Published : 10 Oct 2015 11:11 AM
Last Updated : 10 Oct 2015 11:11 AM
சமையலறைக்கு என்ன வண்ணமடித்தால் நவீன தோற்றத்தைக் கொடுக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறீர்களா? சமையலறை சுவருக்கு அடிக்கும் வண்ணத்தை அடிக்கடி மாற்றவியலாது. அதனால், முதல்முறை தேர்ந்தெடுக்கும்போதே சரியான வண்ணத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வண்ணம் உங்கள் ரசனைக்குப் பொருந்துவதோடு மட்டுமல்லாமல் தற்போதைய நவீன டிரெண்டுக்கும் பொருந்துவதாக இருக்க வேண்டும். சமையலறை வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கச் சில ஆலோசனைகள்...
கருப்பு-வெள்ளை
சமையலறைக்குப் பாரம்பரியமான தோற்றத்தைக் கொடுக்க விரும்புபவர்கள் கருப்பு-வெள்ளையைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் சமையலறை எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, இந்த நிறக்கலவை அதற்குப் பொருந்தும். இதில் நீங்கள் விரும்பினால் மூன்றாவது நிறமாகச் சாம்பல் நிறத்தையும் பயன்படுத்தலாம். ‘செக்போர்ட்’ தரைத்தளம், கருப்பு-வெள்ளை மேசைகள், சாம்பல் நிற கேபினட்ஸ் போன்றவை சிறந்த தேர்வாக இருக்கும். சாம்பலுக்குப் பதிலாக மங்கிய வெள்ளையையும் பயன்படுத்தலாம்.
கொஞ்சம் மரம்
கருப்பு-வெள்ளை நிறத்துக்கு மென்மையான தோற்றத்தைக் கொடுக்க நினைத்தால், அதனுடன் மரத்தாலான தரைத்தளத்தை அமைக்கலாம். மரத்தில் சில அறைக்கலன்களையும் இணைக்கலாம். பெரிய சமையலறைக்குக் கருப்பு நிற கேபினட்களும், வெள்ளை நிற சமையல் மேசைகளும் பொருந்தும். சிறிய சமையலறைக்கு இந்த வண்ணங்களை மாற்றி அமைக்கவும். தரைத்தளத்தை மரத்தில் எந்த பேட்டர்னில் வேண்டுமானாலும் அமைக்கலாம்.
நீலத்தின் சாயல்
நீல நிறத்தைச் சமையலறைக்குத் தேர்ந்தெடுப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஏனென்றால், நீல நிறத்தின் எல்லாச் சாயல்களையும் நம்மால் சமையலறைக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அடர்நீலத்தில் ஆரம்பித்து மென்நீலம் வரை நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் நீலத்துடன் மற்ற வண்ணங்களையும் எளிதாகப் பொருத்த முடியும். நீல-பச்சை, செவ்வூதா-நீலம், ஆரஞ்சு -நீலம் போன்ற வண்ணக் கலவைகளையும் சமையலறைக்குப் பயன்படுத்தலாம். இந்த வண்ணங்கள் சமையலறைக்கு ஒருவிதமான சாந்தமான உணர்வைக் கொடுக்கும்.
நீல நிறத்தைச் சமையலறைக்குத் தேர்ந்தெடுப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. ஏனென்றால், நீல நிறத்தின் எல்லாச் சாயல்களையும் நம்மால் சமையலறைக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அடர்நீலத்தில் ஆரம்பித்து மென்நீலம் வரை நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அத்துடன் நீலத்துடன் மற்ற வண்ணங்களையும் எளிதாகப் பொருத்த முடியும். நீல-பச்சை, செவ்வூதா-நீலம், ஆரஞ்சு -நீலம் போன்ற வண்ணக் கலவைகளையும் சமையலறைக்குப் பயன்படுத்தலாம். இந்த வண்ணங்கள் சமையலறைக்கு ஒருவிதமான சாந்தமான உணர்வைக் கொடுக்கும்.
கிளாசிக் வண்ணங்கள்
கிளாசிக் வண்ணங்களான ஆலிவ் பச்சை, ‘மின்ட்’ பச்சை போன்ற வண்ணங்கள் கிளாசிக் தோற்றத்தை விரும்புபவர்களுக்கு ஏற்றதாக இருக்கும். இந்த வண்ணங்களை மரத்திலும், உலோகங்களிலும் சமையலறையில் பயன்படுத்தலாம். சமையலறைப் பொருட்களான ஃப்ரிட்ஜ், மேசை, விளக்குகள் போன்றவற்றை இந்த வண்ணங்களில் தேர்ந்தெடுக்கலாம்.
சிவப்பின் ஆற்றல்
சமையலறைக்கு அடர்சிவப்பு நிறம் எப்போதும் பொருந்தும். இந்தச் சிவப்பை அறைக்கலன்கள் மூலமாகப் பயன்படுத்துவது சிறந்தது. சமையலறை திரைச்சீலைகள், கேபினட் போன்றவற்றுக்கும் சிவப்பைப் பயன்படுத்தலாம். அடர்சிவப்பு, அடர்நீலம், வெள்ளை இந்த மூன்று வண்ணங்களின் கலவையும் சமையலறைக்குப் பொருந்தும்.
புதுமையான வண்ணங்கள்
இந்த வண்ணங்கள் மட்டுமல்லாமல் ஆரஞ்சு, மஞ்சள் போன்ற டிரண்டியான வண்ணங்களையும் சமையலறைக்குப் பயன்படுத்தலாம். இந்த வண்ணங்களை நாற்காலிகள், பூக்கள், விளக்குகள், மேசைத் துணி, திரைச்சீலை போன்றவற்றில் பயன்படுத்தலாம். இது சமையலறைக்குப் புத்துணர்ச்சியான தோற்றத்தைக் கொடுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT