Published : 12 Sep 2015 10:46 AM
Last Updated : 12 Sep 2015 10:46 AM
இந்தியாவின் மக்கள் தொகை 2011 கணக்கெடுக்கப்பின்படி 120 கோடி. இந்த மக்கள் தொகையில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் நகரத்தில்தான் வசிக்கிறார்கள். நகர மக்கள் தொகை 37.7 கோடி. இந்தக் கணக்கின்படி பார்த்தால் நகர வீட்டுப் பற்றாக்குறை 1.9 கோடி வீடுகள். கிராமப்புறத்தில் இந்தப் பற்றாக்குறை 4 கோடியாக இருக்கிறது. இன்றைக்குள்ள சூழலில் இந்த வீட்டுப் பற்றாக்குறை என்றால் இன்னும் பத்து ஆண்டுகளில் இந்தத் தேவை மிக அதிகமாக வாய்ப்பிருக்கிறது.
குறிப்பாக நகர வீட்டுப் பற்றாக்குறை கணிசமான அளவில் உயர வாய்ப்புள்ளது. திட்டக் கமிசன் 2.9 கோடியாக இருக்கும் என கணித்திருக்கிறது. கிராமப் புறத்தில் 2.5 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வீட்டுத் தேவையைச் சமாளிக்கும் விதத்தில்தான் மத்திய அரசு பல விதமான திட்டங்களை அறிவித்தது. அவற்றில் முக்கியாமனவை ‘அனைவருக்கும் வீடு-2022’, ‘ஸ்மார்ட் சிட்டி’ ‘அம்ரூத்’. இந்த மூன்று திட்டங்களையும் கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஸ்மார்ட்சிட்டி திட்டம்
ஸ்மார்ட்சிட்டி திட்டம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் ரியல் எஸ்டேட் துறை எதிர்நோக்கியிருந்த திட்டம். இதில் தமிழ்நாட்டில் இருந்து ஏற்கனவே சென்னை தேர்வாகியிருந்தது. சென்னையில் பொன்னேரியில் ஸ்மார்ட்சிட்டி அமையவிருப்பதான அறிவிப்பு முன்பே வெளியாகிருந்தது. அதன் பிறகு தமிழ்நாட்டின் பெரு நகரங்களான மதுரை, சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்கள் தேர்வுசெய்யப்பட்டன. அதற்கடுத்து வந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் இருந்து கூடுதலாக ஆறு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
அவை திருப்பூர், வேலூர், திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி, ஈரோடு ஆகிய ஆறு நகரங்கள் ஆகும். இந்திய அளவில் உத்திரபிரதேசத்துக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் அதிக நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்துக்கென 98 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் முதலில் 100 நகரங்கள் ஸ்மார்ட்சிட்டியாக மாற்றப்படும் என அரசு அறிவித்திருந்தது. மீதி 2 நகரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி வளர்ச்சிக்கென ரூ. 48,000 கோடி ஒதுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அனைவருக்கும் வீடு- 2022
அதாவது 2022-ம் ஆண்டுக்குள் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் வீட்டு வசதி செய்துதர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இப்போது இந்தத் திட்டத்தின்படி முதற்கட்டமாக வீட்டுக் குடியிருப்புத் திட்டங்களைச் செயல்படுத்த 9 மாநிலங்களில் 305 நகரங்களை மத்திய அரசு தேர்வுசெய்துள்ளது. இந்தப் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு நகரமும் இடம்பிடிக்கவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் நகர்ப் புறப் பகுதிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீடுகள் ஒருபக்கம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தாலும் ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் வீட்டுத் தேவையும் உயர்ந்துள்ளது. இந்த இலக்கை அடைவது எளிய காரியமல்ல. ஆனால் அதற்கான தொடக்கத்தை இந்தத் திட்டம் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திர விழாவை முன்னிட்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி அவஸ் யோஜனா எனப் பெயரிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 25-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அடுத்த ஆறு வருடங்களுக்கு இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 2 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்க முடிவெடுத்துள்ளது. நகரத்தில் வாழும் வறுமைக்கோட்டுக் கீழ் உள்ளவர்களுக்கு அவர்களுக்கெனச் சொந்த வீடுகள் கிடைக்க இந்தத் திட்டம் வழிவகை செய்யும் என நம்பப்படுகிறது.
சத்தீஸ்கர், குஜராத், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், கேரளா, மத்தியப்பிரதேசம், ஒடியா, ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய ஒன்பது மாநிலங்கள் முதற்கட்டமாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் சத்தீஸ்கரில் 36 நகரங்களும், குஜராத்தில் 30 நகரங்களும், ஜம்மு காஷ்மீரில் 19 நகரங்களும், ஜார்கண்டில் 15 நகரங்களும், கேரளத்தில் 15 நகரங்களும், மத்தியப்பிரதேசத்தில் 74 நகரங்களும், ஒடியாவொல் 42 நகரங்களும், ராஜஸ்தானில் 40 நகரங்களும் மற்றும் தெலுங்கானாவில் 34 நகரங்களும் அனைவருக்கும் வீடு திட்டம் செயல்படுத்த தேர்வுசெய்யப்பட்டுள்ளன.
இந்த ஒன்பது நகரங்கள் இல்லாமல் இன்னும் ஆறு மாநிலங்களும் இந்தத் திட்டத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. ஆந்திரப்பிரதேசம், பீஹார், மணிப்பூர், மிசோரம், நாகலாந்து, உத்தரகாண்ந் ஆகியவை அந்த ஆறு மாநிலங்கள். அவற்றிலும் தமிழ்நாடு இடம்பெறவில்லை. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் குறைந்த வருவாய் உள்ளவர்கள் வாழ்வதற் கான வீட்டு வசதி முறையாக இல்லை. அவர்களுக்கு வீட்டுப் பற்றாக் குறையையும் மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அம்ருத் நகரங்கள்
ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களை இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுத்து அதன் வசதிகளை மேம்படுத்துவது இதன் நோக்கம். ஒருவகையில் ஒரு சிறிய ஸ்மார்ட்சிட்டி நகரம் என இதைச் சொல்லலாம். இந்தத் திட்டத்தின் கீழ் இந்திய அளவில் 500 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரை இந்தத் திட்டத்துக்கு வைத்துள்ளார்கள். சுருக்கமாக அம்ருத் (AMRUT) என அழைக்கப்படும். இந்த நகர மேம்பாட்டுத் திட்டத்தை (Atal Mission for Rejuvenation and Urban Transformation) மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் பட்ஜெட்டில் அறிவித்தது. திட்டத்தின் மதிப்பு ரூ. 50,000 கோடி.
சமீபத்தில் அம்ருத் திட்டம் அமலாக்கப்பட்டால், நகர்ப்புறங்களில் மின் ஆளுமைக்கு அடிப்படையாக அமைந்த கணினிமயமாக்கல் போன்ற சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும். நகர்ப்புறங்களில் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி வசதியும், செயல்பாடுகளும் மேம்படுத்தப்படும். நகராட்சி வரிகள் மதிப்பிடப்பட்டு முறையான வசூல் மேம்படுத்தப்படும். குடிநீர் வசதி, மின்சார வசதி போன்றவை முறையாகக் கண்காணிக்கப்படும். குடிமக்களுக்குப் பயன்படும் வகையில் நகரத்தின் உள்கட்டமைப்பு மேம்படும் வகையிலான திட்டமிடல் நடைபெறும்.
மொத்தத்தில் நகராளுமையின் தரம் உயர்த்தப்பட உள்ளதால் மக்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையிலான நகரங்களாக இந்த 500 நகரங்களும் மாறும் என்றெல்லாம் அம்ருத் திட்டத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டு நகரங்கள் ஓரளவு பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று திட்டங்கள் மூலம் அடுத்த பத்தாண்டுகளுக்குள் ஓரளவு வீட்டுத் தேவை நிறைவேறிவிடும் என நம்பப்படுகிறது. இது எவ்வளவுக்குச் சாத்தியம் என்ற கேள்வி எழலாம். ஆனால் வீட்டுப் பற்றாக்குறையை இந்தத் திட்டங்கள் ஓரளவு குறைக்கும் என்பதை இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT