Published : 22 Aug 2015 10:56 AM
Last Updated : 22 Aug 2015 10:56 AM
சொந்தமான நமக்கு என ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது நம் எல்லோருக்குமான விருப்பம். ஆனால் கட்டுமானத்துக்கு ஆகும் செலவை நினைத்துப் பார்த்தால் எல்லோருக்கும் வீடு கட்டும் ஆசை மனதுக்குள்ளே சுருண்டு கொள்ளும். இன்றைக்குள்ள நிலையில் நில மதிப்பு, கட்டுமானப் பொருள்களின் விலை ஆகியவற்றின் மதிப்பு கட்டுக்கடங்காமல் விண்ணில் பறந்துகொண்டிருக்கிறது.
வீடு கட்ட நினைக்கும் பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு கை கொடுப்பது வங்கிக் கடன்தான். அதனால் வீடு கட்டுவதில் எவ்வளவு சிக்கனமாக இருக்கிறோமோ அவ்வளவு நமக்கும் நல்லது. இல்லையெனில் கடன் மீறிக் கடனாக ஆகிவிடும் வாய்ப்புள்ளது. கட்டுமானச் செலவைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள் உள்ளன.
வட்டாரக் கட்டுமானக் கலை
வட்டாரக் கட்டுமானக் கலை இதற்கு உதவும். இந்தியாவின் முன்னோடிக் கட்டிடக் கலை அறிஞரான லாரி பேக்கர் இந்த முறையிலான கட்டுமானக் கலையை முதலில் இந்தியாவில் பரிசோதித்துப் பார்த்தவர். கட்டுமானச் செலவைக் குறைத்துச் சூழலுக்கு உகந்த வீடுகளை அவர் உருவாக்கினார். செலவைக் குறைப்பதில் முக்கியமான பங்கு கட்டுமானப் பொருள்களைக் கையாள்வதில்தான் இருக்கிறது. வட்டாரக் கட்டுமானக் கலை என்பது நாம் வீடு கட்டும் பகுதிக்கு அருகிலேயே கிடைக்கும் கட்டுமானப் பொருள்களைப் பயன்படுத்துவது என்பதுதான். இதுதான் பெருமளவில் செலவைக் குறைக்கும் ஒரு வழிமுறை.
வீடு கட்டப் பயன்படும் அடிப்படையான கட்டுமானப் பொருள்கள் செங்கல், மரம், கல் போன்றவை. வீடு கட்டுவதில் பிரதான செலவுகள் என்பவை கட்டுமானப் பொருள்களுக்கானவை. அதனால் கட்டுமானப் பொருள்களில் மாற்றுப் பொருள்களை உபயோகித்தா இந்தச் செலவைக் குறைக்க முடியும்.
என்ன மாதிரியான மாற்றுப் பொருள்கள்?
கட்டுமானக் கற்களைப் பொருத்தமட்டில் லாரி பேக்கர் சொல்வது நாம் கட்டிடம் எழுப்பும் இடத்துக்கு அருகில் கிடைக்கும் பொருள்கள பயன்படுத்துவது குறித்துதான். உதாரணமாகக் கருங்கற்கள் பூமிக் கடியில் கிடைக்கும் சில பகுதிகளில் அதைக் கொண்டே கட்டிடங்கள் எழுப்பலாம் என்கிறார். அதுபோல பாறைகள் அதிகமாக உள்ள இடங்களில் கற்களைக் கொண்டே வீடு கட்டலாம் என்கிறார். இப்போது மாற்றுக் கட்டுமானப் பொருள்கள், மறு சுழற்சி முறையில் தயாரிக்கப்படுகின்றன.
கான்கிரீட் சாலிட் ப்ளாக், கான்கிரீட் கேவிட்டி ப்ளாக், ப்ளை ஆஷ் செங்கல், சாய்ல் சிமெண்ட் ப்ளாக் ஆகியவை மாற்றுச் செங்கற்களாகப் பாவிக்கப்படுகின்றன. இத்தகைய மாற்று செங்கற்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பமும், இவற்றுக்கான மூலப் பொருட்களும் எளிதில் கிடைக்கக்கூடியதே. அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் கழிவுப் பொருட்களிலிருந்தே இவற்றைத் தயாரிக்க முடியும். இந்த மாற்றுச் செங்கற்கள் சுற்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிக்காது.
இத்தனை அனுகூலங்கள் இருப்பினும் அதிகமாக மாற்றுச் செங்கற்கள் பயன்படுத்தப்படாததன் காரணம் நமது மனநிலையே. மாற்றுச் செங்கல் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலேயே நாம் மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்த தயங்குகிறோம். இந்த மனநிலையைப் போக்க அரசு முயல வேண்டும். அரசுக் கட்டிடங்களின் கட்டுமானத்திற்கு மாற்றுச் செங்கற்களைப் பயன்படுத்தலாம். மாற்றுச் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்கலாம்.
இதே போல் செங்கல் உற்பத்தியாளர்கள் ப்ளை ஆஷ் செங்கற்களை உற்பத்தி செய்ய முன்வரும்போது அவர்களுக்கும் மானியம் வழங்க ஏற்பாடு செய்யலாம். இத்தகைய நடவடிக்கைகள் ப்ளை ஆஷ் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும், அவர்களின் விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பாக அமையும். ஏனெனில் ஏற்கனவே பில்டிங் ப்ளாக்ஸ் உருவாக்குவதில் செங்கல் உற்பத்தியாளர்களுக்கு முன் அனுபவமும் அவற்றை உருவாக்கத் தேவையான உள்கட்டமைப்பும் உள்ளன.
மணலின் மாற்று மணலாக கல்வெட்டும் ஆலைகளில் இருந்து பெறப்படும் தூளைப் பயன்படுத்துகிறார்கள். இது இப்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆற்று மணலை உள்பூச்சுக்கும், வெளிப்பூச்சுக்கு இந்த வகை தயாரிக்கப்படும் மணலையும் பயன்படுத்துகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT