Published : 28 Nov 2015 02:45 PM
Last Updated : 28 Nov 2015 02:45 PM
தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியிருக்கிறது. மழைக் காலத்தில் கட்டிடம் ஈரத்தன்மையுடன் இருக்கும். வீட்டுக்குள் எங்கேயாவது நீர்க்கசிவோ அல்லது சுவர் ஈரமாகவோ இருப்பதைப் பார்த்திருப்போம். வீட்டில் ஈரம் (ஓதம்) தென்பட்டால் கொஞ்சம் ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும். கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்னாளில் செலவு அதிகமாக வைத்துவிடும். வீட்டில் ஈரக்கசிவு ஏற்படாமல் எப்படித் தடுப்பது?
பொதுவாக மழைக் காலங்களில் கான்கிரீட் மேற்கூரையிலேயே ஈரக் கசிவு ஏற்படும். மேற்கூரையில் ஈரக் கசிவு ஏற்படாமல் இருக்க கான்கிரீட் போடுவதற்கு முன்பாக மணலைச் சல்லடை மூலமாக நன்றாகச் சலிக்க வேண்டும். அதன் பின்பு தான் அதைப் பயன்படுத்த வேண்டும். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஆற்று மணலில் களிமண் கட்டிகள் கலந்தே வரும். களிமண்ணை கான்கிரீட் கலவையுடன் சேர்ந்து கட்டினால் பாதிப்பு ஏற்படும். களிமண்ணின் ஈரதன்மை கான்கிரீட் வழியாகச் சுவருக்குள் இறங்கும்.
பெரும்பாலும் கான்கிரீட் மேற்கூரை போட்ட பிறகு மொட்டை மாடியில் சுர்க்கி என்றழைக்கப்படும் செங்கற்பொடி ஓடுகளைப் பதிப்பது வழக்கம். இந்த ஓடுகள் நல்ல தரத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தண்ணீர் கான்கிரீட் வழியாக உள்ளே சுவரில் இறங்கும். மழையைத் தவிர்த்து, குளியல் அறையில் ஏற்படும் ஈரத்துக்கு சுவருக்குள் பதிக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்களில் கசிவு இருக்கலாம். வீட்டில் அறை, சமையலறை, படுக்கையறை சுவர்களில் ஈரம் தென்பட்டால் அதற்கு தரமற்ற செங்கற்களைப் பயன்படுத்தியது காரணமாக இருக்கலாம்.
எனவே செங்கற்கள் தரமானதாக இருக்க வேண்டும். தரமற்ற செங்கற்களைக் கண்டுபிடிக்கவும் வழி உள்ளது. செங்கல்லைப் பயன்படுத்தும் முன்பு தண்ணீர் கொண்டு செங்கற்களை நன்கு நனைத்து பின்பு கட்டுமானத்திற்கு பயன்படுத்த வேண்டும். தரமற்ற கல்லாக இருந்தால் தண்ணீரிலேயே செங்கல் கரையும் அல்லது எடை கொஞ்சம் அதிகரித்துக் காணப்படும். எனவே தரமான செங்கற்கள் மிகவும் முக்கியம்.
அப்படித் தரமான கற்களைப் பயன்படுத்தாவிட்டால், வீட்டின் அறைகள்மட்டுமல்ல, மொட்டை மாடியில் இருந்து கசியும் ஈரமானது கட்டிடத்தின் மேற்கூரையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதித்துவிடும். இந்த ஈரக்கசிவானது கான்கிரீட்டில் உள்ள இரும்புக் கம்பிகளைத் தாக்கும்போது கம்பிகள் துருப்பிடித்து நாளாக நாளாக சிமென்ட் பூச்சு பெயர்ந்து கீழே விழும்.
குளியல் அறையில் நீர்க்கசிவு ஏற்பட்டால் பிளம்பரை வைத்துச் சரி செய்துவிடலாம். மற்ற இடங்கள் என்றால், ஈரம் படிந்துள்ள இடத்தை உடைத்துவிட்டு மீண்டும் பூச்சு செய்வதே தீர்வாக இருக்கும். ஆனால் அதற்குக் கொஞ்சம் கூடுதலாகச் செலவாகும்.
மொட்டை மாடியில் கான்கிரீட் போட்ட பிறகு சுர்க்கி ஓடுகளைப் பதிக்கும் முன்பு இன்னொரு வேலையைச் செய்ய வேண்டும். அதாவது, சுர்க்கி ஓடு பதிக்கு முன்பு நீர்த்தடுப்பு சிமெண்ட் கலவையைச் சந்துபொந்து விடாமல் நன்றாகப் பூச வேண்டும். உட்புறக் கைப்பிடிச் சுவரிலும் மேற்பூச்சு பூசுவதற்கு முன்பே இதைப் பூசிவிட வேண்டும்.
தற்போது சந்தையில் நீர்க் கசிவைத் தடுக்கும் வகையில் ஏராளமான ரசாயன பேஸ்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த வேதியியல் பொருட்களைச் சுண்ணாம்பு பூசுவதைப் போல சுவரில் பூசலாம். ஆனால், இந்த வேதியியல் பூச்சு அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை தீர்வாக இருக்கும். பின்னர் மீண்டும் பிரச்சினை தலைகாட்டத் தொடங்கிவிடும்.
பலரும் ஈரக்கசிவைச் சுலபமாகச் செய்துவிடலாம் என்றே நினைக்கிறார்கள். ஆனால், சுவர்களில் ஏற்படும் நீர்க்கசிவைச் சரி செய்வது அவ்வளவு சுலபமில்லை. எனவே வீடு கட்டும்போதே ஈரக்கசிவு வராத அளவுக்குத் தரமான பொருட்களைப் பயன்படுத்தி, கச்சிதமாகப் பணிகளைச் செய்வதன் மூலமே தடுக்க முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT