Published : 19 Sep 2015 10:35 AM
Last Updated : 19 Sep 2015 10:35 AM
சென்னை, கோவை நகரங்களில் அடுக்குமாடிகள் பெருகியவண்ணம் உள்ளன. பொதுமக்களும் அடுக்குமாடி வீடு வாங்க ஆர்வம் காட்டவே செய்கிறார்கள். பல வீடுகள் சேர்ந்த ஒரு குடியிருப்பாக அடுக்குமாடி இருந்தாலும் சொந்த வீடாக இருப்பதை விரும்பவே செய்கிறார்கள். அடுக்குமாடி வீடுகள் வாங்க செல்லும்போது கார்பெட் ஏரியா, பிளிண்த் ஏரியா, பில்டப் ஏரியா, யூடிஎஸ் என ஒவ்வொன்றாகக் கூறுவார்கள். அதைப் புரிந்துகொள்வதில் பலருக்கும் பல சிரமங்கள் இருக்கும். அடுக்குமாடி வீடு வாங்கும்போது பில்டர்கள் அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகள் பற்றியும், அவற்றின் விளக்கங்களையும் பார்ப்போமா?
கார்பெட் ஏரியா:
நான்கு சுவர்களுக்கு இடைப்பட்ட அளவைதான் கார்பெட் ஏரியா சொன்று சொல்வார்கள். அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீட்டுக்குள் ஒரு கார்பெட்டை விரித்தால் எவ்வளவு இடத்தை அது அடைத்துக் கொள்ளுமோ அந்த அளவுதான் கார்பெட் ஏரியா. பொது இடங்கள், பார்க்கிங் என அடுக்குமாடிக் குடியிருப்பில் பொதுவான வசதிகள் அதிகமாகும்போது ’கார்பெட் ஏரியா’ குறைந்து கொண்டே வரும். எப்போது ஃபிளாட் வாங்கினாலும் கார்பெட் ஏரியாவை அளந்து பார்த்து உறுதி செய்ய வேண்டும். கட்டி முடித்த அடுக்குமாடி வீடு என்றால் சுவர்களுக்கு இடையிலான தரையின் அளவைத் துல்லியமாகக் கணக்கிட்டு அளக்கலாம்.
பிளின்த் ஏரியா:
கார்பெட் ஏரியா என்று சொல்கிறார்கள் இல்லையா? அந்த கார்பெட் ஏரியாவுடன் சுவர்களின் தடிமன் சேர்ந்ததே பிளின்த் ஏரியா என்று சொல்வார்கள்.
சூப்பர் பில்டப் ஏரியா:
பிளின்த் ஏரியா அளவில் 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை அதிகரிப்பதே சூப்பர் பில்ட்அப் ஏரியா. பில்டர்கள் சூப்பர் பில்டப் பரப்புக்குதான் வீட்டின் விலையைச் சொல்வார்கள். அதாவது பொது பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட நடைபாதை, மாடிப் படிக்கட்டு, லிஃப்ட் அறை, மோட்டார் அறை எல்லாம் இந்தக் கணக்கில் சேர்ந்துவிடும். இந்த அளவுகள் பிளின்த் ஏரியாவுடன் சேர்க்கப்பட்டு, சூப்பர் பில்ட்அப் ஏரியா கணக்கிடப்படும். பில்டர் சொல்லும் பிளின்த் ஏரியாவிலிருந்து சூப்பர் பில்டப் ஏரியா 15 முதல் 20 சதவிகிதம் அதிகமாக இருந்தால் அளவுகள் சரியாக சொல்லப்பட்டிருக்கின்றன என்று அர்த்தம். அதற்கு மேல் சூப்பர் பில்டப் ஏரியா அதிகமாக இருந்தால் எதற்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் கேளுங்கள்.
யூ.டி.எஸ்.:
அடுக்குமாடிக் குடியிருப்பு எவ்வளவு சதுர அடியில் கட்டப்படுகிறதோ, அந்த விகிதாசாரத்துக்கு ஏற்ப வீடு வாங்கும் ஒவ்வொருவருக்கும் மனையில் எவ்வளவு சதுர அடி மனை சொந்தம் என்பதைக் குறிப்பதே யூ.டி.எஸ்.. அதாவது ‘பிரிக்கப்படாத மனைப் பரப்பு’ என்று அர்த்தம். அடுக்குமாடி வீட்டில் பிரித்து தரப்படும் மனையில் குறிப்பிட்ட ஒரு இடம் தங்களுக்குரியது என அடுக்குமாடி வீட்டு குடியிருப்புவாசிகள் சொந்தம் கொண்டாட முடியாது.
இந்த நான்கு விஷயங்களையும் புரிந்து கொண்டால் போதும், நீங்கள் வாங்கப்போகும் அடுக்குமாடி வீட்டின் அளவு தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT