Published : 08 Aug 2015 12:08 PM
Last Updated : 08 Aug 2015 12:08 PM

கொள்ளுத் தாத்தா சம்பாத்தியம் பூர்வீகச் சொத்தா?

என் பெயர் ராஜ். என் தாத்தாவிற்கு ஈரோட்டில் ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் பத்து கோடி இருக்கும். தாத்தா இறந்துவிட்டார். பாட்டி நலமாக உள்ளார். தாத்தாவிற்கு இரண்டு பிள்ளைகள் மட்டுமே. ஒன்று என் அப்பா. மற்றொன்று என் அத்தை. தாத்தா இறக்கும் முன் எந்த உயிலும் எழுதவில்லை. இப்போது என் அத்தை சரிபாதி கேட்கிறார். ஆனால் என் தந்தைக்குச் சம்மதம் இல்லை. ஆனால் பாட்டி அத்தை பக்கம். சொத்து தாத்தா பெயரில் உள்ளது. என்ன செய்வது? என் அத்தைக்கு 1984 முன் திருமணம் நடந்தது.

- கிருபாகரன்

உங்கள் தாத்தாவுக்குச் சொந்தமான சொத்தைப் பொறுத்தவரையில், அவர் எந்த விதமான உயிலும் எழுதிவைக்காமல் காலமாகியிருக்கும் நிலையில், அந்தச் சொத்தில் உங்கள் பாட்டி, அப்பா, அத்தை ஆகிய மூவருக்குமே தலா மூன்றில் ஒரு பாகம் (1/3) உரிமையுள்ளது. உங்கள் அத்தை இரண்டில் ஒரு பாகம் (1/2) கேட்கும் பட்சத்தில் அதற்கு உங்கள் பாட்டியும் சம்மதித்தால் அவர்களுக்கு இரண்டில் ஒரு பாகம் (1/2) கிடைக்க வாய்ப்புள்ளது. அந்தச் சூழ்நிலையில் உங்கள் பாட்டி சம்மதித்தால் உங்கள் தந்தைக்கும் இரண்டில் ஒரு பாகம் (1/2) கிடைக்க வாய்ப்புள்ளது.

எங்களது பூர்வீக சொத்து எனது கொள்ளுத் தாத்தா சம்பாதித்தது. அந்தச் சொத்துகள் அனைத்தையும் எனது தாத்தா பெயரில் எனது கொள்ளுத் தாத்தா எழுதி வைத்துவிட்டார். எனது தாத்தாவுக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் உள்ளனர். நான் மகன் வழிப் பேரன். எனது தந்தை காலமாகிவிட்டார். அந்த மூன்று மகள்களும் எங்களை ஏமாற்றி எனது தாத்தாவிடம் எல்லாச் சொத்தையும் தானப்பத்திரமாக எழுதி வாங்கிக் கொண்டனர். இது சட்டப்படி குற்றம்தானே? மேற்கொண்டு நான் என்ன செய்ய வேண்டும். ஒரு தீர்வு சொல்லுங்கள்.

- எம்.என்.தர்மன், திருச்சி

உங்கள் பூர்வீகச் சொத்து என்றும் உங்கள் கொள்ளுத் தாத்தா சம்பாதித்து உங்கள் தாத்தா பெயரில் எழுதி வைத்துவிட்டார் என்றும் கூறியுள்ளீர்கள். உங்கள் கொள்ளுத் தாத்தா தனது சுய சம்பாத்தியத்தில் தனது பெயரில் வாங்கிய சொத்துகளை அவர் உயிருடன் இருக்கும்போதே தனது மகனுக்கு (அதாவது உங்கள் தாத்தாவிற்கு) எழுதிக்கொடுத்த பிறகு அந்தச் சொத்துகளை நீங்கள் பூர்வீகச் சொத்து என்று கூற முடியாது. அதன் பிறகு உங்கள் தாத்தா தனது தந்தையால் அவரது பெயருக்கு எழுதி வைக்கப்பட்ட சொத்துகளை அவரது மூன்று மகள்கள் (அதாவது உங்கள் அத்தைகள்) பெயருக்குத் தானப் பத்திரம் எழுதி வைக்க சட்டப்படி முழு உரிமை உண்டு. இந்தச் சூழ்நிலையில் உங்கள் அப்பாவுக்கே அந்தச் சொத்துகளில் பங்கு கேட்கச் சட்டப்படி உரிமையில்லை. ஆதலால் உங்களுக்கும் அந்தச் சொத்துகளில் பங்கு கேட்கச் சட்டப்படி உரிமையில்லை. பூர்வீகமாக வந்த சொத்துகளை உங்கள் கொள்ளுத் தாத்தா உங்கள் தாத்தா பெயருக்கு எழுதி வைத்திருந்தால் அது சட்டப்படி செல்லாது. அதில் பங்கு கேட்க உங்கள் தந்தையாருக்கும் உங்களுக்கும் சட்டப்படி உரிமை உண்டு.

எனது தாத்தா, தன்னுடைய சுயசம்பாத்திய சொத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தை எனக்கும் இன்னொரு இடத்தை எனது தம்பிக்கும் உயில் எழுதி கொடுத்தார். எனக்கு உயில் மூலம் கொடுக்கப்பட்ட அந்த இடத்தில், எனது தந்தை, தம்பிகள், சித்தப்பா, நான் எல்லோரும் சேர்ந்து 20 ஆண்டுகளாகக் குடும்ப வியாபாரம் செய்துவந்தோம். வியாபாரம் மூலம் பிற சொத்துகளையும் வாங்கினோம். எனது தந்தை இறந்த பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு முன், எங்களுக்குள் (சித்தப்பா மற்றும் எனது தம்பிகள், தங்கைகளுக்குள்) பாகப்பிரிவினை செய்துகொண்டோம்.

பத்திரத்தில் நான், எனது தம்பி, தங்கைகள், அம்மா, சித்தப்பா ஆகியோர் அனைத்து இடங்களையும் பிரித்து எழுதி, கையெழுத்து இட்டுப் பதிவு செய்தோம். இப்போழுது எனது சித்தப்பாவின் மகள் மற்றும் மகன் தங்களுக்கும் தனித்தனிப் பங்கு கொடுக்க வேண்டும். மொத்த சொத்தில் தங்களுக்கும் பங்கிருப்பதாகக் கூறுகின்றனர். இதில் எனக்கு எனது தாத்தாவால் உயில் மூலம் கொடுக்கப்பட்ட இடத்திலும் பங்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனக்கு உயில் மூலமாகக் கிடைத்த சொத்தில் மற்றவருக்குப் பங்கு உண்டா? விளக்கமளிக்க வேண்டுகிறேன்.

- மகேந்திரன்

உங்கள் தாத்தா தனது சுய சம்பாத்தியத்தில் தனது பெயரில் வாங்கி உங்களுக்கு ஆதரவாக ஒரு உயில் எழுதி வைத்ததன் பேரில் உங்களுக்கு உரிமையாகியுள்ள சொத்தில் வேறு யாருமே பங்கு கேட்கச் சட்டத்தில் இடமில்லை. நீங்கள் உங்கள் அப்பா, சித்தப்பா மற்றும் உங்கள் தம்பிகள் ஆகியோர் கூட்டாகக் குடும்ப வியாபரம் செய்து அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு வாங்கியுள்ள அனைத்துச் சொத்துகளையும் பொறுத்த வரையில் குடும்ப வியாபாரத்தில் பங்கெடுத்துக்கொண்ட உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பங்கு கேட்க உரிமையுண்டு. உங்கள் சித்தப்பாவின் மகன் மற்றும் மகள் இருவரும் குடும்ப வியாபாரத்தில் பங்கெடுக்கவில்லை என்றால் அவர்களுக்கு அந்த சொத்துகளில் பங்கு கேட்கச் சட்டப்படி உரிமையில்லை.

நான் ஒரு திருமணமாகாத பெண். வயது 40. என் கூடப்பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள். நான் இரண்டாவது பெண். தற்போது என் அக்கா, தங்கை மற்றும் ஒரு தம்பி ஆகியோருக்குத் திருமணமாகிவிட்டது. எனது தந்தை 15 வருடத்திற்கு முன்பாக அரசுப் பணியில் இருக்கும்போதே இறந்துவிட்டார். அதனால் எனது தாய் தற்போது ஓய்வூதியம் பெற்றுவருகிறார். அந்த ஓய்வூதியத்தில் என தாய் 2010ம் வீடு கட்டினார்.

தற்போது என் தாய் அந்த வீட்டை என் தம்பிகள் இருவர் பெயரிலும் எழுதி வைக்கப்போகிறேன். என் பெயரில் உள்ள சொத்தை உனக்குத் தர மாட்டேன் என்கிறார். என் தாயின் பெயரில் உள்ள சொத்தில் பங்கு கேட்க எனக்கும் என் சகோதரிகளுக்கும் உரிமை உள்ளதா? இரண்டு வருடத்திற்கு முன்பு என் தாய் என் தம்பிகள் இருவர் பெயரிலும் உயில் எழுதி வைத்து ரத்தும் செய்துள்ளார். மீண்டும் அவர்கள் இருவர் பெயரிலும் உயில் எழுதி வைக்கப்போகிறேன் என்கிறார். என்ன செய்ய வேண்டும்?

- பாரதி, சஙகரன்கோவில்

உங்கள் தந்தை இறந்த பிறகு அவரது இறப்பினால் உங்கள் தாயாருக்குக் கிடைத்துவந்த குடும்ப ஓய்வூதியத்தினை வைத்து உங்கள் தாயாரால் கட்டப்பட்டிருந்த வீடாக இருந்தாலும் அந்த வீட்டில் பங்கு கேட்க உங்களுக்கோ அல்லது உங்கள் சகோதரிகளுக்கோ சட்டப்படி உரிமை இல்லை. அந்த வீட்டினைப் பொறுத்து யாருக்கு ஆதரவாக வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்க உங்கள் தாயாருக்கு உரிமை உண்டு.

எனது தந்தையின் பெயரில் இருக்கும் விளை நிலத்தினை (தந்தை இறந்து விட்டார்) எனது தாயார் ஒரு நபரிடம் ரூபாய் 20,000-க்கு ஒத்திவைத்து 18 வருடம் ஆகிவிட்டது. வறுமை காரணமாக திருப்ப முடியாமல் இருந்தோம். இப்போது அந்த நபரிடம் பணத்தைத் தருகிறோம், சொத்தைக் கொடுங்கள் என்றால் ரூபாய் 1,00,000/- கேட்கிறார். அவர் அந்தச் சொத்தில் முப்போகம் பயிரிட்டு லாபம் அடைந்துள்ளார். என்ன செய்யலாம்?

- ந.சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை

உங்கள் தாயார் நிலத்தினை ஒத்திக்குக் கொடுத்துள்ள நபருடன் வாய்வழி ஒப்பந்தம் செய்துள்ளாரா அல்லது எழுத்து மூலமான ஒப்பந்தம் செய்துள்ளாரா என்ற விபரத்தையும், எழுத்து மூலம் ஒப்பந்தம் செய்திருந்தால் அந்த ஒப்பந்தம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்கிற விவரத்தையும் நீங்கள் தெரிவிக்கவில்லை. ஒப்பந்தம் எப்படி இருந்தாலும் நீங்கள் தகுந்த நீதிமன்றத்தில் அந்த ஒத்தியினைத் திருப்புவதற்கான பரிகாரம் கோரி வழக்கு தொடுக்கலாம்.

வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்குகேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in

தபாலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்),

கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை,

சென்னை - 600002

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x