Last Updated : 03 Oct, 2015 09:11 AM

 

Published : 03 Oct 2015 09:11 AM
Last Updated : 03 Oct 2015 09:11 AM

எனக்குப் பிடித்த வீடு: மரங்கள் வாழும் வீடு

வீடு கட்டும் வாய்ப்பு எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு நடுத்தர வயதைக் கடந்த பின்புதான் அந்தப் பாக்கியம் கிடைக்கிறது. ஆனால் எனக்கு முப்பத்து மூன்று வயதிலேயே அந்த அனுபவம் கிட்டியது.

நானும் எனது மனைவியும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் கையில் கொஞ்சம் பணம் இருந்தது. வீடு கட்டும் ஆசையும் வந்தது. புறநகர்ப் பகுதியொன்றில் எனது மனைவி பெயரில் ஒன்றரை கிரவுண்ட் மனை இருந்தது. மாநகரப் பேருந்து பயணிக்கும் பாதையில் இருபது அடி ஆழத்தில் குடிநீருடன் அமைந்த அருமையான மனை. எதிரே மின் கம்பம். ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் செம்பரம்பாக்கம் ஏரி. ஆங்காங்கே செங்கல் சூளைகள்.

ஒரு வீடு கட்ட என்னென்ன தேவையோ அத்தனையும் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. நல்ல மேஸ்திரியும் பணியாளர்களும் அமைந்தார்கள். எனது மாமனாரின் மேற்பார்வையில் வீடு கட்டும் வேலையில் இறங்கினோம். ஆறே மாதத்தில் வீடு ரெடி. நடுவில் வீடும், நாற்புறமும் காலி இடங்களை விட்டுக் கட்டியிருந்தோம். ஏற்கெனவே இந்த இடம் நன்றாக விளையும் பூமியாக இருந்தது என்ற உண்மை தெரியவர என்னுள் உற்சாகம் தொற்றிக்கொண்டது.

நான் கிராமத்திலிருந்து வந்தவன். தோட்ட வேலை நன்றாகவே தெரியும். சும்மா இருக்க முடியுமா? காரியத்தில் இறங்கினேன். பின்புற இடத்தில் வாழை, தென்னை, மா, கொய்யா வகைகள் ஒரு புறமும் காய்கறிச் செடிகள் மறுபுறமும் பார்த்துப் பார்த்து வைத்தேன். குளியலறைத் தண்ணீர் நேரே செடிகளுக்குப் பாயும்படி வழிவகை செய்தேன்.

முன்புறம் புங்கங்கன்று, வேப்பங்கன்று, செம்பரத்தை, மல்லி, மஞ்சனத்தி போன்றவற்றையும் தகுந்த இடைவெளி விட்டு நட்டுவைத்தேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஓரிரு வருடத்தில் தோட்டம் உயிர்பெற்று பசுமைக் காடாய் மாறிவிட்டது. அணில்களின் ஆட்டம், பறவைகளின் கிறீச்சொலி, வண்ணத்துப் பூச்சிகளின் வட்டமிடல், பூனைகளின் பாய்ச்சல் எல்லாம் கொள்ளை அழகு. நான் வீட்டில் இருந்ததைவிடத் தோட்டத்தில் இருந்த நேரம்தான் அதிகம். குழந்தைகளும் பெண்களும் படிப்பது, டிவி பார்ப்பது, சமைப்பது என்று வீட்டில் புழங்குவார்கள்.

சொந்தக்காரர்கள் வந்தால் முன்புற மரத்தடியில் அமர்ந்து அரட்டை அடிப்பார்கள். கேரம், செஸ் விளையாடவும், பிள்ளை ஊஞ்சல் ஆடவும் ஏற்ற இடம் அது. பின்புறக் குழாயடி, சதுரக்கல் பரவி, சிமெண்ட் பூச்சு செய்த பெரிய இடம் துணிதுவைப்பது பாத்திரம் கழுவுவது, தலை பின்னுவது என்று பெண்களின் உலகம் அங்கு களைகட்டும்.

குறிப்பிட்டுச் சொல்ல மற்றொரு விஷயமும் உண்டு. வீட்டின் எதிரே தார்சாலை கடந்து 24 ஏக்கரில் புளிந்தோப்பு இருக்கிறது. ராமர் கோயிலுக்குச் சொந்தமான இடம் அது. நாலு பக்கத்துச் சிறுவர்களும் அங்கு வந்து கிரிக்கெட், கால்பந்து முதலான விளையாட்டில் பொழுதைப் போக்குவார்கள்.

மற்றொரு பகுதியில் நாடோடிக் கும்பல் மாறி மாறி வந்து போவார்கள். அவர்களில்தான் எத்தனை வகை தெரியுமா? இவர்கள் எல்லோரும் என் வீட்டில் வந்துதான் தண்ணீர் வாங்கிக் குடிப்பார்கள். அப்போது அருகில் வேறு வீடுகளே கிடையாது. பிறகு ஒவ்வொரு வீடாக முளைக்கத் தொடங்கியது. அப்படிக் கட்டப்பட்ட வீடுகளின் கிரகப்பிரவேசத்திற்கும் எங்கள் வீட்டிலிருந்து வாழை மரங்கள் போகும்.

இதெல்லாம் 25 வருடங்களுக்கு முன்பு உள்ள சம்பவங்கள். இன்று எனது வீட்டைச் சுற்றிப் பெரிய பெரிய மாடி வீடுகள் வந்துவிட்டன. அந்த வீடுகளுக்கு முன்பாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன மருந்துக்குக்கூட மரம் இல்லை.

இந்த விநாயகர் சதுர்த்தியின்போது எங்கள் பக்கத்து மக்கள் கடைக்குச் சென்று வாழையிலை, மாவிலை அருகம்புல், பூக்கள், காய்கறிகள் எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கி வந்தார்கள். ஆண்டவன் அருளால் இவையெல்லாம் எங்கள் தோட்டத்தில் நிறைந்து இருக்கின்றன.

சாலைகள் அமைத்து, அமைத்து எங்கள் வீடு இப்போது தாழ்வானதாக மாறிவிட்டது. வானுயர் கட்டிடங்கள் போல மாடி வீடுகள் எங்கள் வீட்டைச் சுற்றி வந்த பிறகு எங்கள் வீடு இன்னும் சிறியதாகத் தோற்றம் கொண்டுவிட்டது. ஆனால் ஆரவார மத்தாப்பின் ஜொலிப்பை விட அழகானது அகல் விளக்கில் ஒளி. என் வீடு அகல் விளக்கின் ஒளியைப் போன்றது.

இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி.

உங்கள் வீட்டின் பிடித்த பகுதியின் புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி

சொந்த வீடு, தி இந்து

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை-600 002.

மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x