Last Updated : 28 Nov, 2015 03:02 PM

 

Published : 28 Nov 2015 03:02 PM
Last Updated : 28 Nov 2015 03:02 PM

சென்னை ரியல் எஸ்டேட்: வீடுகள் விலை குறையுமா?

சென்னையில் கொட்டித் தீர்த்த வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, பொதுமக்களைப் பாடாய் படுத்திவிட்டது என்றால், ரியல் எஸ்டேட் தொழிலையோ ஆட்டம் காணவும் வைத்திருக்கிறது. இந்த மழையால் புறநகர்ப் பகுதிகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. இனிபுறநகர்ப் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் எப்படி இருக்கும்?

புறநகரை விரும்பும் மக்கள்

சென்னை மாநகரம் நாளுக்கு நாள் விரிவடைந்துவருகிறது. சென்னையில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனவே சென்னையில் வீட்டுத் தேவைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன். மாநகரப் பகுதியில் பெயருக்குக்கூட எங்கும் ஒரு காலி மனையைப் பார்க்க முடியாத நிலைதான் உள்ளது.

அப்படியே இருந்தாலும் அதன் விலை யானை விலை, குதிரை விலை என எக்குத்தப்பாகவே இருக்கும். எனவே மக்களின் விருப்பத் தேர்வு என்பது புறநகர்ப் பகுதிகளாகத்தான் உள்ளன. எப்படியாவது சென்னையில் ஒரு சொந்த வீட்டை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களின் விருப்பமும் புறநகர்ப் பகுதியாகவே உள்ளது. ஓரளவுக்கு வாங்கக்கூடிய அளவில் வீடுகளின் விலை இருப்பதால் புறநகர்ப் பகுதிகளையே மக்கள் அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

வெள்ளம் சூழ்ந்த புறநகர்

குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், சோழிங்கநல்லூர், ஓ.எம்.ஆர். சாலை, ஈ.சி.ஆர். சாலை, பெரும்பாக்கம், மாம்பாக்கம், பொழிச்சலூர், தாம்பரம், முடிச்சூர், ஜி.எஸ்.டி. சாலை, பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் ஏராளமான வீட்டுத் திட்டங்கள் கட்டுமான நிறுவனங்களால் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பகுதிகளில் ஏராளமானோர் வங்கிகளில் வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கியிருக்கிறார்கள். அண்மையில் பெய்த கனமழை புறநகர்ப் பகுதிகளின் உண்மையான கோர முகத்தைக் காட்டியிருக்கிறது. நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டுமான நிறுவனங்களால் கட்டியதாலேயே மிகப் பெரிய வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகப் புகார்களும் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் புறநகர்ப் பகுதிகளில் வீடு வாங்கியவர்கள் செய்வதறியாமல் கையைப் பிசைந்துவருகிறார்கள். வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்கியவர்கள் வேறு வழியில்லாமல் அங்கேயே இருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். ஆனால், தற்போது இந்தப் பகுதிகளில் வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் வீடுகளை வாங்கும் முடிவிலிருந்து பின்வாங்கும் போக்கு அதிகரிக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளன கட்டுமான நிறுவனங்கள். ஏற்கெனவே ரியல் எஸ்டேட் தொழில் மந்தமாக உள்ள நிலையில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளம், தொழிலை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என்கிறார்கள் கட்டுநர்கள்.

பாதிப்பு கூடும்

இது குறித்து இந்தியக் கட்டுநர் சங்கத்தின் சென்னைப் புறநகர் கிளையின் பொதுக்குழு உறுப்பினர் பிரான்சிஸ் பிரிட்டோ கூறுகையில், “புறநகர்ப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ரியல் எஸ்டேட் தொழிலுக்கு 100 சதவீதம் பாதிப்பு ஏற்படும். புறநகர்ப் பகுதிகளில் வீடு வாங்க முன்பணம் கொடுத்தவர்கள் பணத்தைக் கேட்கவும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் பணத்தைக் கொட்டி வீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் கட்டுமான நிறுவனங்கள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். இது ரியல் எஸ்டேட் தொழிலில் தேக்க நிலையை இன்னும் அதிகப்படுத்திவிடும். இந்தப் பாதிப்பிலிருந்து மீளப் புறநகர்ப் பகுதிகளில் மழை நீர் வடிகால்களையும், வாய்க்கால்களையும் அரசு ஏற்படுத்தித்தர வேண்டும்” என்று சொல்கிறார்.

ஆக்கிரமிப்பு முடியாது

சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஏனைய கட்டுமான வளாகங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே வெள்ளப் பாதிப்புகள் அதிகரித்ததாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆனால், இந்தப் புகாரை பிரான்சிஸ் பிரிட்டோ மறுக்கிறார். “நீர்நிலைகளை ஆக்கிரமித்து எந்தக் கட்டுமான நிறுவனமும் வீட்டைக் கட்டிவிட முடியாது. இடத்துக்கான வரைபடம், மனை அங்கீகாரம், கட்டுமான அனுமதி என ஏராளமான அனுமதி வாங்க வேண்டும். அதுமட்டுமல்ல, அதற்குரிய முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து அரசிடம் ஒப்புதல் பெற்றே கட்ட முடியும். நீர்நிலை என்றால் அரசிடமிருந்து அனுமதியும் கிடைக்காது. எனவே இந்தப் புகார் தவறானது” என்று உறுதியாகக் கூறுகிறார் பிரிட்டோ.

வீடு விலை குறையுமா, கூடுமா?

வெள்ளம் காரணமாக புற நகர்ப் பகுதிகளில் வீடுகள் விற்பனை மந்தமாகும் என்ற கவலை ஒரு புறம் இருக்க, வீடுகளின் விலை அதிகரிக்கவோ அல்லது குறையவோ கூடும் என்று ரியல் எஸ்டேட் தொழிலில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். “வெள்ளம் அதிகம் பாதித்த இடங்களில் வீடுகள் விற்பனை குறையும்போது விலையைக் குறைத்துக் கட்டுமான நிறுவனங்கள் விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல வெள்ளம் வராத பகுதிகளில் அதைக் காரணம் காட்டியும், அதை முன்னிலைப்படுத்தியும் இன்னும் விலையை உயர்த்தவும் வாய்ப்பு இருக்கும்” என்கிறார் சென்னைப் புறநகரில் ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வரும் சையது அலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x