Published : 19 Dec 2015 11:01 AM
Last Updated : 19 Dec 2015 11:01 AM
மழைநீர் சேகரிப்பு பற்றிக் கடந்த பத்தாண்டு களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வந்திருந்தாலும், அதற்குரிய முக்கியத்துவத்தை நாம் கொடுக்கத் தவறிவிட்டோம். மக்களிடையே அதைப் பற்றி பொதுவான விழிப்புணர்வு இருந்தாலும், மழைநீர் சேகரிப்பை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பதைப் பற்றிய முக்கியத் தகவல்கள் அனைவரையும் சென்றடையவில்லை.
அது மட்டுமல்லாமல், மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பை உருவாக்குவதுடன் வேலை முடிந்து விடுவதில்லை. தொடர்ச்சியாகச் சரியாகப் பராமரித்தால்தான், அதற்குரிய பலன் கிடைக்கும்.
யார் பொறுப்பு?
நகர்ப்புறத்தில் வாழும் பலரும் மழைநீர் சேகரிப்பைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இதற்கு முக்கியக் காரணம் ஆங்கிலத்தில் இதை ஹார்வெஸ்ட்டிங் (Rainwater Harvesting) என்று அழைப்பதுதான். தமிழில் இதற்கு அறுவடை என்று அர்த்தம். அறுவடை என்றால் கிராமப்புறங்களுக்கானது என்றும், விவசாயிகள்தான் தண்ணீரைச் சேகரிக்க வேண்டும், நாம் தண்ணீரைச் சேகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று தவறாகப் புரிந்துகொள்கிறார்கள்.
நகர்ப்புறங்களில் வாழும் வேறு சிலர், மழைநீர் சேகரிப்பை அரசுதான் செய்ய வேண்டும், நாம் செய்யத் தேவையில்லை என்று நினைக்கிறார்கள். இந்தக் கருத்து நூறு வருடங்களுக்கு முன்பு பொருத்தமாக இருந்திருக்கலாம். அந்தக் காலத்தில் பொது இடங்களில் இருந்த ஊருணிகளிலிருந்தும், கிணறுகளிலிருந்தும் தமக்குத் தேவையான தண்ணீரை எடுத்து மக்கள் பயன்படுத்தி வந்திருப்பார்கள். அப்போது மழைநீர் சேகரிப்பைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, அரசினுடையதாக இருந்தது. கடந்த நாற்பது, ஐம்பது ஆண்டுகளாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு திறந்த அல்லது ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப்படுகிறது. இதைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு வீட்டுச் சொந்தக்காரரையே சாரும்.
இரண்டு வகை
இந்தப் பின்னணியில், மழைநீர் சேகரிப்பு என்றால் மழை பெய்யும் காலத்தில், பெய்யும் இடங்களிலேயே மழைநீரைச் சேகரித்து, மழை பெய்யாத காலத்தில் நன்னீர் தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதுதான்.
மழைநீர் சேகரிப்பு இரண்டு வகைப்படும். ஒன்று உடனடி தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகச் சேமிப்பது. இரண்டு, மழைநீரைப் பூமியில் செலுத்தி, நிலத்தடி நீராகச் சேமிப்பது.
இதைக் கிராமப்புறங்களில் ஒருவிதமாகவும் நகர்ப்புறங்களில் வேறு விதமாகவும்தான் செய்ய முடியும். கிராமப்புறங்களில் திறந்த வெளிகள் அதிகமாக இருப்பதால் ஏரி, ஊருணி, குளம், குட்டை போன்றவற்றில் சேமித்து உடனடித் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம். மாறாக, நகர்ப்புறங்களில் திறந்த வெளிகள் குறைந்துகொண்டுவருவதால், மழைநீரை நிலத்தடி நீராக சேமிக்க மட்டுமே வாய்ப்பிருக்கிறது. நகர்ப்புறத்தில் உடனடித் தேவைக்கு வேண்டுமென்றால் மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை நிலத்தடி நீர்த் தொட்டியில் சேமிக்கலாம்.
மழைநீர் சேகரிப்பு தொடர்பான அனைத்து விவரங்கள், இலவச ஆலோசனைகளுக்கு சென்னை மந்தைவெளியில் உள்ள மழை இல்லத்தை அணுகலாம்:
மழை இல்லம், 4, மூன்றாவது டிரஸ்ட் லிங்க் தெரு, மந்தைவெளி (பட்டினப்பாக்கம் அருகில்), சென்னை - 600028. இணையதளம்: >www.raincentre.net
(அடுத்த வாரம்: ஏரி: காவலர்களும் கைவிட்டவர்களும்)
கட்டுரையாளர், மழை இல்லத்தின் இயக்குநர்
தொடர்புக்கு: sekar1479@yahoo.co.in / 96770 43869
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT