Published : 05 Sep 2015 01:01 PM
Last Updated : 05 Sep 2015 01:01 PM
பெரும்பாலான வீடுகளில் படிக்கட்டுகளுக்குக் கீழேயிருக்கும் சுவர்களையும், இடத்தையும் என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே விட்டிருப்பார்கள். ஆனால், இந்தப் படிக்கட்டு சுவர்களையும், இடத்தையும் அழகாக, புதுமையாக வடிவமைக்க முடியும். அதற்கு சில எளிமையான வழிகள்...
அதற்குப் பல வழிகள் இருக்கின்றன.
கூடம் அமைக்கலாம்
படிக்கட்டுகளுக்கு அருகில் இருக்கும் இடத்தில் இரண்டு நாற்காலிகள் ஒரு மேசையுடன் சிறிய கூடத்தை அமைக்கலாம். அதற்குப் பிறகு, இந்த இடம் ஓய்வெடுக்கப் பயன்படும்.
வால்பேப்பர் ஒட்டலாம்
உங்கள் வீட்டில் வளைவான படிக்கட்டுகள் இருந்தால் அதற்குக் கீழிருக்கும் சுவரில் கலைநயமிக்க வால்பேப்பரை ஒட்டிவைக்கலாம். இந்த சுவரில் படங்களை மாட்டிவைத்தாலும் அது அவ்வளவாகக் கவனத்தை ஈர்க்காது. அதனால், வால்பேப்பர் ஒட்டுவது சிறந்த தேர்வாக இருக்கும்.
அலமாரிகள் அமைக்கலாம்
மரத்தாலான படிக்கட்டுகள் அமைப்பதாய் இருந்தால், அதில் சேகரிக்கும் வசதி இருக்கும்படி வடிவமைக்கலாம். இந்த மரப் படிக்கட்டுகளில் அலமாரியுடன் வடிவமைப்பது பிரபலமாக இருக்கிறது. ஆனால், அலமாரியின் உயரம் சிறியதாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அவசியம்.
பொருத்தமான தேர்வுகள்
உங்கள் படிக்கட்டுகளுக்கு அருகே வாயில் இருந்தால், அதன் இரண்டுப் பக்கமும் பெரிய அலங்காரச் செடிகளை வைக்கலாம். இது வீட்டுக்குள் நுழைபவர்களை வரவேற்பதற்குச் சிறந்த வழியாக இருக்கும்.
அலங்கார மேசை
ஒருவேளை, படிக்கட்டுகளுக்குக் கீழே, இரண்டு நாற்காலிகளுடன் கூடிய மேசை அமைக்க முடியவில்லையென்றால் ‘கன்சோல் டேபிள்’ (Console Table) பயன்படுத்தலாம். இதன் மேல் பெரிய பொருட்களை வைக்காமல் அலங்கார மேசையாகப் பயன்படுத்தலாம்.
ஒற்றை நாற்காலி
ஒரே ஒரு ஒற்றைக் கை வைத்த நாற்காலியையும், இழுப்பறைகள் இருக்கும் சின்ன மேசையையும் படிக்கட்டுகளின் ஓரத்தில் வைக்கலாம். இந்த இடத்தைக் காலணிகள் அணிவதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
பெஞ்ச் பயன்படுத்தலாம்
உங்கள் படிக்கட்டுகளுக்குக் கீழேயிருக்கும் சுவர்கள் உயரமாக இல்லையென்றால் நாற்காலி, மேசைகளுக்குப் பதிலாக சிறிய ‘பெஞ்ச்’ பயன்படுத்தலாம். சிறிய திவான்களையும் பயன்படுத்தலாம். இது அந்த இடத்துக்குச் சீரான தோற்றத்தைக் கொடுக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT