Last Updated : 28 Nov, 2015 02:49 PM

 

Published : 28 Nov 2015 02:49 PM
Last Updated : 28 Nov 2015 02:49 PM

எனக்குப் பிடித்த வீடு: நிறைவேறிய ஊஞ்சல் கனவுகள்

நாம் எங்கு சென்றாலும், எத்தனை மகிழ்ச்சியாக இருந்தாலும் அப்பாடா என்று நம் வீட்டில் வந்து படுக்கும் சுகம் இருக்கிறதே, அதற்கு இணையே கிடையாது! எத்தனை அசௌகரியங்கள் இருந்தாலும், வசதிக் குறைவுகள் இருந்தாலும் அது நம் சொந்த வீடு என்கிறபோது அவை காணாமல் போய் ஒரு நிம்மதி தோன்றுவதை எவரும் உணரலாம்.சொர்க்கமே என்றாலும் நம்மூர் மட்டுமல்ல நம் வீட் டைப் போலவும் வராது! வங்கி அதிகரியாக இருந்த என் கணவருடன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம் மாற்றல் வந்துவிடும்.

பல ஊர்களில், மாநிலங்களில் வாசம். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரி வீடு! நமக்கு வேண்டியபடி எந்த இடமும் இருக்காது. ஒரு வீட்டைச் சரி செய்வதற்குள் அடுத்த மாறுதல் வந்துவிடும். பணிக்குச் செல்லாத இல்லத்தரசியாகக் குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் படிப்பு, வீட்டு வேலைகள் என்று காலம் இறக்கை கட்டிப் பறந்த நாட்கள் அவை. ஆனாலும் சொந்த வீடு ஆசை மட்டும் மனத்தின் ஓரத்தில் இருந்துகொண்டிருந்தது.

எனக்குச் சின்ன வயதில் இருந்தே ஊஞ்சலில் ஆடப் பிடிக்கும். கும்பகோணத்தில் என் தாத்தாவின் வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் ஊஞ்சலில் ஆட எங்களுக்குள் (என்னுடைய மாமா, பெரியம்மா, சித்தி குழந்தைகளுடன்) சண்டையே நடக்கும்! கிழக்கு வாசல் படத்தில் பச்சமலைப் பூவு பாடலில் ரேவதி ஊஞ்சல் ஆடுவதைப் பார்த்து அது போல ஆட ஆசைப்பட்டிருக்கிறேன்!

தீராத விருப்பம்

குடந்தையில் பார்த்துப் பார்த்து நாங்கள் ஒரு வீடு கட்டினோம். அதில் ஊஞ்சல் ஆசையில் மேலே கொக்கி எல்லாம் வைத்தேன். என்ன செய்ய? ஒரே வருடத்தில் என் கணவருக்கு அடுத்த மாற்றல்! மீண்டும் வாடகை வீடு! பின் மகாராஷ்டிராவுக்கு மாற்றல். சில தவிர்க்க முடியாத காரணங்களால் மனமின்றி வீட்டை விற்றோம். குழந்தைகள் படித்து முடித்து வெவ்வேறு ஊர்களுக்குச் செல்ல, மீண்டும் அவர்களுடன் ஊர் ஊராகப் பயணம். மனதில் மட்டும் ஊஞ்சல் ஆசை குறையாமல் இருந்தது. இத்தனை ஊர்களில் இருந்தும் ஒரு வீட்டிலும் ஊஞ்சல் போட வாய்ப்பில்லை. மூங்கில், கயிற்றால் செய்யப்பட்ட ஊஞ்சலை வாங்கினேன்.

அதில் ஆசை தீர அதில் ஆடிப் பார்த்தேன். ஆனால் பாரம்பரியமான நம்மூர் மர ஊஞ்சலில் ஆடும் சந்தோஷம் கிடைக்கவில்லை. குழந்தைகள் ஒருவாறாக செட்டில் ஆகிவிட என் ஆசையை என் கணவரிடம் சொன்னேன். எல்லாக் கடமைகளும் முடித்த நிலையில் தனியாக ஒரு வீடு வாங்கி, அங்கு என் மனம் போல் வாழ வேண்டும் என்ற என் ஏக்கத்தைப் புரிந்துகொண்டார் என் அன்புக் கணவர். என் பிள்ளைகளிடம் இதைப் பற்றி சொல்ல, மறுப்பு சொல்லாமல் சம்மதித்தார்கள்.

