Published : 14 Nov 2015 11:45 AM
Last Updated : 14 Nov 2015 11:45 AM
வடகிழக்குப் பருவ மழை தொடங்கியதிலிருந்தே மழை பரவலாகப் பெய்து வருகிறது. பெரு மழை காரணமாகச் சாலைகளில் மழை நீர் வெள்ளமாகப் புரண்டோடுகிறது. வீணாகக் கால்வாய்களில் சென்று கடைசியில் கடலில் போய்க் கலக்கிறது. இன்று நிலத்தடி நீர் மட்டம் குறைந்துகொண்டே போவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நிலத்தடி நீர் குறைவதால் கிணறுகளிலும், ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இருப்பதில்லை. நிலத்தடி நீர் என்பது எப்படிக் கிடைக்கும்? நிலத்துக்குள் தண்ணீர் போய்ச் சேர்ந்தால்தானே கிடைக்கும்?
தமிழகத்தில் பொதுவாக இன்று என்ன நடக்கிறது? வீட்டைச் சுற்றிப் பெயருக்குக்கூடத் திறந்தவெளிச் சாலை இருப்பதில்லை. அதாவது மண் சாலை இருப்பதேயில்லை. ஒரு பக்கம் அடுக்குமாடிக் குடியிருப்புகளில், வீட்டைச் சுற்றி இருக்கிற பகுதியைச் சிமென்ட்டால் கட்டி மூடிவிடுகிறார்கள். உள்ளாட்சி அமைப்புகள் தார் சாலை, கல் சாலை, சிமெண்ட் சாலையைப் போட்டு மண் சாலையை மூடிவிடும். திறந்த வெளிகள் குறைந்துகொண்டே போவதால், பெய்யும் மழைநீர் பூமிக்குள் செல்ல முடியாமல் நிலத்தடி நீரும் தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.
எந்த அளவுக்கு மழைநீரை நாம் பூமிக்குள் செலுத்துகிறோமோ, அந்த அளவுக்குதான் நிலத்தடி நீரும் கிடைக்கும். முன்பெல்லாம் இரவு நன்றாக மழை பெய்தால் காலையில் மழை பெய்ததற்கான தடத்தைப் பார்க்கவே முடியாது. மழை நீர் முழுமையாகப் பூமிக்குள் சென்றுவிடும். கிணற்றைப் பார்த்தால் தண்ணீர் மேலேறி வந்து நிற்கும். ஆனால், கட்டமைப்புகள் பெருகிவிட்டதால் மண் பரப்பு குறைந்துவிட்டது. பெய்யும் மழை நீர் மண்ணுக்குள் ஊடுருவிச் செல்ல வழி இல்லாததால் வீணாகப் போய்விடுகிறது. எனவே கிணறு, ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீரைப் பார்க்க முடிவதில்லை.
அதற்காகத்தான் தமிழக அரசு மழை நீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியது. ஆனால், அதைப் பொதுமக்கள் முறையாகச் செய்யாமலும், பராமரிக்காமல் விட்டுவிடுவது தொடரவே செய்கிறது. தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாகப் பின்னர் தண்ணீருக்காக அல்லாடுவதும் தொடரவே செய்கிறது. மழை நீரை எப்படிச் சேமிக்க முடியும்?
வீடோ, அடுக்குமாடிக் குடியிருப்போ, தொழிற்சாலையோ, வணிக வளாகமோ, கடையோ, அலுவலகமோ எதுவாக இருந்தாலும் இரண்டு இடத்தில்தான் மழை பெய்யும். ஒன்று பெய்யும் மழை மொட்டைமாடியில் விழும். இரண்டாவதாக வீட்டைச் சுற்றி உள்ள இடத்தில் மழை நீர் விழும். மொட்டைமாடி தண்ணீரைச் சேமிக்க, மொட்டை மாடியிலிருந்து குழாய்கள் மூலமாகக் கீழே கொண்டுவர முடியும். அந்தக் குழாய்களை இணைத்து ஒரு வடிகட்டி தொட்டியைச் சிறியதாகக் கட்டி, அதை நீரைச் சேமிக்கும் தொட்டியில் சேமித்து வைக்கவும் முடியும். இந்தத் தண்ணீரை உடனடித் தேவைக்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்யலாம். தொட்டி இல்லாவிட்டால் பிளாஸ்டிக் தொட்டிகளில் சேமிக்கவும் செய்யலாம். இது ஒரு வகையான உடனடி தேவைக்கான மழை நீர் சேமிப்பு.
இன்னொரு வழி நிலத்துக்குள் தண்ணீரைக் கொண்டுசென்று நிலத்தடி நீராகச் சேமிப்பது. தேவையைப் பொறுத்து நீரை எப்படிச் சேமிப்பது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளலாம். குழாய் மூலம் தண்ணீர் கிடைக்கப் பெறாதவர்கள், தண்ணீரைத் தொட்டிக்கு மாற்றி சேமித்துப் பயன்படுத்தலாம். ஓடு வீடு, கூரை வீடுகளில்கூடக் குழாயைப் பாதியாக வெட்டி கூரையின் விளிம்பில் வைத்து ஒரு பக்கமாகத் தண்ணீரைக் கீழே இறக்கிச் சேமித்துப் பயன்படுத்தலாம்.
எனவே மழைக் காலங்களில் பெய்யும் மழை நீரை உடனடி தேவைக்காகவோ அல்லது நிலத்தடி நீரைச் சேமிக்கவோ பயன்படுத்தினால் தண்ணீர்ப் பற்றாக்குறை கொஞ்சமாவது குறையக்கூடும். எனவே இனிமேலாவது வீணாக்காமல், வீட்டைச் சுற்றிப் பெய்யும் மழை நீரை முறையாகச் சேமிக்க வேண்டும். அல்லது நிலத்துக்குள் விட்டு நிலத்தடி நீரை உயர்த்த வேண்டும். அதற்கு வீட்டு மாடியைச் சுத்தமாக வைத்துக்கொள்வதில் தொடங்கி வீட்டைச் சுற்றிப் பெய்யும் மழை நீர் தெருவுக்கு சென்றுவிடாதபடி செய்தாலோ போதும்.
பிற்காலத் தேவைக்காக வங்கியில் பணத்தைச் சேமிப்பது போல, உடனடி தேவைக்காகவாவது மழை நீரைச் சேமிக்கலாமே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT