Published : 19 Sep 2015 10:10 AM
Last Updated : 19 Sep 2015 10:10 AM
வெளிச்சமே ஒரு வீட்டுக்கு அழகைத் தருகிறது. அந்த வெளிச்சத்தைக்கூட நீங்கள் நினைத்தால், வீட்டின் அலங்காரமாக மாற்றலாம். அதற்கு அலங்கார விளக்குகள் உங்களுக்கு உதவிசெய்யும். இந்த அலங்கார விளக்குகளைச் சரியாகத் தேர்ந்தெடுத்தால், அவை உங்கள் வீட்டையே மிளிர வைக்கும். அதற்கான சில வழிகள்...
நிறங்களின் பரவல்
அறையில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளின் நிறமோ, அமைப்போ உங்கள் விளக்கில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் இருக்கை, குஷன்களின் பேட்டர்ன் அப்படியே விளக்கிலும் தொடர்ந்தால் நல்லது. விளக்கு எரியும்போது உங்களின் அறையில் ஒரேவிதமான மூன்று பேட்டர்ன்கள் இருக்கும். இது அறையில் ஒரு சமநிலையை உருவாக்கும்.
வித்தியாசமான அளவுகள்
நீங்கள் தேர்ந்தெடுக்கும் ‘பேட்டர்னை’அப்படியே பயன்படுத்தப் பிடிக்கவில்லையென்றால், அதை வித்தியாசமான அளவுகளில் விளக்குகளில் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு, உங்கள் அறையின் படுக்கை விரிப்பு, நீல நிறத்தில் இருந்து சுவர் வெள்ளை நிறத்தில் இருந்தால், இந்த இரண்டு நிறங்களை வைத்து ஒரு ‘பேட்டர்னை’ நீங்களே உருவாக்கலாம். இந்தப் பேட்டர்னை விளக்கில் பயன்படுத்திக்கொள்ளலாம். படுக்கை விரிப்பு, திரைச்சீலைகள், தரைவிரிப்பு என எதை வைத்து வேண்டுமானாலும் உங்கள் அலங்கார விளக்குக்கான பேட்டர்னை உருவாக்கலாம்.
வடிவமைப்புகளை ஒன்றிணையுங்கள்
உங்கள் அறை முழுவதும் பயன்படுத்தியிருக்கும் வடிவமைப்புகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரு ‘பேட்டர்னை’ உருவாக்கி அதையும் விளக்கில் பயன்படுத்தலாம். அறையின் பூச்சாடிகளில் இருக்கும் பூக்கள், தரைவிரிப்பின் வடிவமைப்பில் இருக்கும் பூக்கள் என அறையில் இருக்கும் எல்லாப் பூக்களையும் இணைத்து ஒரு பேட்டர்னை உருவாக்கலாம். இந்தப் பேட்டர்னை உங்கள் விளக்குக்குப் பயன்படுத்தலாம்.
கறுப்பு வெள்ளை
கறுப்பு வெள்ளை கலவையை விரும்புபவர்கள் விளக்குகளில் புதுமையான வடிவமைப்புகளை அமைக்கலாம். அறை முழுவதும் கறுப்பு, வெள்ளையில் இருக்கும் பொருட்களும், வித்தியாசமான வடிவமைப்பில் இருக்கும் அலங்கார விளக்கும் வீட்டுக்கு நவீன தோற்றத்தைக் கொடுக்கும்.
அலங்காரத்தில் கதை
ரசனைக்கு ஏற்றபடி இந்த விளக்குகளின் ‘பேட்டர்ன்களால் அறையில் ஓர் அலங்காரமான கதையைச் சொல்லிவிடலாம். அறையை எந்தக் கருப்பொருளில் உருவாக்கியிருக்கிறீர்களோ, அதே கருப்பொருளில் அலங்கார விளக்குகளின் ‘பேட்டர்னை’யும் உருவாக்கலாம். இயற்கைக் கருப்பொருளில் அறையை வடிவமைக்க நினைப்பவர்கள், இந்த அலங்கார விளக்குகளில் பூக்கள், செடிகளின் ‘பேட்டர்னை’ அமைக்கலாம். இந்த பேட்டர்னை அறையின் சுவர் நிறத்தோடு பொருந்தும்படி தேர்ந்தெடுக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT