Published : 19 Sep 2015 10:14 AM
Last Updated : 19 Sep 2015 10:14 AM
வெயிலின் தாக்கம் அதிகமாகக் காணப்படும் சமயம் இது. வழக்கமாகச் சென்னையில் கோடை என்பது செப்டம்பர்வரை நீடிப்பதில்லை. ஜூன், ஜூலையுடன் தனது ஆதிக்கத்தைக் குறைத்துக்கொண்டுவிடும். ஆனால் இப்போது அப்படியல்ல, செடம்பரின் பாதி நாட்கள் கழிந்த நிலையிலும் நீண்டுகொண்டேயிருக்கிறது கோடை என்று தான் தோன்றுகிறது. இனிமேலும் இப்படித்தானோ என்று அச்சம் எழுகிறது.
பூமி குளிரும் அளவுக்கான மழை என்பது மிகவும் அரிதாகிவிட்டது. குடிப்பதற்குக் காசு கொடுத்து நீர் வாங்கிய சூழல் பழகியது போல வீட்டின் சமையல் தவிர்த்த பிற செலவுகளுக்கான நீரையும் விலைக்கு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவருகிறது. ஆனாலும் நீர் சேமிப்பு குறித்த அக்கறை நமக்கு இருக்கிறதா என்று ஒவ்வொருவரும் கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் எப்போதோ படித்த ஒரு கதை நினைவில் வருகிறது. அந்தக் கதையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உங்களுக்கு இருக்கிறதோ இல்லையோ அதைக் கூறும் விருப்பம் எனக்கு இருக்கிறது.
ஓர் ஆசிரமத்தில் வசித்துவரும் தன் குருவைப் பார்க்கச் சென்றான் சீடன் ஒருவன். செல்லும் வழியெங்கும் சேறும் சகதியுமாக இருந்தது. சீடனின் முழங்கால் வரை சேறு ஒட்டிக்கொண்டுவிட்டது. ஒருவழியாகக் குருவின் ஆசிரமத்தை அடைந்துவிட்டான். கால்களில் ஒட்டிக்கொண்ட சகதியைக் கழுவுவதற்கு வசதியாக வாசலில் ஒரு மிகச் சிறிய குடத்தில் நீர் இருந்தது. அந்த நீரைப் பார்த்த சீடனுக்குப் பயங்கரக் கோபம் வந்துவிட்டது. ஏனெனில் அந்த நீர் கால்களைச் சுத்தமாகக் கழுவப் போதாது. சிறிதுகூட அறிவற்றவராக இருக்கிறாரே குரு என நினைத்தபடியே இருந்த நீரில் முடிந்தவரை கால்களைச் சுத்தமாகக் கழுவிக்கொண்டு ஆசிரமத்துக்குள் சென்றான்.
குருவிடம் இதைப் பற்றிய புகாரைப் பகிர்ந்துகொண்டான். இந்த மிகச் சிறிய குடத்து நீர் கால்களைச் சுத்தமாகக் கழுவப்போதுமா? கூடுதல் நீரை வைத்திருக்கக் கூடாதா என்று கேட்டான். குரு சிரித்துக்கொண்டே ஒரு பெரிய குடத்தில் நீரைக் கொண்டுவந்து சீடனிடம் கொடுத்து வாசலில் வைக்கச் சொன்னார். சீடனும் அவர் சொன்னபடியே செய்தான். சிறிது நேரம் சென்றது. மற்றொரு சீடன் இதைப் போல் வந்தான்.
வந்தவனுக்கு இருக்கும் குடத்து நீர் கால்களைக் கழுவப் போதுமானதாக இருக்காது என்று தோன்றியது. ஆனாலும் அவனும் அந்த நீரை எல்லாம் கொட்டிக் கால்களைக் கழுவிக்கொண்டான். ஆனால் அங்கங்கே சேறு ஒட்டிக்கொண்டுதான் இருந்தது. உள்ளே சென்றவுடன் அவனும் குருவிடம் சென்று என்ன குருவே ஒரு குடத்து நீரை மட்டும் வைத்திருக்கிறீர்கள் இதில் எப்படிக் கால்களைக் கழுவ முடியும் எனக் கோபத்துடன் கேட்டான். குரு எதுவும் சொல்லாமல் முதலில் வந்த சீடனைப் பார்த்துச் சிரித்தார். அந்தச் சீடனுக்கு உண்மை நிலை புரிந்துவிட்டது.
இந்த இரண்டு சீடரில் யார் விவேகி என்று உங்களைக் கேட்டால் முதல் சீடன் தான் விவேகம் கொண்டவன் என எளிதில் சொல்லிவிடுவீர்கள்.. ஏனெனில் அவன்தான் குறைந்த நீரில் அதே நேரத்தில் சிக்கனமாகக் கால்களைக் கழுவிக்கொண்டவன். இப்போது இந்தக் கதையைச் சொல்வதன் காரணத்தை நீங்கள் புரிந்துகொண்டிருப்பீர்கள்.
பல சந்தர்ப்பங்களில் நாம் இரண்டாவது சீடன் போல்தான் நடந்துகொள்கிறோம். ஆனால் அதைத் தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் நமக்குக் கிடைக்கும் நீரின் அளவு குறையும்போது அதற்கு ஏற்றாற்போல் நீரைச் செலவழிக்க வேண்டிய தேவை ஏற்படும். அப்போது நாம் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்றால் இருக்கும் நீரை இப்போதே சிக்கனாமாகச் செலவழிக்கப் பழக வேண்டும்.
நாம் அநாவசியமாகச் செலவழிக்கும் ஒவ்வொரு துளியையும் நாம் சிறிது முயன்றால் தவிர்த்துவிடலாம். தினசரி நாம் எவ்வளவு நீரை வீணாக்குகிறோம் என்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் தெரியும் நமது மெத்தனம். ஆற்றில் கொட்டினாலும் அளந்துகொட்ட வேண்டும் என்று சொன்னார்கள் முன்னோர்கள். ஆனால், குளிக்கச் சென்ற நாம் நினைத்தால் ஒரு பக்கெட் நீரில் சுத்தமாகக் குளித்துவிட முடியும். ஆனால் நாம் குளிப்பதற்கு நாம் எவ்வளவு நீரைப் பயன்படுத்துகிறோம்.
இதையெல்லாம் மிச்சம் பிடித்தால் தண்ணீர் பிரச்சினை போய்விடுமா என்று கேட்கிறீர்களா? இப்படி ஒவ்வொருவரும் வீணாக்கும் நீரை மொத்தமாகச் சேர்த்து வைத்தால் எவ்வளவு லிட்டர் நீர் தேறும்? மலைப்பாக இருக்கிறதல்லவா? எதையுமே தொடங்குவது கடினம். ஆனால் தொடங்கிவிட்டால் எளிதாகப் பின்பற்றலாம். ஆகவே நீர் சேமிப்பை மேற்கொள்வதில் இனியும் காலம் தாழ்த்துவது நல்லதல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT