகளை 1970-களிலும், 80-களிலும் உருவாக்கியதில் சென்னைப் பெருநகர வளர்ச்சி அதிகாரக் குழுவுக்கே முக்கியப் பங்குண்டு. “இந்த விதிமுறைகளை வழிநடத்தை விதிகளாகப் பிற தென் மாநிலங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. நாளாக நாளாக, இங்கே விதிகளை முறையாக அமல்படுத்தாததால் சட்டத்துக்குப் புறம்பான கட்டிடங்கள் பெருகிவிட்டன” என்கிறார் கட்டிடக் கலைநிபுணரான சேவியர் பெனடிக். புதிய கட்டிடங்களை உருவாக்குவது, பழைய கட்டிடங்களை மாற்றியமைப்பது தொடர்பாக, தெளிவான விதிமுறைகளைப் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சட்டம் (2010) வரையறுத்துள்ளது. ஒரு பாரம்பரியக் கட்டிடத்தைச் சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் புதிய கட்டிடம் எழுப்பக் கூடாது என்கிறது அது.

கட்டுமானம் தொடர்பான விதிகளை 1970-களிலும், 80-களிலும் உருவாக்கியதில் சென்னைப் பெருநகர வளர்ச்சி அதிகாரக் குழுவுக்கே முக்கியப் பங்குண்டு. “இந்த விதிமுறைகளை வழிநடத்தை விதிகளாகப் பிற தென் மாநிலங்கள் எடுத்துக்கொண்டிருக்கின்றன. நாளாக நாளாக, இங்கே விதிகளை முறையாக அமல்படுத்தாததால் சட்டத்துக்குப் புறம்பான கட்டிடங்கள் பெருகிவிட்டன” என்கிறார் கட்டிடக் கலைநிபுணரான சேவியர் பெனடிக். புதிய கட்டிடங்களை உருவாக்குவது, பழைய கட்டிடங்களை மாற்றியமைப்பது தொடர்பாக, தெளிவான விதிமுறைகளைப் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சட்டம் (2010) வரையறுத்துள்ளது. ஒரு பாரம்பரியக் கட்டிடத்தைச் சுற்றி 200 மீட்டர் சுற்றளவில் புதிய கட்டிடம் எழுப்பக் கூடாது என்கிறது அது.

பாரம்பரியக் கட்டிடத்தின் மராமத்துப் பணிகளையும், பழுது நீக்கப் பணிகளையும் பாரம்பரியப் பாதுகாப்புக் குழு ஒழுங்குபடுத்தியுள்ளது. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில், 100 மீட்டர் சுற்றளவில் கட்டிடம் எழுப்புவதைத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் அனுமதிப்பதில்லை. இந்திய ரயில்வே துறைக் கையேடு, இருப்புப் பாதை எல்லைக்கும் அதை ஒட்டிய நிலங்களில் எழுப்பப்பட்ட கட்டிட எல்லைக்கும் இடையே 30 மீட்டர் இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் என்று கட்டளையிடுகிறது.

நீர்நிலைகளை ஒட்டிய கட்டிடங்கள்

தமிழ்நாட்டில், உள்ளாட்சி அமைப்பின் அதிகாரக் குழுவிடமிருந்தோ ஆணையரிடமிருந்தோ, செயல்திட்ட அதிகாரியிடமிருந்தோ ஒருவர் தடையில்லாச் சான்றிதழ் பெற்றுவிட்டால் நீர் நிலைகளின் எல்லையிலிருந்து 15 மீட்டர் தூரத்தில் கட்டிடங்களை எழுப்பிக்கொள்ள அவரால் முடியும். நிலத்தடி நீரூறும் பகுதிகளில் காலி மனையின் பரப்பு குறைந்தபட்சம் 440 சதுர மீட்டராக இருக்க வேண்டும். கட்டிட முகப்புப் பகுதியில் 15 மீட்டர் இடம்விட வேண்டும். அதிகபட்ச கட்டிட தளப் பரப்புக் குறியீடு 0.8 ஆக இருக்க வேண்டும். கட்டிடத்தின் உயரம் 8.5 மீட்டரைத் தாண்டக் கூடாது. காலி மனையில் அதிகபட்சமாக 40 சதவீத இடத்தையே கட்டிடத்துக்காகப் பயன்படுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டிடத் தளப் பரப்புக் குறியீடும், குறித்த அளவு காலி மனைப் பயன்பாடும் நிலத்தடி நீர் ஊறுவதற்கு உதவும், இந்த ஒழுங்கைக் கடைப்பிடிக்காவிட்டால் நீர் ஆதார வளம் குன்றிவிடும். இந்த விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்காததாலேயே பெரும்பாலான பிரச்சினைகள் உருவாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

“இது தொடர்பான விழிப்புணர்வை உருவாக்கப் பல வேலைகளைச் செய்ய வேண்டும். பெரும்பாலானோர் நீர் நிலைகளின் எல்லை பற்றியும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைப் பற்றியும் மிகக் குறைவாகவே அறிந்துவைத்திருக்கிறார்கள். வனத்தைப் பாதுகாப்பதுபோல் நாம் நீர் நிலைகளையும், அதன் கடினமான விதிமுறைகளுடன், பாதுகாக்க வேண்டியதிருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்” என்கிறார் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரும், இந்தியச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அறக்கட்டளையின் (Environmentalist Foundation of India) நிறுவனருமான அருண் கிருஷ்ணமூர்த்தி.

கடலோர ஒழுங்கமைப்பு பகுதிகளின் விதிகள்

சிஎம்டிஏ ஒரு கட்டிடம் கட்ட அனுமதி வழங்குவதற்கு முன்னர் அதன் அனைத்து அளவுகளையும் சோதித்து அறிகிறது. உச்சபட்ச உயரமும் கட்டிட தளக் குறியீடும் கடலோர ஒழுங்கமைப்புப் பகுதிகளில் வேறுபடுகிறது. கட்டிடத் தளக் குறியீடு 0.8 முதல் 2.5 வரை உள்ளது. அனுமதிகள் பின்வரும் நிபந்தனைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன: கடலோர ஒழுங்கமைப்புப் பகுதிகளில் மறு கட்டுமானம் மேற்கொள்ளப்படும்போது, ஏற்கனவே இருந்த வீடுகளைவிட இரு மடங்குக்கு மேல் உருவாக்கக் கூடாது. எல்லாத் தளங்களையும் சேர்த்து மொத்தப் பரப்பு 9 மீட்டருக்கு அதிகமாக இருக்கக் கூடாது. தரைத்தளத்தையும் சேர்த்து இரண்டு தளங்களுக்கு மேல் கட்டி எழுப்பக் கூடாது. கட்டுநர்கள் பலர் கடலோரப் பகுதியில் புதிதாகக் கட்டிடங்களை உருவாக்கவோ அல்லது பழைய கட்டிடங்களை மறு கட்டமைப்பு செய்யவோ விரும்புகிறார்கள் ஆனால் கடலோர ஒழுங்கமைப்புப் பகுதிகளில் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகளின் காரணமாக அத்தகைய திட்டங்கள் அவர்களுக்குச் சாத்தியப்படவில்லை.

துரதிர்ஷ்டவசமாக சிஎம்டிஏ சமீப காலங்களில் கடலோரப் பகுதிகளில் குடியிருப்புத் திட்டங்களை அனுமதிக்கத் தொடங்கியுள்ளது. கடற்கரைச் சாலைகளில் கடலை நோக்கியபடியான கட்டிடங்களை உருவாக்க சிஎம்டிஏ அனுமதிப்பதில்லை, ஆனால் அந்தச் சாலைகள் 1991-ம் ஆண்டுக்கு முன்னரே உருவாக்கப்பட்டிருந்தால் புது கட்டுமானத்துக்கு அனுமதி கிடைத்துவிடுகிறது என்கிறார் ஜேஎல்எல்லைச் சேர்ந்த சங்கர்.

சுற்றுச்சூழல் தாக்கம்

சுற்றுச்சூழல்ரீதியில் முக்கியத்துவம் பெற்ற பகுதிகளில் மட்டற்ற, சோதித்தறியாத கட்டிடங்களின் உருவாக்கம் சுற்றுச்சூழலின் தரத்தைக் குறைக்கவே வழியமைக்கிறது. அது மட்டுமல்ல நகரத்தின் வளர்ச்சியிலும் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சட்டத்துக்குப் புறம்பாகக் கட்டிடங்களைத் தொடர்ந்து எழுப்பிவருவது சமீபத்தில் சென்னை உள்ளிட்ட மூன்று மாவங்களில் ஏற்பட்ட பெருவெள்ளம் போன்ற பேரழிவுகளுக்கே வழிவகுக்கும். பருவமழைகளின்போது தண்ணீர் தேங்குவது, மாசுக் குறைபாடு அதிகரிப்பு, சதுப்பு நிலம் சுருங்குவது ஆகியவை கட்டுமான விதிகளை மீறுவதாலேயே உருவாகின்றன. “இந்த விதிகளை அமல்படுத்துவது மிகவும் எளிதுதான் ஏனெனில் விதிகளை மீறியதன் காரணமாக சமீப வெள்ளத்தின் போது அதிக விலையை மக்கள் தந்துள்ளார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள்” என்கிறார் சங்கர். இந்த விதிகளைக் கடைப்பிடிப்பதில் குடிமக்களும் ஆர்வத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

© தி இந்து ஆங்கிலம் சுருக்கமாகத் தமிழில்: ரிஷி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x