எங்கு வீடு வாங்கலாம் என யோசிக்க, வெளிநாட்டில் வாழும் என் பிள்ளைகள் வர வசதியாக இருக்கும் என்பதால் திருச்சியில் தென்னூரில் வாங்கினோம். அங்கு நான் முதலில் தேடியது ஊஞ்சல் மாட்டும் வளையங்களை! ஆனால் முன்பே கட்டிவிட்ட வீட்டில் வளையங்கள் இல்லாதது கொஞ்சம் எனக்கு ஏமாற்றம். பல வீடுகள் பார்த்தும் இங்கு ஹால் பெரிதாக இருப்பதால் ஊஞ்சல் போடலாம் என்பதாலேயே இந்த வீடு எனக்குப் பிடித்துப் போயிற்று. அதைப் புரிந்து கொண்ட என் கணவர் கொத்தனாரிடம் சொல்லி மேலே உடைத்து, வளையங்களை மாட்டினார். எங்கள் கிராமத்திலிருந்து தேக்கினாலான ஊஞ்சல் செய்யச் சொல்லி அதை மாட்டியதும்தான் என் வீட்டுக்கே ஒரு ‘ஸ்பெஷல்’ களை, அழகு வந்த மாதிரி இருந்தது எனக்கு. எத்தனை நாள் ஆசை! நிறைவேற்றிக் கொடுத்த என் கணவருக்குக் கண்களால் நன்றி சொன்னேன்!

நிறைவேறிய கனவு

ஆஹா! அந்த ஊஞ்சல் ஆடும் சுகத்தை விளக்கிச் சொல்ல எனக்கு வார்த்தைகள் இல்லை. தினமும் ஊஞ்சலில் வேகமாக ஆடிக் கொண்டுதான் டி.வி. பார்ப்பேன்; புத்தகம் படிப்பேன்! நானும், என் கணவரும் எங்கள் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வதும் ஊஞ்சலில்தான்! என் பேரன், பேத்திகள் விடுமுறை எப்ப விடும் என்று காத்துக் கொண்டு வந்து விடுவார்கள் ஊஞ்சல் ஆட! கோடைக் காலங்களில் ஊஞ்சலில் வேகமாக ஆடினால் இயற்கைக் காற்று வீசிக் குளிர்விக்கும்.

என் வீட்டுக்கு வருபவர்கள் ஊஞ்சலைப் பாராட்டாமல் இருக்க மாட்டார்கள்! யார் வந்தாலும் ஊஞ்சலில் அமர்ந்து சற்று ஆடி ரசித்துவிட்டே செல்வார்கள். எனக்கு என் பெண், பிள்ளைகள், மருமகள்களுடன் ஆடிக் கொண்டே அரட்டை அடிப்பது அலாதி சுகம்! வாசல் வழியே நம் வீட்டுக்கு வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடிக் களிப்புற்று நமக்கு நல்லது செய்வார்கள் என்பது ஒரு ஐதீகம். வீட்டை அழகாக்கும் ஊஞ்சலை வாஸ்துப்படி வீட்டின் முகப்பில் அமைக்க வேண்டும். அதனாலேயே அந்நாட்களில் கூடத்தில் ஊஞ்சல் அமைத்தார்களாம்.

ஊஞ்சல் ஆடுவது உடல் ஆரோக்கியத்துடன் மனதுக்கும் மகிழ்ச்சி தரும் ஒரு விஷயம். எனக்கு மன வருத்தம் ஏற்பட்டால் ஊஞ்சலில் அமர்ந்து வீசி ஆடினால் சட்டென்று கலக்கம் நீங்கித் தெளிவு பிறக்கும்; மனத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நான் ஒரு எழுத்தாளர்; ப்ளாகர். கம்ப்யூட்டரில் பல மணி நேரம் அமர்ந்து வேலை செய்து சோர்வு ஏற்படும்போது சற்று நேரம் கைகளை ஊன்றி, கால்களை உந்தி நிமிர்ந்து உட்கார்ந்து ஊஞ்சல் ஆடும்போது முதுகு வலி, கழுத்து வலி காணாமல் போகிறது.

சாப்பிட்டவுடன் ஊஞ்சல் ஆடுவது ஜீரணத்திற்கு உதவும். வெளியில் போய்விட்டு வந்து சில நிமிடங்கள் ஊஞ்சல் ஆடினால் எல்லாக் களைப்பும் போய் உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். என் கனவை மெய்ப்பட வைத்து, என்னை எப்போதும் சந்தோஷப்படுத்தும் என் மனதுக்கினிய அழகான ஊஞ்சல் என் இனிய தோழி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x