Published : 19 Dec 2015 11:16 AM
Last Updated : 19 Dec 2015 11:16 AM
சென்னையிலும் கடலூரிலும் குடியிருப்புகளைச் சுற்றியும், வீட்டுக்குள்ளும் புகுந்த வெள்ள நீர் வடிந்துவிட்டது. ஆனால், அந்த வெள்ள நீர் ஏற்படுத்திய பாதிப்பு மட்டும் இன்னும் நீங்கவில்லை. சேறு சகதிகளை வாரி இழுத்துவந்த வீடுகளில் வெள்ள நீர் விட்டுச் சென்றது. தேங்கிய வெள்ள நீரினால் சுவர்களில் ஈரக்கசிவு எனப் பல பிரச்சினைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. அஸ்திவாரம் எப்படி இருக்குமோ என்ற கேள்வியும் எழும். வீட்டுக்குள்ளோ அல்லது குடியிருப்புகளைச் சுற்றியோ வெள்ளம் சூழ்ந்தால், அந்த வீட்டில் குடியேறும் முன் சில வழிமுறைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும். அப்படி என்னென்ன வழிமுறைகள் உள்ளன?
# வெள்ள நீர் தேங்கிய வீடு மற்றும் குடியிருப்புக் கட்டிடங்களின் உறுதி தன்மையை சிவில் பொறியாளரைக் கொண்டு நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும். அஸ்திவாரத்தில் தண்ணீர் புகுந்தால் அதன் பூச்சு சேதாரம் ஆகலாம். எனவே கட்டிடம் உறுதித் தன்மையை இழக்கலாம் என்பதால் உறுதித் தன்மை ஆய்வு நிச்சயம் தேவை.
# தண்ணீர் வடிந்துவிட்டதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று விட்டுவிடக் கூடாது. அடித்தளம், கார் பார்க்கிங் பகுதிகளில் உள்ள சுவர்களையும், அஸ்திவாரத்தையும் நுணுக்கமாக ஆய்வு செய்து உறுதித் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
# வீட்டுக்குள் வெள்ள நீர் தேங்கி வடிந்த பிறகு முதலில் வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்ய வேண்டும். சேறு, சகதியை அகற்றுவது வீட்டை அகற்றுவது கஷ்டம் என்றாலும் முழுமையாக அகற்றியே தீர வேண்டும். வீட்டில் உள்ள பொருட்களைத் தண்ணீரை அழுத்தமாக பீய்ச்சி அடித்து சுத்தம் செய்ய வேண்டும்.
# வீட்டுக்குள் மின் இணைப்புகள் பாழாகியிருக்கும். வயரிங் குழாய்களில் தண்ணீர் புகுந்துள்ளனவா என்பதை எலட்ரீஷியனைக் கொண்டு பார்வையிட வேண்டும். மின் இணைப்பு உள்ள பகுதிகளில் ஈரக்கசிவு இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். ஏதேனும் பிரச்சினை இருந்தால் எலக்ட்ரீஷியன் உதவியுடன்தான் சரி செய்ய வேண்டும். நீங்களாகவே எதையும் செய்யக் கூடாது.
# சென்னை போன்ற புறநகர்ப் பகுதிகளில் லாரி தண்ணீரை சம்ப் மூலம் தேக்கி வைப்பார்கள். இதேபோல செப்டிக் டேங்கையும் தனியாக வைத்திருப்பார்கள். வெள்ள நீர் சம்ப் (கீழ் நிலைத் தொட்டி), செப்டிக் டேங்க்கில் புகுந்து எல்லாமும் ஒன்றாகக் கலந்திருக்கும்.
எனவே நீரைத் தேக்கி வைத்துள்ள சம்ப் டேங்கை சுத்தம் செய்ய வேண்டும். பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்த பிறகு தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு சேமிக்கும் தண்ணீரில் குளோரின் மாத்திரை அல்லது திரவத்தைச் செலுத்திய பிறகே தண்ணீரைப் பயன்படுத்தவும். இந்தப் பணிக்குக் கட்டிடப் பணியில் உள்ளவர்களைப் பயன்படுத்துவது நல்லது.
# குடிநீர், கழிவு நீர் குழாய் இணைப்புகளைச் சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் குழாயில் வெள்ள நீரும் கழிவு நீரும் கலந்து இருக்கலாம். அவற்றை பிளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.
ஒரு வீட்டில் வெள்ள நீர் சூழ்ந்தால் அதன் பாதிப்பிலிருந்து மீள்வது கொஞ்சம் கடினம்தான். செலவுகளையும் வைத்துவிட்டு சென்றுவிடும். வெள்ளம் வடிந்ததால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைத்துவிடக்கூடாது. குடியிருக்கும் வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதால் மேற்சொன்ன ஆய்வுகளும் பணிகளும் நிச்சயம் செய்தே தீர வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT