Published : 19 Dec 2015 11:05 AM
Last Updated : 19 Dec 2015 11:05 AM
வணிக வளாகங்களின் உள்ளே நுழைந்தவுடன் குளிர்காற்று முகத்தில் அறைந்து வரவேற்கிறது. கடைகள், பாதைகள், மாடிப்படிகள் மட்டுமல்லாது இண்டு இடுக்குகளிலும்கூட குளிர்வசதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த வளாகங்களின் வெளிப்புறமோ வெக்கையை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறது. பக்கத்துக் கட்டிடங்களில் இருப்பவர்கள் ஜன்னலைத் திறந்தால் உள்ளே நுழையும் வெப்பத்தில் அவிந்தே போவார்கள். எனவே அவர்களும் விரைவில் குளிர்வசதியை நாட ஆரம்பிக்கிறார்கள். இப்படியே தொடர்சங்கிலிப் பிணைப்பாய் மொத்த நகரமும் ஒரு மைக்ரோ ஓவனைப்போல் வெப்பம் கொண்டதாக மாறிவிட்டது.
பெரிய வணிக வளாகங்களில் செய்யப்படும் குளிர்வசதி, அதற்கான மின்கட்டணம் எல்லாம் உள்ளே நுழையும் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருளின் விலையோடு சேர்ந்துவிடுகிறது. ஆனால் குளிர்வசதி சாதனங்களால் வெளியேற்றப்படும் வெப்பம் நகரத்தின் தட்ப வெப்ப அமைப்பில் மிகப்பெரும் கேடுகளை விளைவிக்கிறது.
இந்தியா போன்ற மிதவெப்ப நாட்டில் குளிர்வசதி இல்லாமல் வணிக வளாகங்களைக் கட்ட முடியாது. ஆனால், அதற்காகச் செலவாகும் மின்சக்தியைக் குறைக்க முடியும். வெளிப்படும் வெப்பத்தின் அளவையும் குறைக்க முடியும். வணிக வளாகங்களைக் கட்டும்போதே குளிர்வசதிக்கு ஆகும் செலவைக் குறைக்கும்விதத்தில் கட்டடத்தை வடிவமைக்கலாம். இது சாத்தியமா என்ற கேள்விக்கு ஸிம்பாவே நாடு நல்லதொரு உதாரணத்தைக் காட்டியிருக்கிறது.
ஜிம்பாப்வே நாட்டின் மிகப் பெரிய வணிக வளாகம் ஹராரே நகரத்தில் அமைந்துள்ள ஈஸ்ட்கேட் சென்டர். இந்த வளாகத்தை மிக் பியர்ஸ் என்ற பொறியாளர் பயோமிமிக்ரி முறையில் வடிவமைத்திருக்கிறார்.
அதென்ன பயோமிமிக்ரி?
இயற்கையைக் கவனித்து அதன் நுட்பங்களை நவீன முறையில் செயல்படுத்துவதுதான் பயோமிமிக்ரி. ஸ்ட்கேட் வணிக வளாகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் கரையான் புற்றிலிருந்து கற்றுக்கொண்டது. ஸிம்பாப்வே நாட்டில் குன்றுகளைப் போல வளர்ந்துநிற்கும் பெரிய கரையான் புற்றுகளின் உள்ளே உணவுப்பொருட்கள் கெட்டுப்போகாதவண்ணம் எப்போதுமே நிலையான வெப்ப நிலை உண்டு. அதற்கான காரணம் அதன் அமைப்பு. அதைப் பயன்படுத்தி நாட்டின் மிகப் பெரிய வணிக வளாகத்தையே கட்டியெழுப்பிவிட்டார்கள்.
அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு கட்டிடங்கள். இரண்டுக்கும் நடுவே வெற்றிடம். அதைக் கண்ணாடியால் மூடியிருக்கிறார்கள். வெற்றிடத்தில் அமைக்கப்பட்டுள்ள காற்றாடிகளின் மூலமாகக் குளிர்காற்று கீழிருந்து மேலாக சீரான அளவில் பரவுகிறது. அங்கு உருவாகும் வெப்பக்காற்று கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் சிம்னி வடிவ அமைப்புகளின் மூலமாக வெளியேற்றப்படுகிறது.
இரவில் வளாகத்தை மூடிய பிறகும் இந்த குளிர்சாதன அமைப்பு தொடர்ந்து தனது பணியைச் செய்கிறது. அதன் காரணமாக இரவில் கட்டிடங்களுக்கு இடையே நுழையும் குளிரை மறுநாளுக்குச் சேமித்து வைக்கிறார்கள். இந்த முறையைப் பின்பற்றி கோடைக் காலத்தில் குளிரூட்டுவதோடு குளிர்காலத்தில் வெப்பமூட்டவும் செய்கிறார்கள். மேலும் கோடையில் சூரியன் இருக்கும் திசையைக் கணித்து சூரிய ஒளி உட்சுவர்களில் அதிகம் படாதவண்ணம் வடிவமைத்திருக்கிறார்கள். ஜன்னல்களை வெப்பமும் சப்தமும் நுழையாதபடி அமைத்திருக்கிறார்கள்.
ஸிம்பாப்வே நாட்டில் குளிர்சாதனங்கள் அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தே பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தக் குளிரூட்டும் முறையில் இயந்திரங்களின் பங்கு மிகவும் குறைவு. மேலும் வணிக வளாகங்களில் வழக்கமாக ஆகும் மின்செலவில் பத்து சதவீதத்திற்கும் குறைவாகவே ஈஸ்ட்கேட் சென்டரில் செலவாகிறது. அதன் உரிமையாளர்களுக்கு மின்கட்டணச் செலவு மிச்சமோ மிச்சம்.
நமது வணிக வளாகங்களிலும் குளிர்வசதி செய்ய மாற்று வழிமுறைகளைப் பின்பற்றலாம். வெளிப்புற பிரம்மாண்டத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அதன் உள்கட்டமைப்புக்கும் அளிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT