Published : 12 Sep 2015 09:57 AM
Last Updated : 12 Sep 2015 09:57 AM
கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை என்னும் சென்னைக்காரர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது சென்னைக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே பெருமை சேர்த்த விஷயம். இப்போது அந்த வரிசையில் மற்றொமொரு சென்னைக்காரர் சேர்ந்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள 'கிரீன் பில்டிங் கவுன்சில்' அமைப்பின் புதிய முதன்மைச் செயல் அதிகாரியாக சென்னையைச் சேர்ந்த மகேஷ் ராமானுஜம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிறுவனம் உலக அளவில் பசுமைக் கட்டிடத்துக்கான சான்றிதழ்களை அளித்து வருகிறது. சென்னையில் உள்ள அண்ணா நுற்றாண்டு நூலகக் கட்டிடம் இந்தப் பசுமைக் கட்டிடச் சான்றிதழ் பெற்ற கட்டிடங்களுள் ஒன்றாகும்.
தற்போதைய சி.இ.ஓ. ஆக இருக்கும் அந்த அமைப்பின் இணை நிறுவனர் ரிக் ஃபெட்ரிஸ்ஸியின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. அதற்குப் பின் புதிய சி.இ.ஓ. ஆக, மகேஷ் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“புதுமைக்கு முன்னுரிமை கொடுத்து இந்த அமைப்புக்காக நான் பாடுபடுவேன்” என்று மகேஷ் கூறியுள்ளார்.
2009ம் ஆண்டு அந்த அமைப்பில் தலைமை துணைத் தலைவராகச் சேர்ந்த அவர், 2011ம் ஆண்டு முதன்மை இயக்க அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டார்.
தொடர்ந்து 2012ம் ஆண்டு 'கிரீன் பிசினஸ் செர்டிஃபிகேஷன் இன்கார்ப்பரேஷன்' அமைப்பின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த அமைப்பில் இணைவதற்கு முன்பு அவர் வடக்கு கரோலினா பகுதியில் உள்ள 'எமர்ஜிஸ்' எனும் நிறுவனத்தின் முதன்மை இயக்க அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.
இந்த அமைப்பை ரிக் ஃபெட்ரிஸ்ஸியுடன் இணைந்து மைக் இடாலியானோ மற்றும் டேவிட் காட்ஃப்ரீட் ஆகியோர் தோற்றுவித்தனர். 1993-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அமெரிக்காவில் வளங்குன்றா வளர்ச்சி அடிப்படையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் கட்டிடங்களைக் கட்டுவதை ஊக்கப்படுத்தி வருகிறது. அத்தகைய கட்டிடங்களுக்கு ‘ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம்' (லீட்) எனும் சான்றிதழையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT