Published : 10 Oct 2015 11:06 AM
Last Updated : 10 Oct 2015 11:06 AM

சட்டச் சிக்கல்: பூர்வீக சொத்து என்றால் என்ன?

நான் திருப்பூரில் வசிக்கிறேன். என்னுடைய தாத்தாவுக்கு இறப்புச் சான்றிதழ் இருக்கிறது. ஆனால் வாரிசுச் சான்றிதழ் இல்லை. தாத்தாவுக்கு மூன்று வாரிசுகள். என்னுடைய அப்பாவும், சித்தப்பாவும் இறந்துவிட்டார்கள். தற்பொழுது என் அத்தை மட்டும் இருக்கிறார். என் அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும் இறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ் எடுத்து வைத்துள்ளோம். எங்கள் சொத்தைப் பிரித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறோம். என் அத்தை மற்றும் வாரிசுகள் அவர்கள் தாத்தாவின் சொத்துகள் வேண்டாம் என்று எங்களுக்கு எழுதித் தருவதாகச் சொல்லியுள்ளனர். சொத்துகள் அனைத்தும் என்னுடைய தாத்தா பெயரில் தனிப் பட்டாவாக உள்ளது. தற்போது சொத்துகள் அனனத்தையும் நாங்கள், என்னுடைய அப்பாவும், சித்தப்பாவும் எப்படிப் பயன்படுத்தியிருந்தார்களோ அதில் கொஞ்சம் மாற்றம் செய்து பங்கிடலாம் என்று இருக்கிறோம். தாத்தாவுக்கு வாரிசுச் சான்றிதழ் இல்லாமல் இருப்பதால் ஏதாவது சட்டச் சிக்கல் வருமா? தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

- முரளி சங்கர், திருப்பூர்

உங்கள் தாத்தாவின் வாரிசுச் சான்றிதழை நீங்கள் கண்டிப்பாகப் பெற வேண்டும். அது இல்லாமல் அவரின் வாரிசுகள் மற்றும் வழித் தோன்றல்கள் அந்த சொத்துக்களைப் பொறுத்து பாகப் பிரிவினை பத்திரம் பதிவு செய்துகொள்ள சார்பதிவாளர் அனுமதிக்க மாட்டார்.

எனது தந்தை சம்பாதித்த சொத்தை அவர் இறந்த பின்பு எனது தாய் மற்றும் எனது இரண்டு தம்பிகள் எனக்கு ‘தான செட்டில்மென்ட்’ செய்து கொடுத்து விட்டனர். நான் எனது சித்தப்பாவுக்கு பவர் கொடுத்துவிட்டேன். பிறகு அவர் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் பவர் பத்திரத்தை ரத்து செய்துவிட்டேன். ஆனால் ரத்து செய்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு சித்தப்பா, தன் மனைவி மீது அடமானக் கடன் செய்துள்ளார். இது சட்டப்படி செல்லுமா?

- ரமேஷ், ஆவடி

உங்கள் சித்தப்பாவை உங்களின் முகவராக நியமித்த அதிகாரப் பத்திரத்தினை நீங்களே ரத்து செய்த பிறகு உங்கள் சித்தப்பா உங்களின் முகவர் என்ற அதிகாரத்தில் அவரது மனைவிக்கு ஆதரவாக அடமானக் கடன் பத்திரம் இயற்றியது சட்டப்படி செல்லாது.

எனது மனைவியின் தகப்பனார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இங்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சிங்கப்பூர் குடியுரிமை பெற்று, அங்கேயே வியாபாரமும் செய்துவந்தார். அந்தச் சமயத்தில் சுமார் 26 வருடங்களுக்கு முன்னால் அங்கு மரணம் அடைந்து, சிங்கப்பூர் அரசு மூலமாக இங்கு மனைவியிடம் அனுமதி பெற்று அங்கு அடக்கமும் செய்யப்பட்டது. காரணம் அந்தக் காலகட்டத்தில் வறுமை காரணமாக இங்கு கொண்டுவரமுடியாத சூழ்நிலை. அவருடைய இறப்பு இங்கே பதியவும் இல்லை. இப்போது அவரது பெயரில் உள்ள சொத்துகளைப் பிள்ளைகள் இருவர் பெயரிலும் மாற்றம் செய்ய வாரிசுச் சான்றிதழ் எடுக்க வேண்டுமா, இறப்புச் சான்றிதழ் எப்படி எடுப்பது?

- நூர்முகம்மது, கன்னியாகுமரி

உங்கள் மனைவியின் தகப்பனாரின் இறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ் கண்டிப்பாகத் தேவைப்படும். உங்கள் மனைவியின் தகப்பனார் சிங்கப்பூரில் காலமாகி அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளதால் நீங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் மனுசெய்துதான் அவரது இறப்புச் சான்றிதழைப் பெற முடியும். அவரின் இறப்புச் சான்றிதழை அவ்வாறு பெற்ற பிறகு நீங்கள் இங்கு வட்டாட்சியரிடம் வாரிசுச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்க முடியும். வட்டாட்சியர் வாரிசுச் சான்றிதழ் தர மறுத்தால் நீங்கள் தகுந்த நீதிமன்றத்தை அணுகி வாரிசுச் சான்றிதழ் பெறலாம்.

எனது அப்பாவின் அப்பா, அவர் சம்பாதித்த சொத்துகளை எனது அப்பாவுக்கு உயில் எழுதிவைத்துவிட்டு மறைந்துவிட்டார். தற்போது எனது அப்பா அந்தச் சொத்துகளை அனுபவித்துவருகிறார். என் அப்பாவுக்கு நான் ஒரு ஆண், மற்றும் மூன்று பெண்கள். மகள்கள் மூவருக்கும் 1989-க்கு முன்பே நல்ல சீருடன் திருமணம் நடந்துவிட்டது. தற்போது என் அப்பா எனக்கு மட்டும் செட்டில்மென்ட் செய்துவைக்க விரும்புகிறார். இந்தச் சொத்தில் என் சகோதரிகளுக்குப் பங்குண்டா? ஆம் எனில் எவ்வளவு பாகம்? 2005-ம் ஆண்டு பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத் திருத்தத்தில் 1989-க்கு முன்பு திருமணமான பெண்களுக்குப் பூர்வீகச் சொத்தில் உரிமை உள்ளதா?

- பி.எஸ்.செல்வகுமார், கோயம்புத்தூர்

உங்கள் அப்பாவின் அப்பா தனது சுயசம்பாத்திய சொத்துகளைப் பொறுத்து உங்கள் அப்பாவிற்கு உயில் எழுதி வைத்து அந்த உயில் அமலுக்கு வந்தவுடன் அவை உங்கள் அப்பாவின் சொத்தாகிவிட்டன. ஆகவே அந்தச் சொத்துகளை உங்கள் அப்பா தனது விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் எழுதிக்கொடுக்கலாம். அந்தச் சொத்துகளில் பங்கு கேட்க அவரது வாரிசுகள் யாருக்குமே சட்டப்படி எந்தவித உரிமையும் இல்லை. உங்கள் அப்பா உங்களுக்கு செட்டில்மென்ட் செய்தால் அது சட்டப்படி செல்லும். உங்கள் சகோதரிகள் அந்தச் சொத்துகளில் பங்கு கேட்கச் சட்டத்தில் இடமில்லை.

பூர்வீக சொத்து என்றால் என்ன? என் தாத்தாவின் அப்பா சொத்து என்பது பூர்வீகச் சொத்து ஆகுமா? நான்கு தலைமுறைக்கு மேல் வருவது மட்டும்தான் பூர்வீகச் சொத்தா?

- குணசேகரன், மதுரை

ஒருவர் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்துக்களைப் பொறுத்து எந்த ஒரு ஏற்பாடும் (பத்திரமும்) எழுதி வைக்காமல் இறந்துவிட்டால் அந்தச் சொத்துக்கள் அவரது வழித்தோன்றல்கள் அனைவருக்குமே பூர்வீக சொத்தாகிவிடும்.

என் பெயர் ராம்பிரபு. என் தாய் வழிப் பாட்டி பெயரில் வீடு உள்ளது. என் அம்மாவோடு பிறந்தவர்கள் என் ஐந்து சித்திகள். என் பாட்டியும் தாத்தாவும் இறந்துவிட்டார்கள். என் தாய் நான் சிறு வயதில் இருக்கும்போதே தற்கொலை செய்துகொண்டார். அன்றைய சூழ்நிலையில் இறப்புச் சான்றிதழ் வாங்காமல் விட்டுவிட்டார்கள். என் தாத்தாவும், சித்திகளும் எனக்குத் தெரியாமலேயே வீட்டை அடகு வைத்துப் பணம் வாங்கியுள்ளார்கள். வீடு ஒரு கோடி ருபாய் மதிப்புடையது. இப்பொழுது கடன் தொகை இருபது லட்சமாக உள்ளது. நான் முதல் பேரன் என்பதால் எனக்குப் பங்கு கிடைக்குமா?

- ராம்பிரபு, கரூர்

உங்கள் தாய் எப்போது இறந்தார், உங்கள் தாய்வழிப் பாட்டி எப்போது இறந்தார்கள் என்ற விவரங்களை நீங்கள் கொடுக்கவில்லை. உங்களின் தாய் வழிப்பாட்டி அந்த சொத்தினைப் பொறுத்து ஏற்பாடு (பத்திரம்) எதுவும் எழுதி வைக்காமல் இறந்து போயிருந்தால் அவரின் வாரிசு என்ற அடிப்படையில் அந்தச் சொத்தில் மற்ற வாரிசுகளுடன் சேர்ந்து உங்களுக்கும் சட்டப்படி பங்கு உண்டு. உங்களுக்குத் தெரியாமல் உங்கள் தாத்தாவும் சித்திகளும் அந்த வீட்டை அடகு வைத்துக் கடன் பெற்றிருந்தால் அந்தக் கடனை அடைக்கும் பொறுப்பு அவர்களையே சார்ந்தது. அந்தக் கடன் அந்த வீட்டில் உங்களுக்கு இருக்கும் பங்கினைக் கட்டுப்படுத்தாது.

வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு, கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார். கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in
தபாலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்), கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002. கேள்விகளைத் தமிழில் எழுதி அனுப்பவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x