Published : 22 Aug 2015 10:42 AM
Last Updated : 22 Aug 2015 10:42 AM

வளர்ப்புத் தாயின் சொத்தில் மகளுக்கு உரிமை உண்டா?

என் அம்மாவின் தந்தை வழிப் பாட்டியின் பெயரில் உள்ள இடத்திற்கு என் அம்மாவுக்கு உரிமை உள்ளதா? அம்மாவின் அம்மா மட்டும் உயிருடன் உள்ளார். அம்மாவுக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை உள்ளார்கள். சொத்து வரியை என் தாய் வழித் தாத்தா பெயரில் என் தாய்மாமா செலுத்திவருகிறார். உயில் ஏதும் இல்லாத நிலையில், சொத்தில் மூவருக்கும் (அம்மா, மாமா, சித்தி) உரிமை உள்ளது எனில் எந்த விகிதத்தில் பிரிக்கப்படும்?

- ரமேஷ் குமார், R. அமராவதி நகர்

உங்கள் அம்மாவின் தந்தைக்கு உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவலை நீங்கள் கூறவில்லை. உங்கள் அம்மாவின் தந்தை வழிப் பாட்டி எப்போது காலமானார் என்கிற தகவலையும் உங்கள் அம்மாவின் தந்தை எப்போது காலமானார் என்கிற தகவலும் நீங்கள் கூறவில்லை. நீங்கள் கொடுத்துள்ள தகவல்களை வைத்து சொத்தில் உங்கள் அம்மா, மாமா மற்றும் சித்தி ஆகியோருக்குப் பங்கு உள்ளதா என்கிற விவரமும் எவ்வளவு பங்கு உள்ளது என்கிற விவரம் கூற முடியாது.

எனது தாத்தாவிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு நான்கு பெண்கள் ஒரு ஆண் (வெங்கடேஷ்). இரண்டாவது மனைவிக்கு ஏற்கெனவே வேறு ஒருவருடன் கல்யாணம் ஆகி ஒரு மகன் உள்ளார். பிறகு அவர் எனது தாத்தாவை இரண்டாவது திருமணம் செய்து அதன் மூலம் ஒரு மகன் (ஜீவா) உள்ளார். எனது அக்காவை எனது தாத்தாவின் இரண்டாவது மனைவியின் மகனுக்கு (ஜீவா) திருமணம் செய்து வைத்தார்கள்.

எனது தாத்தாவிற்கு ஐந்து ஏக்கர் சொத்து உள்ளது. பெண் பிள்ளைகளுக்குத் தனியாகச் சிறிது நிலம் கொடுத்துள்ளார். இப்பொழுது இந்த இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் சொத்து பிரிப்பதில் சமபங்கு உள்ளதா, இல்லை முதல் மனைவியின் மகன் இரண்டாவது மனைவியின் மகன் என்ற பாகுபாடு இருக்குமா? விளக்குங்கள். (என்னுடைய அம்மா தாத்தாவின் இரண்டாவது மகள், என்னுடைய அக்கா சொந்த மாமாவை (ஜீவா) திருமணம் செய்துள்ளார், அவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் இரண்டு குழந்தைகள் உள்ளனர், வெங்கடேஷ் அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்)

- நவீன் ராஜ்

இரண்டு ஆண் பிள்ளைகளுக்கும் அவர்களின் நான்கு சகோதரிகளுக்கும் சொத்து பிரிப்பதில் சம பங்கு உண்டு. முதல் மனைவியின் மகன் இரண்டாவது மனைவியின் மகன் என்கிற பாகுபாடு கிடையாது. உங்கள் கேள்வியில் தேவையான விவரங்களும் தெளிவும் இல்லாததால் வேறு எந்த விளக்கமும் தர இயலவில்லை.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக ஒதுக்கீடுசெய்யப்பட்ட ஒரு இடத்தை அதன் உரிமையாளர் 2005-ல் எங்களுக்கு விற்பனை செய்தார். அந்த நிலத்துக்கான பவர் மட்டுமே எழுதி பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு வேறு எந்தப் பத்திரப் பதிவும் கிடையாது. அரசாங்கம் ஒதுக்கீடு செய்த ஆவணம் மட்டுமே உள்ளது. அதுவும் உரிமையாளரின் பெயரில்தான் உள்ளது. பவர் அளித்த உரிமையாளர் இறந்துவிட்டார். அவரது இறப்புச் சான்றிதழ் எங்களிடம் உள்ளது. இப்போது அந்த இடத்தை வேறொருவருக்கு எப்படிப் பத்திரப் பதிவு செய்வது?

- சங்கரநாரயணன்

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சொத்தினை, அந்த ஒதுக்கீட்டுதாரர் தனது பெயரில் விற்பனைப் பத்திரம் வாங்கும் முன்பு வேறு யாருக்கும் விற்க அவருக்கு உரிமை கிடையாது. அதனால் அவர் உங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அந்தச் சொத்தினை விற்பனை செய்ய உங்களை அதிகார முகவராக நியமித்த அதிகார ஆவணம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல. தற்போது அந்த ஒதுக்கீடுதாரர் இறந்து போய்விட்ட நிலையில் அந்தச் சொத்தினை அவரது வாரிசுகள் மட்டுமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்திலிருந்து கிரையம் பெற்றுக்கொள்ள உரிமையுள்ளவர்கள் ஆவார்கள். ஆகவே நீங்கள் தற்போது அந்தச் சொத்தினை வேறு யாருக்கும் விற்பனை செய்யவோ அது சம்பந்தமாகப் பத்திரப் பதிவு செய்யவோ சட்டப்படி இயலாது.

என் தாத்தா சுமார் 65 ஆண்டுக்கு முன்பு அவரது மனைவி - எனது பாட்டி பிறந்த ஊரில் சொத்துகளை வாங்கியுள்ளார். என் தாத்தாவுக்கு என் தந்தை உட்பட இரண்டு ஆண் மக்கள், இரண்டு பெண் மக்கள். என் தந்தைக்கு ஏழு வயதாகும்போது என் தாத்தா இறந்துவிட்டார். அதன் பிறகு என் தந்தையின் தாய்மாமன் அதாவது எனது பாட்டியின் அண்ணன் குடும்பத்தைக் கவனித்துவந்தார். கடந்த 2000-ம் ஆண்டு அவரும் இறந்துவிட்டார். அதன் பிறகு அவரது மகன்கள் அதாவது என் தந்தையின் மாமன் மகன்கள் எங்களுக்குச் சொந்தமான நிலத்தைத் தர மறுக்கின்றனர். எங்களது நிலத்தை எப்படி மீட்பது?

- ப.மாணிக்கவாசகம், பெருமகளுர்

உங்கள் தாத்தா உங்களது தந்தையின் தாய்மாமனைச் சொத்தின் பாதுகாவலராக நியமித்ததின் அடிப்படையில்தான் அவர் சொத்தினை கவனித்துவந்தார் என்றும், உங்கள் தந்தையின் தாய்மாமனின் காலத்திற்கு பிறகு அவரது மகன்களும் சொத்தின் பாதுகாவலர்கள் என்ற அடிப்படையில்தான் சொத்தினை கவனித்துவருகிறார்கள் என்றும் உங்களால் நிரூபிக்க முடியும் எனில் நீங்கள் தகுந்த நீதிமன்றத்தை அணுகி வழக்கு தொடுத்து சொத்தினை மீட்டு எடுக்க முடியும்.

என் மனைவி (வயது 60) சிறு பிள்ளையாக இருந்தபோது அவளது தகப்பனார், பிள்ளை இல்லாத தன் தமக்கைக்கு அவளைப் பிள்ளையாகக் கொடுத்து விட்டார். அதுபோல அவரது தங்கையும் தனது மூத்த மகனை அக்காவுக்குப் பிள்ளையாகக் கொடுத்து விட்டார். இருவரும் வளர்ந்து திருமணம் முடிந்து குடும்பம் பிள்ளைகள் என்றாகிவிட்டனர். இதற்கிடையே மூத்த அக்காவின் கணவர் காலமாகிவிட்டார். அவரது மாமனார் அவருக்குச் சில சொத்துக்கள் வழங்கியிருந்தார்.

தன் வளர்ப்புத்தாய் நோயுற்ற நிலையில் இருந்தபோது அவரைப் பராமரித்துக் கொண்டிருந்த அந்த வளர்ப்பு மகன் சொத்துக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று என் மனைவிக்கு எந்தப் பங்கும் தராமல் தானே எல்லாவற்றையும் அனுபவித்தார். கேட்பவர்களிடம் இறந்தவர் அனைத்து சொத்துக்களையும் தன் பெயருக்கு உயில் எழுதிவிட்டதாகக் கூறியுள்ளார். அண்மையில் அந்த வளர்ப்புத் தாயும் காலமாகிவிட்டார். தற்போது சொத்துக்களை இவர் ஏற்கெனவே தன் வளர்ப்புத் தாயிடம் இருந்து இவர் கிரயமாக எழுதி வாங்கியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

இந்தச் சொத்துக்களில் என் மனைவிக்குப் பங்கு கிடைக்குமா. மேலும் அந்த வளர்ப்புத் தாயாரின் நகைகளையும் இந்த மகன் தன் மனைவிக்கே பூட்டியுள்ளார். இதிலும் என் மனைவிக்கு பங்கு கிடைக்குமா?

- அமல்ராஜ் மாரிதாஸ்

உங்கள் மனைவியின் வளர்ப்புத் தாயாருக்கு அவரது மாமானாரால் வழங்கப்பட்ட சொத்தினை அவர் விருப்பம்போல் என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமையுண்டு. அவரது காலத்தில் அவர் அந்தச் சொத்துக்களைத் தனது வளர்ப்பு மகனுக்கு கிரையம் செய்துகொடுத்திருக்கும் பட்சத்தில் அந்தச் சொத்துகளில் உங்கள் மனைவிக்கு எந்தப் பங்கும் கிடைக்காது. உங்கள் மனைவியின் வளர்ப்புத் தாயாரின் நகைகளை அவர் தனது வளர்ப்பு மகனுக்கு கொடுத்துள்ளதால் அந்த நகைகளிலும் உங்கள் மனைவிக்கு எந்தப் பங்கும் கிடைக்காது.

வீடு, மனை வாங்குவதில், விற்பதில் உள்ள சட்டம் தொடர்பான உங்கள் சந்தேகங்களுக்கு/கேள்விகளுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.பி.விஸ்வநாதன் பதிலளிக்கிறார்.

அஞ்சலில் அனுப்ப: சொந்த வீடு, தி இந்து (தமிழ்),
கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002
கேள்விகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்: sonthaveedu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x