Last Updated : 03 Oct, 2015 09:36 AM

 

Published : 03 Oct 2015 09:36 AM
Last Updated : 03 Oct 2015 09:36 AM

விலை மதிப்பான சொத்துப் பரிமாற்றங்கள்

இந்திய ரியல் எஸ்டேட் அதன் நீண்ட தேக்க நிலையிலிருந்து இப்போது மீண்டுவரத் தொடங்கியுள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் கடந்த ஒரு மாத இடைவெளியில் நான்கு மதிப்புமிக்க சொத்துப் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. அவற்றில் இரண்டு வீட்டு விற்பனை தொடர்பான சொத்துப் பரிமாற்றங்கள். மற்ற இரண்டும் வர்த்தக ரியல் எஸ்டேட் தொடர்பான சொத்துப் பரிமாற்றங்கள்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய ரியல் எஸ்டேட் மிகப் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. கட்டுமானப் பொருள்களின் விலையேற்றம், உலகப் பொருளாதாரத் தேக்க நிலை போன்ற பல காரணங்களால் இந்தப் பின்னடைவு நேர்ந்தது. ஆனால் இந்த 2015-ன் முதலாம் காலாண்டில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ரியல் எஸ்டேட் ஏறுமுகம் கண்டது. வீட்டுக் குடியிருப்பு சார்ந்த ரியல் எஸ்டேட் மட்டுமல்லாமல். வர்த்தக ரியல் எஸ்டேட்டும் குறிப்பிடத் தகுந்த அளவில் உயர்ந்தது.

சில வாரங்களுக்கு முன் நாட்டின் மிக மதிப்பு மிக்க வீட்டுச் சொத்துப் பரிமாற்றம் மும்பையில் நடந்தது. இந்தியாவின் முன்னணித் தொழிலதிபர்களுள் ஒருவரும்ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவருமான குமார மங்கலம் பிர்லாதான் இந்தச் சொத்துப் பரிமாற்றத்தைச் செய்தது. மும்பையின் மலபார் ஹில் பகுதியில் உள்ள ஜாட்டியா மாளிகையை அவர் 425 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்திய அளவில் சமீபத்தில் நடந்த விலை மதிப்பான வீடு விற்பனையாக அது ரியல் எஸ்டேட் உலகின் பேசுபொருளானது. இதற்கு முன்பு 2011-ல் இதே பகுதியில் மகேஸ்வரி இல்லம் 400 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக மெராங்கர் இல்லம் 2014-ல் 372 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது.

ஜாட்டியா மாளிகையும் வாங்கனர் மாளிகையும்

25 ஆயிரம் அடி பரப்பளவு கொண்ட இந்த சொத்து லிட்டில் கிப்ஸ் சாலையில் அமைந்துள்ளது. இந்த சொத்துப் பரிமாற்றம் ஜே.எல்.எல். நிறுவனம் மூலம் நடந்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்தச் சொத்துப் பரிமாற்றம்தான் மதிப்பு மிக்க போராட்டமாகக் கருதப்பட்ட சமயத்தில் அதன் அடுத்த வாரமே பூனாவைச் சேர்ந்த தொழிலதிபர் சிரஸ் பூனாவாலா அதை முறியடித்துள்ளார். அமெரிக்க அரசாங்கத்துக்குச் சொந்தமான லிங்கன் ஹவுஸை ரூ.750 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்தக் கட்டிடம் 1957-ல் இருந்து 2011 வரை அமெரிக்காவின் தூதரகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

அதற்கு முன்பு இந்தக் கட்டிடம் வாங்கனர் அரச வம்சத்தின் மாளிகையாக இருந்தது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தக் கட்டிடத்தை தனது வீடாகப் பயன்படுத்த உள்ளார் பூனாவாலா. பூனாவாலா, செரும் இன்ஸ்ட்டியூட்டின் தலைவர் ஆவார். பாம்புக் கடிக்கான மருந்துகளை இந்த நிறுவனம் உருவாக்கிவருகிறது.

வீடு தொடர்பான ரியல் எஸ்டேட் இந்த மாதிரியான விலை மதிப்பு மிக்க சொத்துப் பரிமாற்றம் மூலம் புத்தாக்கம் பெற்றது என்றால் அதற்கு அடுத்த இரு வாரங்களில் வர்த்தக ரியல் எஸ்டேட் இந்தச் சாதனைகளை முறியடித்தது. இதுவரை நடந்ததில் மிக விலை மதிப்பான சொத்துப் பரிமாற்றங்கள் இந்த வாரத்தில் நடந்துள்ளன.

முதலாவதாக மும்பையில் உள்ள பி.கே.சி. என அழைக்கப்படும் பாந்தரா குர்லா காம்பெள்க்ஸ் காத்ரேஜ் நிறுவனத்திடமிருந்து ரூ. 1, 480 கோடிக்கு விற்கப்பட்டது மிக விலை மதிப்பான சொத்துப் பரிமாற்றமாகும். மும்பையின் மிக முக்கியமான பகுதியான பிர்லாவுக்கும் பாந்த்ராவுக்கு இடையில் அமைந்துள்ளது இந்த வணிக வளாகம். பல்வேறு நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ள இந்தக் கட்டிடம் மும்பையின் அடையாளாச் சின்னங்களுள் ஒன்று. இந்த வணிக வளாகத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஆறு லட்சம் பேர் பணியாற்றுவர்கள் எனச் சொல்லப்படுகிறது. 4,35,000 சதுர அடியுள்ள இந்த இடத்தைத் தங்கள் அலுவலகம் அமைப்பதற்காக முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான அபாட் வாங்கியுள்ளது.

தங்களது அலுவலகம் மட்டுமல்லாது தங்கள் நிறுவனத்தின் 1,500 ஊழியர்களுக்குமான வீடுகளும் இதில் உருவாக்கப்படவுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மைல்ஸ் டி ஒயிட்ஸ் தெரிவித்துள்ளார். இந்தப் பணிகள் 2016-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காத்ரேஜ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பிரோஜ் காத்ரேஜ் இந்த விற்பனை தங்கள் நிறுவனத்தின் மிகப் பெரிய வெற்றி எனச் சொல்லியிருக்கிறார்.

இதற்கடுத்ததாக இந்தச் சொத்துப் பரிமாற்றத்தையும் விஞ்சும் அளவுக்கு ஊடகப் பொழுதுபோக்கு நிறுவனமான கார்னிவல் குழுமன் 1,785 கோடி ரூபாய்க்கு சண்டிகரில் உள்ள எலண்ட் வணிக வளாகத்தையும் ஹெய்ட் ஹோட்டலையும் வாங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டின் விலை மதிப்பான சொத்துப் பரிமாற்றத்தைச் செய்த சாதனையை காத்ரேஜ்ஜிடமிருந்து எல் அண்ட் டி நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது. இது முதலீட்டுகாக வாங்கப்பட்டதாக கார்னிவேல் குழுமத்தின் தலைவர் காந்த் பாஸி தெரிவித்துள்ளார்.

வர்த்தக ரியல் எஸ்டேட் இன்னும் வளர்ச்சி அடையக்கூடிய முகாந்திரம் இருப்பதாக அத்துறைசார் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள். 1.9 கோடி சதுர அடி இடம் வர்த்தக ரியல் எஸ்டேடுக்காக பரிமாறப்பட்டுள்ளதாக கஷ்மன் அண்ட் வேக்பீல்டு ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 18 சதவீதம் அதிகம். பெரும் வளர்ச்சிக்கான மணியோசைகளாக இந்தச் சொத்துப் பரிமாற்றங்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x