Published : 26 Dec 2015 12:10 PM
Last Updated : 26 Dec 2015 12:10 PM
‘வரும்..., ஆனா வராது’ கதையாகப் போக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கும் மசோதா. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அறிமுகமானது இந்த மசோதா. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்று ஒன்றை ஆண்டுகளைக் கடந்த பிறகும் மசோதா இன்னும் நிலுவையிலேயே உள்ளது.
ரியல் எஸ்டேட் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க உதவும் இந்த மசோதா ஏன் உருவாக்கப்பட்டது? சொந்த வீடு வாங்குபவர்கள், கட்டுநர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையிலேயே இந்த ரியல் எஸ்டேட் மசோதா உருவாக்கப்பட்டது. இதன்படி அனைத்துக் கட்டுமானத் திட்டங்களும் ரியல் எஸ்டேட் ஆணையத்தில் முறைப்படி பதிவுசெய்யப்படும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மிகையான விளம்பரங்கள் கட்டுப்படுத்தப்படும், தவறு செய்யும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மசோதாவில் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டன.
கடந்த ஐக்கிய முன்னணி அரசில் இந்த மசோதா அறிமுகமானபோது, இந்த மசோதா ஒருதலைப்பட்சமாக இருப்பதாக அரசிடமே ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. கட்டுமான நிறுவனங்கள் சார்பில் பல ஆலோசனைகளும் அளிக்கப்பட்டன. எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா நிலுவையிலேயே இருந்தது. 2014-ம் ஆண்டு மே மாதம் புதிதாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றவுடன், இந்த மசோதாவில் சில மாற்றங்களைச் செய்ய முடிவு எடுத்தது.
இதில் குறிப்பாக இரண்டு மாற்றங்கள் முக்கியமானவை. வீடு வாங்குபவர்கள் முன் பணமாக 70 சதவீதப் பணத்தைத் தர வேண்டும் என்று முந்தைய அரசு தாக்கல் செய்த மசோதாவில் இருந்தது, அதை 50 சதவீதமாகக் குறைக்க ஆலோசித்தது. இதேபோல வீடுகள் கட்டும் நிறுவனங்களை மட்டும் கட்டுப்படுத்தும் வகையில் இந்த மசோதா முன்பு தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால், வர்த்தகக் கட்டுமான நிறுவனங்களையும் இந்த வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்தது.
புதிய அரசு செய்ய உத்தேசித்த இந்த மாற்றங்களையும் கட்டுமான நிறுவனங்கள் குறை கூற ஆரம்பித்தன. இப்படித் தொடர்ந்து பல பிரச்சினைகள் இந்த மசோதாவைச் சுற்றி எழுப்பப்படுவதால், சட்ட மசோதா அமலுக்குக் கொண்டு வருவது தாமதமாகி வருவதாகக் கூறப்பட்டது.
மசோதா நிறைவேறுவதில் தாமதம் ஏற்படுவதால் வீடு கட்டப் பணம் கொடுத்து வீட்டைக் குறித்த நேரத்தில் வாங்க முடியாத வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவதாக நுகர்வோர் அமைப்புகள் அவ்வப்போது கூறி வருகின்றன. ஏனென்றால் வீடுகளை வாங்க முன்பதிவு செய்த நாளில் இருந்து குறித்த காலத்துக்குள் வீடுகளைக் கட்டி ஒப்படைக்க வேண்டும் என்பது இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று. ஆனால், தொடர்ந்து இந்த மசோதா தாமதமாவதால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் என்பது அவர்களின் வாதமாக உள்ளது.
அதேசமயம் இந்த மசோதா மூலம் இத்துறையில் நம்பகத்தன்மையற்ற கட்டுமான நிறுவனங்கள் வெளியேற்றப்படும் என்பதை கட்டுமான துறையில் உள்ளவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இ ந் நிலையில் இந்தக் குளிர்கால கூட்டத்தொடரில் ரியல் எஸ்டேட் மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் இந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்த மசோதா இந்தக் கூட்டத்தொடரில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
மேலும் மாநிலங்களவையில் வலுவாக உள்ள எதிர்க்கட்சிகளை மீறி இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் ஆளுங்கட்சிக்குப் பிரச்சினை இருப்பதால் அடுத்த ஆண்டு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் கூறப்படுகின்றன. ரியல் எஸ்டேட் மசோதா தொடர்பாக கடந்த ஜூலையில் நாடாளுமன்ற தேர்வுக்குழு கொடுத்த அறிக்கை தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்து வேறுபாடுகளை அதில் தெரிவித்துள்ளன என்றும் அதற்குக் காரணம் கூறப்படுகிறது. இந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்ட பிறகே அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்த ஆண்டுதான் இந்த மசோதா எடுத்துக்கொள்ளப்படக்கூடும் என்பது உறுதியாகிறது.
இப்படிச் சிக்கல்கள் இருப்பதால்தான் ரியல் எஸ்டேட் மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அதேசமயம், புத்தாண்டிலாவது இந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டுச் சட்ட வடிவம் பெறும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT