Published : 17 Oct 2015 11:53 AM
Last Updated : 17 Oct 2015 11:53 AM
குறைந்தபட்ச ஆற்றல் செலவு, குறைந்தபட்ச கார்பன் தடங்கள், சாண எரிவாயு மற்றும் சூரிய மின் ஆற்றல், மையப்படுத்தப்படாத கழிவுநீர் சுத்திகரிப்பு போன்ற அருமையான செயல்முறைகள் மூலம் ஆரோவில் ஆசிரமம் முன்மாதிரியான நகர்ப்புறமாக விளங்குகிறது.
வளர்ச்சி என்ற பெயரில் பொதுவான நடைமுறைகளுக்கு மாற்றான கருத்துகள் பேசப்படும்போதெல்லாம் அதுகுறித்து எதிர்மறையான சந்தேகமான விமர்சனங்கள் வைக்கப்படுவது சகஜம்தான். கட்டிடங்கள் கட்டுவதிலும் இயற்கை வளங்களை ஆற்றல் வளங்களைப் பாதுகாக்கும் நடைமுறைகளைப் பற்றி பேசும்போது அவை ஆடம்பரமானவை, நடைமுறைக்குச் சாத்தியமில்லாதவை என்றும் தொடர்ந்து விமர்சிக்கப்படுகின்றன. எந்தப் புதிய யோசனையையும் உடனடியாக எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருக்கவே செய்கிறது. ஆனால் அவை காலப்போக்கில் நடைமுறைக்கு வருவதும் கண்கூடு.
பாண்டிச்சேரியில் உள்ள ஆரோவில் ஆசிரமம், மாற்றுக் கட்டிடக் கருத்தாக்கங்களைப் பயன்படுத்தி வெற்றிகரமாகச் செயல்பட முடியும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்கிறது. இந்த நகர்த் தொகுதி 1968-ல் ஆரம்பிக்கப்பட்டது. இயற்கையுடன் இணைந்து, குறைந்த நுகர்வு, குறைந்த கழிவு என்ற நோக்கத்துடன் ஆற்றல் வளங்களை வீணாக்காமல் 50 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 500 மக்கள் இங்கே வாழுகிறார்கள்.
இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள், எளிமையான கட்டுமானங்கள், சாண எரிவாயும், தண்ணீர் பம்புகள், சூரிய ஒளி ஆற்றல் தகடுகள், அம்மோனியா வடிகட்டிகள் எனப் பல மாற்றுத் தொழில்நுட்பங்களும் நடைமுறைகளும் இங்கே பின்பற்றப்படுகின்றன.
இயற்கையோடு இணைந்து வாழும் நடைமுறைகளோ தொழில்நுட்பங்களோ நிபுணர்களுக்கு மட்டுமே உரியதல்ல இங்கு. எல்லாரும் சேர்ந்துதான் இந்தப் பசுமை நகரத்தை உருவாக்கியுள்ளனர். எந்த யோசனைகள் பரிந்துரைக்கப் பட்டாலும் எல்லாரும் சேர்ந்து முயன்று பார்ப்பது ஆரோவில் நகர்த்தொகுப்பில் வாழும் மக்களின் தனித்தன்மையாக உள்ளது.
ஒரு தொழில்நுட்பத்தையோ நடைமுறையையோ கண்டுபிடித்துச் செயல்படுத்துவது மட்டுமல்ல ஏற்கனவே இருக்கும் மனப்போக்குளையும் மாற்றவேண்டியது அவசியமாக உள்ளது. பாரம்பரியமான பொருட்களையும் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்துவது மட்டுமின்றி, பெர்ரோ சிமெண்ட் போன்ற நவீனக் கட்டுமானப் பொருட்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதற்கான மனத்திறப்பும் அவசியம். களிமண் செங்கல்கள், ஆக்சைடு தரைகள், மண் சுவர்கள், ஓலைக்கூரைகள், குறைந்த கட்டுமானப் பொருட்கள் தேவைப்படும், உறுதியான கூம்புகள் மற்றும் வளைவுகள் இங்குள்ள கட்டிடங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
1967-ல் உருவாக்கப்பட்ட ஆரோவில் மாஸ்டர் பிளான்படி, அமைதிப் பகுதி, தொழில் பகுதி, சர்வதேசப் பகுதி, குடியிருப்புப் பகுதி, கலாச்சாரப் பகுதி மற்றும் பசுமை பிராந்தியம் என பிரிக்கப்பட்டுள்ளன. கம்யூனிட்டிஸ் என்று அழைக்கப்படும் பகுதியில் வீடுகள் தொகுதிகளாக உள்ளன. போதுமான அளவுக்கு மேல் அதிகரிக்காதவாறு இவை தன்னிறைவுடன் உள்ளன. தேவைகளுக்கு அதிக தூரம் பயணிக்க வேண்டாத நிலையில் உள்ளன. பொதுப்பயன்பாட்டுக்கு சமூக சமையலறைகள், சூரிய ஆற்றல் சேமிக்கும் கலன்கள், தண்ணீர் பம்புகள், காற்றாலைகள் என அனைத்து வசதிகளும் அனைவரும் பகிர்ந்துகொள்ளும் வகையில் இருக்கின்றன.
சூரிய ஒளி ஆற்றலிலிருந்து வெப்பத்தைப் பெற்று சமையல் பணிகளைச் செய்யக்கூடிய வசதியுள்ள சோலார் கிச்சன் இங்கே உள்ளது. மழைநீர் சேமிப்புச் செயல்பாடுகளும் முறையாக உள்ளன.
ஆரோவில் போன்ற சிறிய நகர்த்தொகுதிகளில் கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையில் மக்கள் வாழும் பகுதியில் மட்டுமே இதுபோன்ற மாற்று நடைமுறைகள் சாத்தியம் என்ற விமர்சனங்கள் உள்ளன. ஆனால் உலக அளவிலேயே சுற்றுச்சூழலுக்குப் பங்கம் விளைவிக்காமல் ஒரு மக்கள் தொகுதி வாழும் வெற்றிகரமான இடமாக ஆரோவில்லுக்கு நிகராக வேறு இடம் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT