Last Updated : 22 Aug, 2015 10:26 AM

 

Published : 22 Aug 2015 10:26 AM
Last Updated : 22 Aug 2015 10:26 AM

நம் குடியிருப்பில் முதியவர்களுக்கு இடம் இல்லை

ஷீலா பிரகாஷ், உலகின் முன்னணி கட்டிட பெண் வடிவமைப்பாளர்களின் ஒருவர். சென்னையின் முதல் கட்டிட வடிவமைப்பாளர் எனலாம். இந்திய அளவில் சொந்தமாகக் கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கிய முதல் பெண் இவர்தான். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்களை வடிவமைத்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபல் நகரத்தில் 1955-ம் ஆண்டு பிறந்தார். சென்னையில் பள்ளிக் கல்வியும் உயர்கல்வியும் பயின்றார். அண்ணா பல்கலைக்கழகக் கட்டிட வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் கல்லூரியில் பி.ஆர்க். பட்டம் பெற்றார். பிறகு கட்டிடத் துறையில் பயிற்சி பெற்று 1979-ம் ஆண்டு ஷில்பா ஆர்கிடெக்ட்ஸ் என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர் சிறந்த பரதநாட்டியக் கலைஞர். A Dancer's Dialog with Thanjavur Brihadeeswara என்னும் ஆவணப் படத்தையும் எடுத்துள்ளார். அவர் கட்டிடவியல் குறித்து அளித்த நேர்காணல் இது.

நம்முடைய பெரும்பாலான நகரங்கள் அதன் பாரம்பரியக் கட்டிடங்களால் அடையாளம் காணப்படுகின்றன. நமது புதிய பொதுக் கட்டிடங்கள் எதுவும் இதுபோன்ற சின்னமாக ஆகவில்லையே?

பொதுமக்களுக்கான கட்டிடங்கள் நமக்கு இல்லை என்பதுதான் அடிப்படைக் காரணம். இப்போது பொதுமக்களுக்காகக் கட்டிடங்கள் கட்டப்படுவதும் இல்லை. சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐ.நா. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. பொது இடங்களை எப்படி மக்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் நாம் தெருக்களை நேசிக்கிறோம். நம்முடைய தெருக்கள் குறுகலானவை. இந்தத் தெருக்கள் வாழ்க்கையால் நிரம்பியிருப்பது நம் எல்லோருக்கும் தெரிகிறது.

இப்போது தெருக்களை விட்டு மக்களை வெளியேற்ற வேண்டும் என நினைக்கிறோம். அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வதில்லை. இப்படியாக எல்லாவற்றையும் நாமாக உருவாக்கிக்கொள்கிறோம். இந்திய மனநிலையை, வாழ்க்கை முறையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிறகுதான் வடிவமைக்க வேண்டும்.

இந்த ஒழுங்கற்ற நகரத் திட்டமிடலைப் பார்க்கும்போது உங்களுக்கு ஏமாற்றம் ஏற்படுகிறதா?

இது சமயங்களில் ஏமாற்றம் அளிக்கக்கூடியதுதான். கடந்த முப்பதாண்டுகளில் நகரங்கள் வளர்ந்திருக்கின்றன; மக்கள் வருகையும் கூடியிருக்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது? நாம் முன்பே திட்டமிட வேண்டும்; ஒரு நிலையான திட்ட நடைமுறை நமக்குத் தேவை. இது சாத்தியமல்ல. ஒரு நகரம் பல்வேறு மனிதர்களைக் கொண்டிருக்கிறது. நாம் அவர்களின் விருப்பங்களுக்கு வழிவகை செய்ய வேண்டும்; அவர்களை ஒன்றிணைக்க வேண்டும். எல்லோருக்குமான நடுநிலையான, உள்ளடக்கிய ஒரு தீர்வை உருவாக்க வேண்டும். பொதுவாக நாம் சில குறிப்பிட்ட சமூகங்களை, பிரச்சினைகளை ஒதுக்குகிறோம். எந்த ஒருங்கிணைப்பும் நம்மிடம் இல்லை.

ஒரு உதாரண நகரத்தைச் சொல்ல முடியுமா?

நாம் வெகு தூரம் போக வேண்டியதில்லை. நம்முடைய மொகஞ்சதாரோ நகரத்தையே எடுத்துக்கொள்ளலாம். இது நகரத் திட்டமிடலுக்கான மிகச் சிறந்த உதாரணம். நாம் இதை இழந்துவிட்டோம். அநேகமாக இந்த மாதிரியிலிருந்து நாம் தொடங்கலாம். புது நகரங்களும் நகர்ப்புறங்களும் வரத் திட்டமிடப்பட்டுள்ளன. இன்று நாம் ஒரு நெருக்கடியான சூழலில் இருக்கிறோம். கட்டிட வடிவமைப்பாளர்களான நாம் வளர்ச்சிக்கான புளூ பிரிண்டை உருவாக்க வேண்டும். நமக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

கட்டிட வடிவமைப்பாளர்களுக்குச் சமூகப் பொறுப்புணர்வு தேவை என்கிறீர்களா?

நிச்சயமாக. ஏனெனில் கட்டிட வடிவமைப்பாளர்கள்தான், மக்கள் வாழும், வேலை பார்க்கும், வளரப் போகும், கடைசியாக இறக்கப்போகும் இடத்தை உருவாக்குபவர்கள். இயற்கைச் சூழலையும் வெளியையும் கடவுள் கொடுத்திருக்கிறார். நாம் சிறிய இடங்களைச் செதுக்கிறோம். அதில் சில சமயங்களில் குளறுபடி வருகிறது. இயற்கையின் தவறை யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள். ஆனால் கட்டிட வடிவமைப்பாளர்கள் உருவாக்கும் இந்தச் சிறிய இடங்களைக் குறித்துக் கண்டிப்பாகப் பேசுவார்கள். ஆகையால் கட்டிட வடிவமைப்பாளர்களின் பொறுப்பு மிக முக்கியமானது.

புதிய தலைமுறைக் கட்டிட வடிவமைப்பாளர்களுக்குச் சமூக-கலாச்சார பொறுப்புணர்வு குறித்து விழிப்புணர்வு இருக்கிறதா?

நமது நாட்டின் கலாச்சாரம், வரலாறு, பாரம்பரியம், அமைப்புகள் ஆகியவற்றைக் குறித்துப் புதிய தலைமுறைக் கட்டிட வடிவமைப்பாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தேவை இருக்கிறது. இன்று, ‘ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தில் எவ்வளவு கார்கள் நிறுத்த இடமளிக்க வேண்டும்?’ என்ற அரசாங்க ஆணை இருக்கிறது. ஆனால் எத்தனை படுக்கையறை இருக்க வேண்டும் என்பதற்கு ஆணை இல்லை. இதனால் குடும்பத்தில் உள்ள முதியவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். முதியவர்கள் கிராமத்திலேயே இருக்க வேண்டியதாகிறது. அல்லது அவர்கள் முதியவர்கள் காப்பகத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்.

நீங்கள் வடிவமைத்துக் கட்டிய முதல் கட்டிடம் எது?

என் முதல் அலுவலகம். நேரம் கிடைக்கும்போது வேலை பார்த்து 20 ஆயிரம் வரை சேமித்தேன். நாங்கள் அடையாறில் உள்ள ஒரு பங்களாவில் வசித்தோம். எங்கள் வளாகத்திலேயே நிறைய மரங்கள் இருந்தன. சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.11 அல்லது ரூ.12தான். 400 சதுர அடிக் கட்டிடத்தை உருவாக்கினேன். வட்டார முறையிலான கட்டிடக் கலையை நான் உணரும் தருணமாக அது இருந்தது.

பரதநாட்டியத்தையும் கட்டிடக் கலையையும் ஒப்பிடுங்கள்...

ஒரு நாட்டியக் கலைஞராக ஒரு சுற்றுச்சூழலை, காட்சியை உருவாக்க வேண்டும். அதற்குள் கதாபாத்திரத்தை வைக்க வேண்டும். இது உங்கள் பார்வையைத் தூண்டுகிறது. ஒரு கட்டிடக் கலைஞராக, நாட்டியக் கதைக் கோட்டுக்குள் நடப்பதுபோல என் கட்டிட இடங்களுக்குள் நடக்கிறேன். இரண்டுமே கோயிலிலிருந்து உருவாகுபவை. இரண்டுக்கும் ஒரு கோட்டுத் தன்மை உண்டு. நுண் உணர்வு எனக்கு நாட்டியத்தில் இருந்துதான் வந்தது. நாட்டியத்தில் சூழலும் கதாபாத்திரமும் கருத்தை உருவாக்குகின்றன. கட்டிடத்தில் வசிப்பவரின் கனவுகள் உருவாக்குகின்றன.

© ‘தி இந்து’ ஆங்கிலம்
சுருக்கமாகத் தமிழில்: ஜெய்குமார்



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x