Published : 21 Nov 2015 12:21 PM
Last Updated : 21 Nov 2015 12:21 PM
நமது நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆதார வளத்தைத் தருவது மழை. ஆகவே மழை இல்லாவிட்டால் நமது வாழ்வில் வளம் என்பது இல்லை. ஆனால் மழை நீர் நிலத்தடிக்குச் சென்றால்தான் அது நமக்குப் பயன் தரும், வீட்டின் மேலேயே விழுந்துகொண்டிருந்தால் அதனால் பயனெதுவும் இல்லை. அதனால்தான் மழை நீர் சேமிப்பை வலியுறுத்தி மழை நீரை நிலத்தடிக்குக் கொண்டுசெல்ல வலியுறுத்தி செயல்படுத்தியது தமிழக அரசு. மழை நீரைச் சேமிப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் மழை நீரிலிருந்து நமது வீட்டைப் பாதுகாப்பதும் என்பதை நாம் மறக்கவியலாது.
மழை நேரத்தில் அதிகப்படியான நீரானது கட்டிடத்தில் விழுந்து கட்டிடத்தைப் பாதிக்கக்கூடும் அதிலிருந்து வீட்டைப் பாதுகாக்க வேண்டியது நமது பொறுப்பு. கட்டிடத்தின் மேல் அதிக ஆற்றலுடன் விழும் நீரானது கட்டிடக் கூரையின் மீது சிறிய விரிசல்கள் இருந்தால் கட்டிடத்தின் உள்ளே இறங்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மழைக் காலத்துக்கு முன்னரே வீட்டின் கூரைகளை மிகக் கவனமாகச் சோதித்தறிய வேண்டும். வீட்டின் கூரையில் ஏதேனும் பழுது ஏற்பட்டிருப்பின் அதைத் தாமதமின்றி பழுது நீக்கிவிட வேண்டும்.
மழை நேரங்களில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் வெள்ளம் நுழைவதைத் தடுக்கும் முன்னேற்பாடாக வீட்டைத் தெருவின் மட்டத்திலிருந்து போதுமான உயரத்துக்கு ஏற்றியே வீட்டின் தளத்தை அமைக்க வேண்டும். இதில் கவனக் குறைவாக இருந்தால் மழை வெள்ளத்தின்போது கடுமையான அவதிக்குள்ளாக நேரிடும்.
மேலும் வீட்டின் அஸ்திவாரத்தில் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். மழை நீர் தரையில் விழுந்து மாசு பட்டு அந்த நீர் அஸ்திவாரத்துக்குள் புகுந்தால் அஸ்திவாரத்தின் கம்பிகள் துருப்பிடிக்க ஏதுவாகும். ஆகவே அதைத் தடை செய்யும் விதமாக நிலத்தில் அஸ்திவாரத்தின் நீர் புகும்படியான ஏதாவது துளையோ விரிசலோ தென்பட்டால் அவற்றை உடனடியாகச் சரிசெய்துவிட வேண்டும். இதில் காட்டும் தாமதம் நமது வீட்டுக்கு நாமே விளைவிக்கும் கேடாக முடியக்கூடும்.
மழை நேரத்தின் ஈரப்பதம் சுவர்களைப் பாதிக்கக் கூடும். சுவர்களில் தென்படும் சிறு சிறு விரிசல்கள் தொல்லை தராதவை, அவற்றைப் பற்றிய பெரிய அளவில் கவலை கொள்ள வேண்டாம். ஆனால் நீர் உட்புகும் அளவிலான விரிசல்கள் சுவரில் தென்பட்டால் அவற்றை மழைக் காலத்துக்கு முன்னரே சரிசெய்துவிட வேண்டும். சுவர் ஈரப்பதமாகவே இருந்தால் அது சுவருக்கு மட்டும் ஆரோக்கியக் குறைவு என்று எண்ணிவிடல் ஆகாது. ஏனெனில் எப்போதும் ஈரப்பதமாக சுவர் இருந்தால் வீட்டில் உலவும் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து அதில் வீட்டில் வசிப்பவர்களுக்கு நோயை ஏற்படுத்திவிடும். இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கவும் வீட்டின் ஈரப்பதத்தை முடிந்த அளவு குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வீட்டின் மேலே நீர்த் தொட்டியை அமைத்திருந்தால் அதிலும் கவனமாக இருக்க வேண்டும். வழக்கமான நேரத்தில் நீர் கசிந்தால் எளிதாகக் கண்டறிய முடியும். ஆனால் மழை நேரத்தில் மழை நீர் என மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. நீர்த் தொட்டியில் கசிவோ விரிசலோ இருந்தால் அதைச் சரிசெய்துகொள்ள வேண்டும். வீட்டிலிருந்து வெளியேறும் கழிவு நீரை மிகக் கவனமாக வெளியேற்ற வேண்டும். இல்லையெனில் கழிவு நீர் மழை நீரில் கலந்து நோய்களை ஏற்படுத்திவிடக் கூடும்.
மழை நேரத்தில் வீட்டின் கழிப்பறை, குளியலறை போன்றவற்றில் எப்போதும் ஈரம் சதசதவென இருக்கும். அதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். வீட்டின் குளியலறையில் வழவழவென்றிருந்தால் அவசரத்தில் செல்பவர்களோ வீட்டில் இருக்கும் முதியவர்களோ அதில் வழுகிவிழுந்துவிட வாய்ப்புள்ளது. எனவே சோப் தண்ணீர் போன்றவை வடிந்த உடன் வழுக்கல் ஏற்படாத வண்ணம் சொரசொரப்பான துடைப்பானால் குளியலறையின் தரைத் துடைத்து வழுக்காதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். மழை நமக்கு அவசியம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, அதைப் போலவே மழையிலிருந்து நமது வீட்டையும் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதிலும் கவனம் வைக்க வேண்டும் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT