Published : 12 Sep 2015 10:43 AM
Last Updated : 12 Sep 2015 10:43 AM
மலைக்கோட்டை நகரமான திருச்சியின் மையப்பகுதி உறையூரில் அமைந்துள்ளது என் அம்மா வீடு. வீட்டின் பெயர் சிமோக்கா இல்லம். எங்கள் அப்பா ஷிமோகா என்னும் ஊரில் ரயில்வேயில் பணியாற்றினார். அந்த ஞாபகமாக அந்த ஊரின் பெயரையே எங்கள் வீட்டுக்கும் வைத்துவிட்டார். ஷிமோகா என்ற ஊர் கர்நாடகாவில் உள்ள அழகான நகரம். கர்நாடகாவின் நெற்களஞ்சியங்களுள் ஒன்றாகவும் கருதப்படும் பகுதியாகும்.
1973-ம் ஆண்டு என் தம்பி இந்த சிமோக்கா வீட்டில்தான் பிறந்தான். மின்சார வசதிகூட இல்லாத அந்த வீட்டில்தான் என் அம்மாச்சி, அப்பாயி, தாத்தாக்கள், சித்தி, சித்தப்பா, பெற்றோர், சகோதரிகள் மூவர், தம்பி ஆகியோருடன் வாழ்ந்தோம். அன்பு, ஆனந்தம், கவலை, கோபம், கண்ணீர், பிரச்சினை, சண்டை, வெறுப்பு, எதிர்ப்பு, வருத்தம் ஆகிய உணர்ச்சிகளால் ஆன வீடு அது.
கன மழைக் காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் அடிக்கடி வந்துவிடும் எனப் பயந்து துணிகளை மூட்டை கட்டிவைப்போம். நாங்கள் கிணற்றில் தண்ணீர் இறைப்பது, தோட்டத்தைக் கவனிப்பது, பூக்களைப் பறிப்பது, சேர்ந்து அனைவரும் மொட்டைமாடியில் உணவு உண்பது என்பதை இப்போது நினைத்தாலும் மனதில் ஆனந்தம் பொங்கும்.
என் படிக்கும் அறை
எங்கள் சிமோக்கா வீட்டில் ஒரு அறையை நான் பயன்படுத்தி வந்தேன். அது தாத்தாவின் அறையாக இருந்தது. அந்த அறையில் தனியாக அமர்ந்து படிப்பேன். என்னுடைய கல்லூரி இளங்கலைத் தேர்வில் என் வாழ்க்கையில் பல தேர்வுகளுக்கு அந்த அறையில் இருந்துதான் படித்தேன். இந்த அறையில் இருந்துதான், முதுகலை, பி.எட்., எம்.எட்., முடித்தேன். பிறகு வேலைக்காக ஆசிரியர் தேர்வாணையத் தேர்வுக்கும் இங்கிருந்துதான் படித்தேன். இந்த அறைக்கு என் வாழ்க்கையில் தனி இடம் உண்டு. இன்று மதுரையில் அரசுக் கல்லூரி பேராசிரியராகி கணவர், மகன்களுடன் சொந்த வீட்டில் வசித்து வந்தாலும் என் அம்மா வீட்டில் உள்ள அந்த அறைபோல் மனதுக்கினிய அறை எங்கும் கிடைக்காது.
என் அம்மா வீட்டில் என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் திருமணம் ஆகி வெளியில் சென்றதும் கடைசியாக அந்த வீட்டில் அந்த அறையில் நான் மட்டும் அமர்ந்து கடந்த காலத்தை நினைத்துப் பார்த்திருந்தேன். என் சகோதரிகளின் குழந்தைகள் நான் படிக்கும் அறைக்குள் நுழைந்து செய்த இடையூறுகள் எல்லாம் இப்போது நினைத்தால் சுவாரசியமான நினைவுகளாக எழுகின்றன.
இன்றும் என் அம்மாவின் வீட்டுக்குச் சென்றால் என் படிக்கும் அறைக்குள் நுழைந்து பழைய நினைவுகளைச் சிறிது நேரம் மீட்டிப் பார்ப்பேன். அந்தப் பழைய நினைவுகளில் மூழ்கி மீண்டுவரும்போது மனதில் இனம்புரியாத மகிழ்ச்சியை உணர்கிறேன். பல நாட்டு வராலாறுகள் படித்தாலும், பட்டங்கள் வாங்கினாலும் என் அம்மாவின் வீட்டு வரலாறுதான் என்னோடு பின்னிப் பிணைந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT