Last Updated : 27 Feb, 2016 12:15 PM

 

Published : 27 Feb 2016 12:15 PM
Last Updated : 27 Feb 2016 12:15 PM

மரபு இல்லங்கள்-3: பூகம்பம் தாங்கும் புங்கா வீடுகள்

இந்தியாவில் நடந்த மிகப் பெரிய நிலநடுக்கங்களில் ஒன்று கட்ச் பூகம்பம். 1819-ம் ஆண்டு நடந்த இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் எட்டாகப் பதிவாகியது. அதுவரை நடந்த பூகம்பங்களில் இதுவே அதிகமான ரிக்டர் அளவாகும். இந்த பூகம்பம் இன்றைய குஜராத் மாநிலத்தில் கட்ச் மாவட்டத்தில் நடந்தது. இதில் தேரா, காத்ரா, மோதலா ஆகிய நகரங்களின் வீடுகள் முழுவதுமாக மண்ணில் புதையுண்டன. இந்த பூகம்பப் பாதிப்புக்குப் பிறகு அந்தப் பகுதி கொத்தனார்கள் கூடி பூகம்பம் பாதிக்காத வகையில் வீடுகளை வடிவமைக்க ஆலோசித்தனர். அவர்கள் தங்களின் பழைய கட்டிடக் கலையில் இருந்து மண் வீடுகளின் தொழில்நுட்பத்தைக் கொண்டு புதிய வகையில் வீடுகளை உருவாக்கத் தொடங்கினர். அவை புங்கா வீடுகள் என அழைக்கப்பட்டன.

உள்ளூர்த் தொழில்நுட்பம்

கிராமப்புற வீடுகளான இந்தப் புங்கா வீடுகள் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தின் வடபகுதியில்தான் பெருமளவு கட்டப்பட்டன. குறிப்பாக பந்நி, பச்சாவ் ஆகிய பகுதிகளில்தான் அதிகம் கட்டப்பட்டன. ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் இந்த வீடு கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்தவர்களாக இருந்தனர். அவர்கள் மூலம் கட்ச் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் இந்த புங்கா வீடுகள் கட்டப்பட்டன.

பந்நி பகுதி, களி மண் நிறைந்த பகுதி. அந்தப் பகுதியில் கற்களும் ஜல்லிகளும் கிடையாது. இதனால் கட்டுமானத்துக்குக் களிமண்தான் பயன்படுத்த வேண்டிய சூழல். அதுபோல இந்தப் பகுதியில் பல வகையான மரங்களும் புற்களும் கிடைக்கின்றன. இவற்றையும் கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்த முடியும். ஆக இந்தப் பகுதியில் கட்டப்படும் புங்கா வீடுகள், களிமண்ணையும் மரங்களையும் புற்களையும் கொண்டுதான் கட்டப்படுகின்றன.

புங்கா வீடுகளின் சிறப்பம்சம் கட்டுமானப் பொருள்களை மற்ற பகுதிகளில் இருந்து தருவிப்பதில்லை. அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் பொருள்களே கட்டுமானப் பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

பச்சாவ் பகுதி உப்புப் பாலைவனப் பகுதியாகும். இங்கு காலோ துங்கர், கரோ துங்கர் என்னும் இரு மலைகளும் உள்ளன. இந்தப் பகுதியில் சுண்ணாம்புக் கற்கள் அதிக அளவில் கிடைக்கின்றன. இந்தப் பகுதியில் கட்டப்படும் புங்கா வீடுகள் சுண்ணாம்புக் கற்களைக் கட்டுமானப் பொருள்களாகக் கொள்கின்றன.

பூகம்பம் தாங்கும் அமைப்பு

பல அறைகளின் தொகுப்பாக இந்த புங்கா வீடுகள் உள்ளன. ‘வாஸ்’ என அழைக்கப்படும் தாழ்வாரம் ஒவ்வொரு புங்காவையும் இணைப்பதற்குப் பயன்படுகிறது. இந்தத் தாழ்வாரப் பகுதிகளில்தான் அவர்களின் பெரும்பாலான தினசரி வேலைகள் நடைபெறுகின்றன. ஒரு புங்காவுக்குள் எந்த அறையும் கிடையாது. படுக்கையறையாக ஒரு புங்காவும் வரவேற்பறையாகவும் ஒரு புங்காவும் பயன்படுத்தப்படுவதுண்டு. சமையலறைப் புங்கா, ‘ரன்தனியூ’, என அழைக்கப்படுகிறது. குடும்பத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமானால் புங்காக்கள் புதிதாக உருவாக்கப்படும்.

புங்கா வீடுகளின் அமைப்பு கால நிலைகளுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொள்ளும் நுட்பம் பெற்றவை. குஜராத்தின் இந்த வடபகுதி பாலை நிலைப் பகுதியாகும். அதனால் அதிக வெப்பம் வீட்டுக்குள் இறங்காத வண்ணம் இந்த வீடுகளின் தொழில் நுட்பம் உள்ளது. ஒரே ஒரு அறை கொண்ட புங்கா வீடுகளின் சுவர்கள் அடர்த்தியானவை. மேற்கூரை வெப்பத்தைக் கடத்தா வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். புங்காவின் சுவர்களின் காற்றும் வெளிச்சமும் வருவதற்காக ஜன்னல்கள் உண்டு.

மூலையற்ற வீடுகள்

மூலை அமைப்பு, பொதுவாக பூகம்பத்தால் வீடுகள் பாதிகப்பட ஒரு காரணமாக ஆகிறது. அதனால் புங்கா வீடுகள் வட்ட வடிமாகக் கட்டப்படுகின்றன. அதுபோல நீளம் குறைந்த சுவர்கள் பயன்படுத்தப்படுவதால் பூகம்பத்துக்கு எதிரான நிலைத்தன்மை கட்டிடத்துக்குக் கிடைக்கிறது. புற்கள் அல்லது ஓலையால் மேற்கூரை அமைப்பதால் கூரையின் பளு குறைவு. அதனால் பூகம்ப அதிர்ச்சியில் மேற்கூரை விழ வாய்ப்பு குறைவு. 2001-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த பூகம்பத்தில் புங்கா வீடுகள் பாதிப்படையவில்லை என்பதிலிருந்து இந்த வீட்டின் உறுதி நிரூபணமாகியுள்ளது.

புங்காக்கள் பாதுகாப்பனவை மட்டுமல்ல; அழகானவை. தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் பெண்கள் வீட்டின் புறச் சுவர்களில் அழகான வண்ணம் தீட்டுகிறார்கள். உள்ளே கண்ணாடிச் சில்லுகள் கொண்டு பூ வடிவத்தில் சித்திரங்கள் உருவாக்குகிறார்கள். புங்கா வீடுகளின் அமைப்பு இன்று குஜராத்தையும் தாண்டிப் பிரபலம் அடைந்திருக்கிறது. இந்த அமைப்பு முறையில் இன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கத்தில் தங்கும் விடுதிகளும் கட்டப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x