Published : 07 Nov 2015 12:17 PM
Last Updated : 07 Nov 2015 12:17 PM
வீட்டில் இருக்கும் பழைய கண்ணாடி பாட்டில்களை என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் யோசித்துக்கொண்டிருப்போம். சிறிது மெனக்கெட்டாலே, அவற்றைப் பல புதுமையான வழிகளில் பயன்படுத்த முடியும். இந்தப் பழைய பாட்டில்களால் உங்கள் வீட்டை அழகாக அலங்கரிக்க முடியும்.
ஜாம், ஊட்டச்சத்து பானங்கள், காஃபி பவுடர், தேன் என பாட்டில்களில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தினோலே வீட்டில் கண்ணாடி பாட்டில்கள் சேர்ந்துவிடும். அந்த பாட்டில்களை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
குழந்தைகள் தினமும் சாப்பிடும் பிஸ்கட்கள், சாக்லேட்கள் போன்றவற்றை இந்தப் பாட்டில்களில் தனித்தனியாகச் சேகரித்து வைக்கலாம். ஒவ்வொரு பாட்டிலிலும் லேபிள் ஒட்டிவிடலாம். துணி கிளிப்புகள், நூல்கள், பட்டன்கள் போன்றவற்றையும் இப்படி பாட்டில்களில் தனித்தனியாகப் பிரித்துப் போட்டுவைத்தால், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும்.
அதே மாதிரி, சமையலறையில் பயன்படுத்தும் கத்திகள், ஸ்பூன்கள், சிறிய கரண்டிகள் போன்றவையும் இந்த பாட்டில்களில் போட்டு சமையல் மேசைமீது அடுக்கிவைக்கலாம். இதனால், அடிக்கடி ஸ்பூன்களைத் தேட வேண்டிய அவசியம் இருக்காது.
குழந்தைகளின் பென்சில்கள், கிரையான்ஸ், பேனாக்கள் என ஒவ்வொன்றையும் தனித்தனியாக பாட்டில்களில் சேகரித்து வைக்கலாம். அவர்கள் பயன்படுத்திய பிறகு, மீண்டும் அந்த பாட்டில்களிலேயே அவற்றை போட்டுவைக்கும்படி பழக்கப்படுத்தலாம். அந்த பாட்டில்களில் ஒட்ட வேண்டிய லேபிள்களைக் குழந்தைகளையே தயாரிக்கச் சொல்லலாம்.
பூக்கள் இல்லாத வீட்டில் புத்துணர்ச்சி இருக்காது. இந்தக் கண்ணாடி பாட்டில்களில் பூங்கொத்துகளைப் போட்டு மேசைகளில் அடுக்கிவைக்கலாம். பாட்டில்களில் மேலே உங்கள் ரசனைக்கேற்ற அலங்காரத்தைச் செய்துகொள்ளலாம். கண்ணாடி பாட்டில்களைச் சுற்றி மரக்குச்சிகளை ஒட்டிவிடுங்கள். அதற்குள் அலங்கார மெழுகுவர்த்திகளை ஏற்றிவையுங்கள். அதேமாதிரி, பாட்டில்களுக்குள் விளக்குகளைப் பொருத்தி, அவற்றை அலங்கார விளக்குகளாகவும் பயன்படுத்தலாம்.
ஒரு நீளமான மர ஸ்டாண்டில் ஒரே அளவில் இருக்கும் சின்ன பாட்டில்களைப் பொருத்தும்படி இரும்புக் கம்பிகளை அமைக்கலாம். பின்னர், அதைச் சுவரில் பொருத்திப் பொருட்கள் போட்டுவைத்துக்கொள்ளப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பால்கனி விளக்கு அலங்காரத்துக்குக்கூட, இந்த பாட்டில்களைப் பயன்படுத்தலாம். பாட்டிலுக்குள் கூழாங்கற்களை நிரப்பி, அதில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்கலாம். அந்த பாட்டில்களில் செயின்களைப் பொருத்தி அவற்றை பால்கனி சுவர்களில் தொங்கவிடலாம். அதே மாதிரி, இந்த பாட்டில்களில் பால்கனியில் செடிகளும் வளர்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT