Published : 14 Mar 2020 11:59 AM
Last Updated : 14 Mar 2020 11:59 AM
ஜி.எஸ்.எஸ்.
‘கீழோர் எல்லாம் கீழோர் அல்லர். மேலோர் எல்லாம் மேலோர் அல்லர்’ என்கிறது ஓர் வழக்கு. செல்வத்துக்கும் ஒழுக்கத்துக்கும் தொடர்பில்லை என்பதை அது கூறுகிறது. ஆனால், இன்றைய நகர அடுக்குமாடிப் பண்பாட்டில் அதற்கு வேறு சில அர்த்தங்களைக் காணமுடியும்.
பத்து மாடிகள் கொண்ட ஓர் அடுக்ககத்தில் முதல் மாடியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்கிய ஒருவர் இப்படிக் குறிப்பிட்டார்: “எதிரிலேயே ஒரு பூங்கா உண்டு. என் வீட்டு பால்கனியிலிருந்தே அதைப் பார்த்து ரசிக்க முடியும் என்று இந்த வீட்டைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால், அதன் மறுகோணத்தைப் பார்க்க மறந்து விட்டேன். பூங்காவுக்கு வருபவர்கள் அங்கிருந்து பார்க்கும்போது என் வீட்டு பால்கனி மட்டுமல்ல, கூடம், அறை போன்றவையெல்லாம்கூட புலப்படுகின்றன. இதனால் எப்போதும் திரை போட்டே வைக்க வேண்டி இருக்கிறது. வீட்டுக்குள் வெளிச்சம் குறைந்துவிடுகிறது’’.
எட்டாம் தளத்தில் உள்ள வீட்டை வாங்கிய வேறொருவர் தன் ஆதங்கத்தை இப்படிப் பகிர்ந்து கொண்டார்: “கொசு இருக்காது என்கிற நம்பிக்கையில்தான் இந்தத் தளத்தில் வீட்டை வாங்கினேன். கொசு கிட்டத்தட்ட இல்லைதான். ஆனால், ஒருமுறை லிஃப்ட் இயங்காமல் போய்விட்டது. அன்று பார்த்து ஆறு முறை கீழும் மேலுமாகச் செல்ல வேண்டிய நிலை. ஒரு நாளில் சரி செய்து விட்டார்கள். என்றாலும், அந்த நாளில் நான் பட்ட அவஸ்தை ஏராளம். கீழ்த்தளத்திலேயே வீடு வாங்காமல் போனோமே என்று எண்ணினேன்’’.
ஆக, உலகின் பெரும்பாலான விஷயங்களுக்கு இருப்பதைப் போல் எந்தத் தளத்தில் வீடு வாங்குவது என்பதிலும் இரண்டு பக்கங்கள் உள்ளன. பலமாடிக் கட்டிடத்தில் எந்தத் தளத்தில் உள்ள வீட்டை வாங்குவது சிறந்தது என்பதில் குழப்பம் ஏற்படுவதுண்டு. இது தொடர்பாக ஒரு முடிவை எடுப்பதற்கு முன் பல கோணங்களில் இதை அணுக வேண்டியது அவசியம்.
தெற்குப் புறத்தைப் பார்த்தபடி பால்கனி இருந்தால் காற்று நன்றாக வரும் என்பது உண்மைதான். என்றாலும், தெற்குப் புறம் பால்கனி அமைந்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் வசிப்பவர் “வெயில் எக்கச்சக்கமாக பால்கனியில் விழுது. தவிர எதிரே உள்ள தெருவில் ஒரு நீண்ட சுவரும் டிரான்ஸ்பார்மரும் இருக்கின்றன. பலரும் காலைக்கடன்களை அந்தப் பகுதியில் கழிக்கிறார்கள். இந்தத் தரிசனத்தைக் காணவா பல லட்சங்கள் கொடுத்து இந்த வீட்டை வாங்கினேன்?’’ என்று புலம்பினார்.
மேல் தளத்தில் திருட்டுகள் நடக்க வாய்ப்பு குறைவு. விற்பனைப் பிரதிநிதிகளின் நச்சரிப்பு குறைவு. மொட்டை மாடிக்குப் போவதற்கோ நண்பர்களுடன் கூடிப் பேசுவதற்கோ மேல்தளத்தில் இருப்பவர்களுக்கு எளிது. அக்கம்பக்கத்து வீடுகள் மிக உயரமாக இல்லை என்றால் மேல் தளங்களில் உள்ள வீடுகளுக்குச் சூரிய ஒளி அதிகமாகக் கிடைக்கும்.
இதைக் கூறியவுடன் “நியாயம்தான். ஆனால், வீடு மாற்றும்போது நான் மிகவும் சிரமப்பட்டேன். ஆறாம் மாடிக்கு என் அறைக்கலன்களையும், ஏ.சி, வாஷிங் மிஷன் போன்றவற்றை ஏற்றுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இவற்றில் சில லிஃப்டுக்குள் அடங்கவில்லை. படிகளும் குறுகல். ஒரு கட்டத்தில் இவற்றை ஏற்ற முடியாது என்றே வேலையாட்கள் கூறிவிட்டனர். பால்கனி வழியாகச் சிலவற்றை ஏற்றியபோது கீழே உள்ள வீட்டில் அவை லேசாக இடித்து முதல் நாளே அடுக்ககத்தில் எதிரிகளைச் சம்பாதிக்க நேர்ந்தது’’ என்றார்.
மேல் தளத்தில் வசிப் பவர்களுக்குத் தாங்கள் கொஞ்சம் உரத்துப் பேசினால் பக்கத்து வீடுகளுக்கு எல்லாம் கேட்டு விடுமோ என்ற கவலை வேண்டாம். அவ்வளவாகக் கேட்காது. தான் விரும்பிய தளத்தில் தனக்கு வீடு கிடைக்கவில்லை என்பவர்கள் உரிய மாற்று வழிகளை நாட வேண்டும். கீழ்த் தளங்களில் உள்ளவர்கள் கனத்த திரையைப் போட்டுக்கொள்ளலாம்.
“விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அனுமதியில்லை’’ என்ற அறிவிப்பை மாட்டலாம். எனக்குத் தெரிந்த ஒருவர் பிற அடுக்குமாடிக் குடியிருப்பு வாசிகளைப் பற்றிய விவரங்களை அறியவும், நீங்கள் செல்ல வேண்டிய வீடு எங்கு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும் தயவுசெய்து எங்கள் வீட்டு அழைப்பு மணியை அடிக்காதீர்கள், என்று அறிவிப்பு வைத்திருக்கிறார். கொஞ்சம் மனிதாபிமானம் இல்லாததுபோலத் தோன்றினாலும் அவரது கடந்த காலக் கசப்பான அனுபவம் இப்படி செய்ய வைத்து விட்டது.
“எட்டு மாடி ஃப்ளாட்டில் எட்டாம் தளத்தில் நான் வசிக்கிறேன். கோடை வெயில் என்றாலும் வீட்டில் இறங்குமே என்று கவலையைத் தெரிவித்தபோது, கட்டுநர் ஒருவித ரசாயனப் படலத்தைப் பூச வைத்தார். இப்போது வெயில் வீட்டுக்குள் உறைப்பதில்லை’’ என்றார் ஒருவர்.
ஆக, எந்தத் தளத்தில் உள்ள வீட்டைத் தேர்ந்தெடுத்தாலும் நன்மை, தீமை இரண்டும் உண்டு. நீங்கள் எதுபோன்ற கோணங்களில் அதிக முக்கியத்துவம் செலுத்துகிறீர்களோ அதற்கேற்பத் தளத்தைத் தீர்மானிக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...