Published : 08 Aug 2015 12:01 PM
Last Updated : 08 Aug 2015 12:01 PM
அம்மாவுக்கு வீடு என்பது நீண்ட நாள் கனவாகவே இருந்துவந்தது. வேலைக்குச் சேர்ந்த நாள் முதல் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தபோதும் கிட்டத்தட்ட அவர் ஓய்வுபெறும் வயதில், அப்பா ஓய்வுபெற்ற பின்னர்தான் அவரது ஆசை நிறைவேறியது. நாங்கள் பல வாடகை வீடுகளில் வசித்துவந்திருக்கிறோம். அந்த வாடகை வீடுகளைக்கூட அம்மா சொந்தவீடு போல் பாவித்துப் பராமரிக்கும் பழக்கம் கொண்டவர். என்றபோதும் பார்த்துப் பார்த்துக் கட்டிய சொந்தவீட்டில் குடியேறியபோது அவர் அடைந்த நிம்மதிக்கு நிகரே இல்லை.
அதன் ஒவ்வொரு பகுதியும் அவரது பிரியத்துக்கு உகந்ததாகவே எப்போதும் இருக்கிறது. அந்த வீடு எங்கள் வீடு என்ற ஒரு ஒட்டுதலைக் கொண்டுவந்தது. வீடு என்பது வெறும் செங்கல்லும் சுவருமல்ல அது உறவுகளைப் பிணைத்துவைக்கும் பாசவெளி என்பது புரிந்தது. வீட்டின் ஒவ்வொரு அறையையும் அமைக்கும் முன்பே எங்கள் கற்பனையில் அதை உருவாக்கி அதற்கு உருவம் கொடுக்கும்படி பொறியாளரைப் படாதபாடு படுத்திக் கட்டிய வீடு அது.
ஆகவே அதன் அனைத்துப் பகுதியும் எங்கள் பிரியத்தின் வரம்புக்குள்ளேயே இருக்கிறது. ஆனாலும் மிகப் பிடித்த பகுதி என்று கேட்டால் எங்கள் வீட்டின் மொட்டை மாடியைத் தான் என்னால் சொல்ல முடிகிறது. வீடு என்பது பாதுகாப்பு தருவது என்றால் மொட்டை மாடி சுதந்திரமானதாகத் தெரிகிறது. காலடியில் பாதுகாப்பான வீடும், கண்ணெதிரே பரந்த வெளியும் தலை நிமிர்ந்தால் தென்படும் நீல நிற வானும் என அது தரும் சுகம் தனி ரகம்.
எங்கள் வீட்டு மொட்டை மாடியில் போய் நின்றால் போதும் பொதிகை மலையில் புறப்பட்டு வரும் குளிர்ந்த காற்று மேனியின் நலம் விசாரிக்கும். அங்கே இருந்து பார்க்கும்போது கண்ணெதிரே ஆஜானுபாகுவான உருவமாகக் குற்றால மலை தென்படும். ஏதோ ஒரு பாதுகாப்பு அரண் போல அது தோன்றும். மனம் பாரம் கொள்ளும் போதெல்லாம் நேரம் போவதே தெரியாமல் அந்த மலையைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
மலையைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் போதே மனக்கலக்கம் எல்லாம் பஞ்சு பஞ்சாக உதிர்ந்து வானத்தில் மேகங்களாக நகர்ந்து செல்வதைப் போல் தோன்றும். வீட்டுக்கு வந்த புதிதில் அந்தப் பகுதியில் அதிக வீடுகள் வந்திருக்கவில்லை. ஆகவே மொட்டை மாடியில் மெல்லிய நிலவொளி பாயும் இரவு வேளைகளில் இருக்கும்போது இரவின் அமைதியைக் கிழித்தபடி ஒலிக்கும் பூச்சுகளின் சத்தம் ஒருவித அமானுஷ்ய தன்மையைக் கொண்டுவரும்.
தினமும் ஒருமுறையாவது மொட்டை மாடிக்குச் செல்லவில்லை என்றால் மனம் ஏதோ ஒன்றை இழந்ததுபோல் ஆகிவிடும். அதுவும் நண்பர்களுடன் மொட்டை மாடியில் ஒன்று சேர்ந்து போடும் கொட்டத்துக்காகவே அந்த மொட்டை மாடியை வாழ்வு முழுவதும் வாழ்த்திக்கொண்டே இருக்கலாம். வீட்டின் பிற பகுதிகளைவிட மொட்டை மாடி தந்த ஆசுவாசமும் இனிய நினைவுகளும் அதிகம்.
கோடை காலங்களில் கூழ் வடகம் போடுவதற்காக அம்மா காலையிலேயே மொட்டை மாடிக்குச் சென்றுவிடுவார். நாங்களும் அவருக்கு ஒத்தாசை செய்வதைப் போல பேர் பண்ணிக்கொண்டு அவருடன் கதை பேசிக்கொண்டே பொழுதைக் கழிப்போம். இப்படி ஒன்றல்ல ரெண்டல்ல பல கதைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். எப்படியோ பிரியத்துக்குரிய வீட்டின் பிரியமான பகுதியாக மொட்டை மாடியே நினைவிலாடுகிறது.
எனக்குப் பிடித்த வீடு
இந்தப் பகுதியில் நீங்களும் பங்களிக்கலாம். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பிடித்த பகுதி ஒன்று இருக்கும். மன இறுக்கமாக உள்ள வேளைகளில் உங்களை இளைப்பாற்றும் உங்கள் ஊஞ்சலைப் பற்றி எழுதலாம். நீங்கள் நிதானமாக அமர்ந்து தேநீர் அருந்தும் பால்கனியைப் பற்றி எழுதலாம். வீடு என்பது செங்கற்களால் ஆன கட்டிடம் அல்ல. வாழ்க்கை என்பதன் திரு உருவம். இதை எடுத்துரைப்பதே இந்தப் பகுதி.
உங்கள் வீட்டின் பிடித்த பகுதியின் புகைப்படத்துடன் உங்கள் புகைப்படத்தையும் சேர்த்து எங்களுக்கு அனுப்புங்கள்.
அனுப்ப வேண்டிய முகவரி:
சொந்த வீடு, தி இந்து, கஸ்தூரி மையம்,
124, வாலாஜா சாலை, சென்னை-600 002.
மின்னஞ்சல் முகவரி: sonthaveedu@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT