Last Updated : 12 Sep, 2015 10:05 AM

 

Published : 12 Sep 2015 10:05 AM
Last Updated : 12 Sep 2015 10:05 AM

புறநகர் அடுக்குமாடி வீடு: அடிப்படை வசதியும், எகிறும் செலவினமும்

சென்னை போன்ற பெரு நகரங்களின் மையப் பகுதியில் வீடு கட்டுவதற்கு நிலங்கள் கிடைப்பது என்பது குதிரை கொம்பாகிவிட்டது. எனவே புறநகர்ப் பகுதிகளின் பக்கமே மக்களின் பார்வைத் திரும்பியுள்ளது. அதுவும் புற நகரிலும்கூட தனி மனை வாங்கி வீடு கட்டுவதற்கு பட்ஜெட் கொஞ்சம் அதிகமாகிவிடும். எனவே அடுக்குமாடி வீடுகள்தான் மக்களின் விருப்பத் தேர்வாக உள்ளது. புறநகரில் அடுக்குமாடி வாங்கும்போது உங்கள் செலவினங்கள் கொஞ்சம் அதிகமாகவும் வாய்ப்புண்டு. எப்படி என்று கேட்கிறீர்களா? மேலும் படித்தால் அதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்.

சென்னையின் புறநகர்ப் பகுதிகள் என்பது சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலும் வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் எல்லைகளிலும் வருகிறது. இப்போது பெரும்பாலான கட்டுமான நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் வீட்டுத் திட்டங்கள் எல்லாமே புறநகர்ப் பகுதிகளில்தான் செயல்படுத்தப்படுகின்றன. பெரும்பாலான புறநகர் பகுதிகளில் அடிப்படை வசதிகள் மிகவும் குறைவாகவே உள்ளன. சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி, பாதாள சாக்கடை வசதி எல்லாம் இருப்பதில்லை. இந்த அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில் அடுக்குமாடி வீடு வாங்கும்போது செலவினங்கள் எகிறுகின்றன.

சாலை வசதியை விட்டு விட்டாலும்கூட குடி நீர் வசதி, கழிவுநீர் வசதி, பாதாள சாக்கடை வசதிகள் இல்லாததால் ஏற்படும் செலவினங்கள்தான் இது. நகர்ப்புறங்களில் மெட்ரோ குடிநீர் வசதி செய்யப்பட்டிருப்பதால், நகர்ப்புற மக்கள் அந்தக் குடிநீரைக் குடிக்கவும், இதர வீட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், இந்த வசதி இல்லாத புறநகர்ப் பகுதிகளில் குடிநீரையும் காசு கொடுத்து விலைக்க வாங்க வேண்டியிருக்கும்.

குளிக்க, கழிவறை, துணி துவைக்க, பாத்திரங்கள் கழுவ தேவைப்படும் நீரையும் லாரி தண்ணீரைதான் வாங்க வேண்டியிருக்கும். நிலத்தடி நீரைப் பயன்படுத்தி கொள்ளலாமே என்ற எண்ணம் உங்களுக்கு வரும்? ஆனால், பல இடங்களில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டதால் எப்போதும் ஒரே சீராக அந்த நீர் கிடைப்பதில்லை. இன்னும் ஒரு சில இடங்களில் பயன்படுத்த முடியாத அளவுக்கு நிலத்தடி நீர் இருப்பதால், அவற்றை பயன்படுத்தவும் முடியாது.

எனவே லாரி தண்ணீர்தான் தண்ணீர் தேவையைப் போக்க ஒரே வழி. ஒரு லோடு லாரி தண்ணீர் என்பது 12 ஆயிரம் லிட்டர். ஆறு வீடுகள் கொண்ட அடுக்குமாடி வீட்டுக்கு ஒரு லோடு தண்ணீர் வாங்கினால் அதிகபட்சமாக 4 நாட்களுக்கு மேல் தண்ணீர் இருக்காது. எனவே ஒவ்வொரு 4 நாட்களுக்கு ஒரு முறையும் லாரி தண்ணீர் வாங்க வேண்டியிருக்கும். அப்படி வாங்கும்போது ஒரு மாதத்திற்கு 7 அல்லது 8 லோடு லாரி தண்ணீர் தேவைப்படும். ஒரு லோடு லாரி தண்ணீர் ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்து விற்கிறார்கள். எனவே 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை செலவாகும்.

அடுத்து, கழிவு நீர் அகற்றுவது. சாக்கடை, பாதாளசாக்கடை வசதி இல்லாவிட்டால், இந்த நீரை எப்படி வெளியேற்றுவது? வீட்டில் செப்டிக் டேங்க் அமைத்து, அதில் கழிவுநீரைச் சேமித்து பின்னர் வெளியேற்ற வேண்டியிருக்கும். பல இடங்களில் இரண்டு செப்டிக் டேங்க் வைத் திருப்பார்கள். கழிவறையில் இருந்து வெளியேறும் தண்ணீரை சேகரிக்க ஒரு செப்டிக் டேங்க் இருக்கும்.

சமையலறை நீர், குளியலறை நீர், துவைத்த நீரை வெளியேற்ற இன்னொரு செப்டிக் டேங்க் இருக்கும். 6 வீடுகளில் இருந்து வரும் நீர் செப்டிக் டேங்கில் சேகரிக்கப்படும் போது 40 நாட்களுக்குள் அது நிரம்பிவிடும். இந்தக் கழிவு நீரை கழிவு நீரகற்றும் லாரி மூலமே வெளியேற்ற முடியும். இரண்டு செப்டிக் டேங்கில் இருந்து கழிவுநீரை எடுக்க ஆயிரம் ரூபாய் வீதம் இரண்டாயிரம் ரூபாயும், செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய இரண்டாயிரம் ரூபாயும் செலவாகிவிடும்.

பின்னர் குடிப்பதற்கு கேன் தண்ணீர் வாங்க வேண்டும். அதில் இருந்துதான் சமையல் செய்ய வேண்டும். நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு மாதத்துக்கு 14 முதல் 20 வரையில் கேன் தண்ணீர் தேவைப்படும். ஒரு கேன் தண்ணீரின் விலை இடத்துக்கு இடம் மாறுபடுகிறது. 30 ரூயாப் என்று வைத்தால் 420 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை செலபாகும். அடுக்குமாடிப் பராமரிப்புக்கு செலவு இருக்கும். இவற்றையெல்லாம் கூட்டிப் பார்த்தால் அடுக்குமாடி வீட்டில் ஒரு குடும்பத்துக்கு 2,000 முதல் 3 ஆயிரம் வரையில் கூடுதல் செல்வாகிவிடும்.

வீட்டுக் கடன் வாங்கி வீடு வாங்கியவர்கள் மாதந்தோறும் இ.எம்.ஐ.-யைச் செலுத்தி வருவர்கள். அந்தச் சுமையோடு இந்தக் கூடுதல் தொகையும் சேரும்போது சுமை இன்னும் அதிகமாகிவிடும். புறநகர்ப் பகுதியில் தனி வீடு எனும்போது இந்தச் செலவு மிகவும் அதிகமாக இருக்காது. அடுக்குமாடி வீட்டில்தான் செலவினம் கூடுதலாக இருக்கும். எனவே அடுக்குமாடி வீடு வாங்கும்போது அந்தப் பகுதிகளில் குடிநீர் வசதி, கழிவு நீர் வடிகால் வசதி இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சுமையோடு, அந்த வசதிகள் உள்ளாட்சி அமைப்புகளால் ஏற்படுத்தித் தரும் வரை காத்திருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x