Published : 28 Jun 2014 01:14 AM
Last Updated : 28 Jun 2014 01:14 AM
சென்னையின் மையப் பகுதியில் வீடு விலை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு சூளைமேடு, கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் போன்ற பகுதிகளில் 10 லட்சமாக இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வீடுகளின் விலை இன்று ரூ. 50, 60 லட்சங்களாக விண்ணை முட்டி நிற்கிறது. நடுத்தரமான வருமானம் பெறும் குடும்பங்களின் சொந்த வீடு கனவு, நனவாகமலேயே போகக் கூடும் என்ற நிலையே இன்றைக்கு நிலவுகிறது. இந்த நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில ரியல் எஸ்டேட் கட்டுமான நிறுவனங்கள் ஸ்ரீபெரும்புத்தூரில் நிறுவனப் பலகைகள் நடுத்தர வருமானம் பெறுவோருக்காக குடியிருப்புகளை உருவாக்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் ஆகிய புறநகர்ப் பகுதிகளில் உருவாகி யுள்ள புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் சென்னைக்குள் வீடு வாங்க முடியாத நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.
இது ஒரு புறம் இருக்க, இந்தப் பகுதியில் அதிக அளவில் உள்ள பெருவாரியான தொழிற்கூடங்களாலும் ஓரகடம், ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் வளர்ச்சித் துரிதமடைந்துவருகிறது. மேலும் இங்கு அதிக அளவில் தொழிற்கூடங்கள் இருப்பதால் அத்தியாவசியமான அடிப்படை வசதிகளும் ஏற்கனவே உருவாகியுள்ளன. இவற்றை மையமாக வைத்து 10 - 15 கிலோ மீட்டர் தொலைவில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் பெருகிவருகின்றன. பெரும்பாலும் இந்த நிறுவனத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப, கடைநிலை ஊழியர்கள் போன்ற குறைந்த வருமான உடையவர்களை இலக்காகக் கொண்டே வளர்ந்து வருகிறது. இது தவிர சென்னையின் மத்தியப் பகுதியில் பணியாற்றும் மற்ற நடுத்தர மக்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில் இந்தப் பகுதியில் குடியிருப்புகள் இருப்பதால் அவர்களும் வீடு வாங்குவது பெருகிவருகிறது. 10 லட்சத்தில் இருந்து 50 லட்சம் வரை இந்தப் பகுதியில் வீடுகள் விற்பனைக்கு உள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் சில ஆண்டுகளாகப் பெரிய வளர்ச்சியைப் பெற்று வரும் பகுதி. பொதுவாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒ.எம்.ஆர் சாலையில்தான் பெரிய வில்லா மற்றும் டவுன்ஷிப் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் இப்போது ஸ்ரீபெரும்புதூர் பகுதியைப் பெரும் கட்டுமானங்கள் கவனம் செலுத்துகின்றன. பெரிய டவுன்ஷிப் திட்டங்கள் ஒரகடம், படப்பை, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றப் பட்டுள்ளன. இன்னும் பல திட்டங்கள் புதிதாகத் தொடங்கப்பட இருக்கின்றன. தொழிற்கூடங்கள் தங்கள் பணியாளர்களை இந்தப் பகுதியில் வீடு வாங்க ஊக்கப்படுத்துகின்றன. ஏனெனில் அவர்கள் இப்போது வசிக்கும் இடத்தில் இருந்து தொழிற்கூட வாகனங்களில் அவர்கள் வரக் கால தாமதமும், டீசல் வகையில் பொருளாதார இழப்பும் ஏற்படுகின்றன. பெரும்பாலான பணியாளர்கள் 50-60 கிலோ மீட்டர் தொலைவில் வசிக்கிறார்கள். ஸ்ரீபெரும் புதூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உருவாக்கப்பட்டுள்ள டவுன்ஷிப் திட்டங்களில் 12 லட்சத்திலிருந்து 30 லட்சம் வரை மதிப்புள்ள வீடுகள் விற்பனைக்கு உள்ளன. குறைந்த விலையிலான வீடுகளுக்கு இந்தப் பகுதியில் மேலும் தேவைகள் உருவாகும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment